Tuesday, September 20, 2005

இது என் புராணம்

யாழ்ப்பானத்துக் கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம் இப்படி யாராவது யாழ்ப்பாணத்தவர் பெருமையடிச்சுக் கேள்விப்பட்டிருக்கிறியளோ?

ஊர்ப்பெருமை பேசுவதற்கு மற்றெந்த ஊர்க்காரரையும் விட குறைந்தவர்கள் இல்லை.யாழ்ப்பாணத்தார் அதாவது நாங்கள்.அப்படி எங்கள் ஊரைப்பற்றி நாங்களே பெருமையாச் சொல்லிக்கொள்ளுற ஒரு விசயம் எங்கடை கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம்.

உன்னிப்பாப் பார்த்தால் இதிலை கலாச்சாரமும் இல்லை ஒரு மண்ணுமில்லை.வாழையடி வாழையாக கந்தபுராணம் வீடுகளில் படிக்கப்பட்டு வந்தது.அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சி கந்தபுராணக் கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது.அவ்வளவுதான் என்பது புரியும்.ஏதோ கந்தபுராணம் படிச்சு அதைப் போலவே வாழ்க்கை நடத்தினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்

ஆனால் தமிழை வளர்க்கிறதிலையும் சைவ சமயத்தை வளர்க்கிறதிலையும் கந்தபுராணப் படிப்புச் செலுத்திய செல்வாக்கு குறைச்சு மதிப்பிட முடியாதது.

மூன்று நான்கு தலைமுறையளுக்கு முந்தி படிப்பெண்டா உத்தியோகத்துக்கு மட்டுமே என்றிருந்த காலத்திலை.நாலெழுத்தாவது படிக்கவேணும் என்ற தூண்டுதலுக்கு கந்தபுராணாம் காலாக இருந்திருக்கிறது.கந்தபுராணம் படிச்சுப் பொருள் சொல்லத் தெரிந்தவன் ஊருக்குள்ளை நாலெழுத்துப் படிச்சவன் என்ற மதிப்பைப் பெறுவான்.அந்த மதிப்பின் பொருட்டு ஊருக்குள்ளை வாற பிரச்சனையளுக்கு தீர்வு சொல்லுறதிலை இருந்து அரசாங்க உத்திரவுகளைப் படிச்சுக் காட்டுறதுவரை உந்த புராணம் படிக்கிறாக்களிட்டையே எல்லாரும் வருவினமெண்டு அம்மம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.

யாழ்ப்பாணத்துப் பழைய வீடுகளை யாராவது பார்த்திருப்பியள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பியள்.குடிசைகள் வீடான நேரத்திலை கட்டப்பட்டவை அனேகமாக நாச்சார் வீடுகள் தான் நடுவிலை முற்றம் வைச்சு சுற்றி வரக் கட்டப்பட்ட வீடுகள்.

முற்றத்துக்கு நாற்புறமும் அரைச்சுவருடன் கூடிய திண்ணை இருக்கும்.
இதைத் தவிர வீட்டுக்கு வெளியிலும் வாசற்படிக்கருகில் திண்ணை கட்டியிருப்பார்கள் இந்தத் திண்ணைகள்தான் புராண படனத்துக்குரிய இடம்.திண்னையை அண்டிய சுவற்றில் மாடங்கள் கட்டப்பட்டிருக்கும் அதுதான் புத்தகம் வைக்கிற இடம்.சிலர் அந்த மாடத்துக்குள்ளை விளக்கும் ஏற்றி வைச்சிருப்பினம்.

நாங்கள் பிறந்த நேரத்திலை இப்படியான வீடுகளும் அருகி புராணப் படிப்பும் அருகிப்போய்விட்டாலும் அப்படி ஒரு வீட்டை நான் பார்த்திருக்கிறன்.அந்த வீட்டை வாத்தியார் வீடு என்பார்கள்.ஆனால் அந்த வீட்டில் யாரும் ஆசிரியராக இருந்ததில்லை.காலம் காலமாக கந்தபுராணம் படித்து பொருளும் சொல்லி அதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்ததால் அது வாத்தியார் வீடாகிவிட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக புராணப் படிப்பு நடக்கும் இடங்கள் சிலவற்ரைக் கடந்துதான் சிறுவயதில் படிக்கப்போவது வழக்கம்.

அப்படிப் போற நேரத்தில் கந்த புராணதினாலோ அல்லது பாடுபவராலோ கவரப்பட்டு நானும் இருந்து கேட்க ஆரம்பித்தேன்.

புராணம் பாடுபவரைப் பார்த்தாலே பக்தி தன்பாட்டிலை பெருக்கெடுக்கும்.தண்ணீரிலை குழைச்சுப் பூசிய மூன்று திருநீற்றுக் குறி நெற்றியிலை பளிச்செண்டு இருக்கும்.நடுமத்தியிலை சந்தனம் குங்குமம் பொட்டு.

அதே மாதிரி மார்பிலையும் நீறும் சந்தனமும் இட்டிருப்பார்கள்.காதில் ஏதாவது பூ இருக்கும்.நான் பார்த்த இடத்தில் பாடுபவர் இரண்டு காதிலும் இரண்டு செவ்வரத்தப் பூக்களை வைத்திருப்பார்.அந்தப் பூவுக்கும் அவரது குரலுக்கும் சேர்த்து நாங்கள் வைத்த பெயர் லவுட்ஸ்பீக்கர்.அப்படியான கணீர்க் குரலிலே அவர் பாட ஆரம்பித்தால் நேரத்தை மணிக்கூடு பார்க்காமலே சொல்லிவிடலாம்.அப்படியொரு நேரந்தவறாமையை அதிலே கடைப்பிடித்தார்கள்.

பாடுபவருக்கு முன்னாலே விளக்கொன்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும்.புத்தகத்தை வைத்து முதுகு வளையாமல் படிப்பதற்காக ஒரு சிறிய பீடமொன்றை வைத்திருப்பார்கள்.எதிரில் பொருள் சொல்லுபவருக்கும் அதே மாதிரியான வசதி இருக்கும்.

முதலில் பாடுபவர் ராகம் போட்டு ஒரு செய்யுளைப் படிப்பார்.எந்தவிதப் பிசிறும் இல்லாமல் பொருள் விளங்கி உச்சரிப்புப் பிழையின்றி படிப்பதைக் கேட்பதே தனி சுகம்.அவர் முடித்ததும் பாட்டின் முதலடியை ராகத்தோடு மறுபடியும் பாடி நிறுத்துவார்.இப்போது பொருள் சொல்பவர் அதே மாதிரி ராகத்தில் நீட்டி முழக்கி பொருள் சொல்லுவார்.பாதிப்பாட்டுக்கள் அனேகம் பேருக்கு பாடம் என்கிறபடியால் புத்தகம் பார்க்காமல் பொருள் சொல்லுவார்கள்.

ஒரு கூட்டம் ஆண்களும் பெண்களும் சுற்றிவர இருந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.அவர்கள் தானென்றில்லை அந்தத் தெருவால் போறவர்களும் காலாற இருந்து புராணப் படிப்புக் கேட்ட்பதுண்டு.

இப்படி பாடுறதைக் கேட்டு மட்டும் கொண்டிருந்த எனக்கு பாடுறதுக்கும் சந்தர்ப்பம் வந்துது.ஆனால் அது கந்தபுராணமில்லை பிள்ளையார் புராணம்.கார்த்திகை மாதம் இருபத்தியொருநாள் விநாயகசஷ்டி விரதமிருப்பார்கள்.அந்த நேரம் விரதமிருப்பவர்களுக்கு விநாயக புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லவேண்டும்

வழக்கமாகப் பாடுபவ்ர்களின் இறப்பு எங்கடை தலைமுறையை உள்ளே கொண்டுவந்தது.வழக்கமாகப் பாடும் வயதான ஐயாவுடன் நானும் போய் இருந்தால் சபையே என்னை விசித்திரமாகப் பார்த்துச்சுது.எனக்கு குரலெல்லாம் நடுங்கி அழுகைவாறமாதிரி ஆகிப்போச்சுது.முதலே கொஞ்சம் படித்து வைத்திருந்ததாலை தட்டித் தடக்கி முதற்பாட்டை வாசிச்சு முடிச்சன்.என் ராகம் எனக்கே கேட்கச் சகிக்கேலாமல் இருந்துது இரண்டு மூன்று நாளிலை எனக்கு ராகம் பிடிபட்டுப் போச்சு.

அதுக்குப் பிறகென்ன பாவம் விரதமென்று சொல்லி பசியோடிருப்பவர்களை வாட்டு வாட்டென்று வாட்டியதுதான் நான் செய்ததெல்லாம்.

பாட்டெல்லாம் முடிய பாடியதற்குச் சன்மானமாய் பழமும் மோதகம் வடை பொங்கலும் தருவார்கள் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டியதுதானே வேறென்ன வேண்டும்.

என்னதான் விநாயக புராணம்,திருவாதவூரடிகள் புராணம் சித்திரகுப்தர் புராணமென்று படிச்சாலும் கந்தபுராணம் மீது ஆர்வம் போகவில்லை. கந்தபுராணம் படிக்க கொஞ்சநாள் தான் சந்தர்ப்பம் கிடைச்சது அதுக்குப் பிறகு படிக்க ஆளில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது படிக்கப்பட்டும் நாட்களும் படிப்பதற்கு ஆட்கள் பயந்ததற்குக் காரணம்.கிட்டத்தட்ட ஆறுமாதமாகும் முழுப்புராணத்தையும் படிச்சு முடிக்க.திரும்ப ஆறுமாதம் லீவு பிறகு திரும்பவும் ஆரம்பமாகும்.

இப்படியாக படிக்கும் வழக்கம் ஒருத்தரிலை இருந்து ஒருத்தருக்குப் பரவியதும் அதையொட்டி பலர் தமிழ் படித்துப் பண்டிதர்கள் ஆனதையுமே கந்தபுராணக் கலாச்சாரம் என்கிறார்கள் என நினைக்கிறேன்

கந்தபுராணம் கலாச்சாரமோ இல்லையோ செந்தமிழின் இனிமையை இண்டைக்கும் நாவிலினிக்கும்படி ஊற்றிவிட்டிருக்கிறது.ஞாபகத்திலிருக்கும் பாடல்களை சொல்லிப் பார்க்கும் போது அந்த ராகமும் அப்படியே நெஞ்சில் நிற்கிறது

(ஊர்க்கதைகளைச் சுவைபடச் சொல்லும் வசந்தனுக்கும்.ஊர்க்கதையென்றாலே ஆவென்று கேட்கும் மதிக்கும் இது சமர்ப்பணம்)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

22 Comments:

At 9:33 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு.
எனக்கெல்லாம் சமர்ப்பணம் செய்து பெரிய மனுசராக்காதையுங்கோ.
உந்தப் பழையகால வீடுகள் பற்றி அறிய ஆவல். நான் பாத்ததுக்க மானிப்பாயில ஒண்டும் வட்டுக்கோட்டையில ஒண்டும் அளவெட்டியில ஒண்டுமெண்டு 3 வித்தியாசமான பழைய வீடுகள் பாத்திருக்கிறன்.
தட்சனா மருதமடுவில நான்பாத்த வீடுகள் வித்தியாசமானவை. கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே பழையவைதான். அந்த மக்களின் வாழ்க்கைமுறையும் வித்தியாசமானது.

 
At 9:49 PM, Blogger -/பெயரிலி. said...

(ஸ்)கந்த(ப்)புராண(க்)கலாசாரத்துக்கும் நாற்சார்வீட்டுக்கும் இப்பிடியும் ஒரு தொடர்போ? நல்ல பதிவு.

 
At 11:03 PM, Blogger கரிகாலன் said...

நன்றாக இருக்கிறது.தொடருங்கள்.

 
At 11:32 PM, Blogger இளங்கோ-டிசே said...

ஈழநாதன் புதிய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி. ஊரில் இருந்தபோது, பிரசங்கங்கள் சிலதைக் கேட்டிருக்கின்றேன். இப்படி பாடுவதும் பிறகு பொருள் சொல்வதும் கேட்டதில்லை. நாற்சார்மட வீடொன்றில் முதன்முதலாய் சங்கானைக்குப் பிரச்சினையின் நிமிர்த்தம் பெயர்ந்தபோது தங்கியிருக்கின்றேன். அதில் ஒரு அறை முழுவதும், நாங்கள் சேகரித்த (நானல்ல, எனது பெற்றோரும் சகோதரர்களும்) புத்தகங்களை நிரப்பி வைத்தது நினைவு. பிறகு கொழும்புக்கு வந்தபோது அதை அப்படியே விட்டு விட்டு வந்திருந்தோம். இப்போதும், நாற்சார்மட வீட்டை நினைத்தால் புத்தகங்களும், புத்தகங்களைப் பற்றி நினைத்தால் நாற்சார்மட வீடும் ஞாபகத்துக்கு வரும் :-(.

 
At 11:49 PM, Blogger -/பெயரிலி. said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:49 PM, Blogger -/பெயரிலி. said...

தமிழிலக்கியங்களை, புத்தகங்களை நினைத்தால், உங்களுக்குமட்டுமா நாற்சார்மடம் ஞாபகத்துக்கு வருமென்கிறீர்கள்? ;-)

 
At 12:04 AM, Blogger இளங்கோ-டிசே said...

//உங்களுக்குமட்டுமா நாற்சார்மடம் ஞாபகத்துக்கு வருமென்கிறீர்கள்? //
ப்ரோ அதையெல்லாம் விடுங்கோ :)). நாற்சார் மடத்துக்குள்ளை ஒன்றாய் இருந்தவையெல்லாம் புதுப் புதுக்கூட்டணி அமைத்துக்கொண்டு நாற்சார்மடத்தைப் பிறகு எண்சார்மடமாய் ஆக்கியதெல்லாம்.....:-(((

 
At 12:48 AM, Blogger காயத்ரி said...

nice article

 
At 1:06 AM, Blogger Thangamani said...

//ஏதோ கந்தபுராணம் படிச்சு அதைப் போலவே வாழ்க்கை நடத்தினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்//

குறவள்ளித் திருமணத்தைத் தவிர அதில் வாழ்க்கையில் நடத்த என்ன இருக்கிறது!
தமிழ் ஒரு பயனெனச் சொல்லலாம்!

 
At 1:07 AM, Blogger Thangamani said...

நல்லபதிவு

 
At 1:38 AM, Blogger -/பெயரிலி. said...

அதுதான் அண்ணா கம்பரரசம் எழுதியதையொட்டி, அதன் வழியிலே சாவகச்சேரி 'அண்ணா' இராசேந்திரம் 'கந்தரசம்' எழுதினாரோ?

 
At 1:51 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சமர்ப்பணம் அதுஇதெண்டெல்லாம் பயமுறுத்த வேண்டாம் ஈழநாதன்.

நல்ல பதிவு!

நாற்சார்வீடுகள் பற்றி ஒரு இணையத்தளம் இருக்கிறது. மத்தியகிழக்கில் இருப்பவர் ஒருவர் அமைத்திருக்கிறார். தமிழ் விக்கியிலும் ஈடுபடுகிறார் அவர். சுட்டியைத் தேடவேண்டும். பிறகு தாறன்.

-மதி

 
At 8:00 AM, Blogger ஒரு பொடிச்சி said...

'யாழ்ப்பாணமே ஓ..எனது யாழ்ப்பாணமே' நூலில் நிலாந்தனும் 'கந்தபுராணக் கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள்வரை' என்றுஎழுதியிருந்தார்!
'யாழ்ப்பாணத்தார்' இப்படிச் 'பெருமையடிச்சுக்'
கொள்வார்கள் என்று தெரியாது.
சுவாரசியமான பதிவிற்கு நன்றி.

 
At 8:37 AM, Blogger துளசி கோபால் said...

//நாற்சார்வீடு//

இதுதான் தமிநாட்டுலே சொல்ற நாலு கட்டு வீடா இருக்குமோ?

 
At 8:38 AM, Blogger துளசி கோபால் said...

தமிழுக்கே சிறப்பா இருக்கற ழ் விட்டுப் போச்சு.

ஸோரி...

 
At 2:01 PM, Blogger வசந்தன்(Vasanthan) said...

என்ன துளசி,
'ஸாரி' ய விட்டிட்டியள்?

 
At 2:59 PM, Blogger அன்பு said...

இது போன்று உன்னிடம் நிறைய கதைக்(கேட்)கணும்னு ரொம்ப நாள் ஆசை. தொடர்ந்து நிறையா எழுதுங்கோ...

எங்க ஊர்ல மழைவேண்டியோ, இன்ன பிற நாளிலோ - இரமாயாணம் போன்றவற்றை படித்து கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது முடிந்து 'பானக்கரம்' கொடுக்கும்போது மட்டும் போய் வாங்கிக்குடித்த ஞாபகம் வருகிறது:)

 
At 3:34 PM, Blogger G.Ragavan said...

படிக்கச் சுவைக்கும் அருமையான பதிவு. பழக்கவழக்கங்களும் மறந்து போன பண்பாடுகள் நினைக்க இனிப்பே. நீங்கல் இனிக்க இனிக்க நினைத்திருப்பது பதிப்பில் தெரிவது.

// குறவள்ளித் திருமணத்தைத் தவிர அதில் வாழ்க்கையில் நடத்த என்ன இருக்கிறது!
தமிழ் ஒரு பயனெனச் சொல்லலாம்! //

தங்கமணி, கந்தபுராணம் ஒரு ஞானநூல், அதில் கதை போல இருந்தாலும் கருத்துகள் பலவுண்டு. ஆழப்படித்தவருக்கே அது விளங்கும். அப்படி விளங்கியவரின் விரிவுரை மிகச்சிறப்பாக இருக்கும். நானும் கொஞ்சம் படித்திருக்கிறேன். வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளையும் ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன். அருமையாக இருக்கும்.

 
At 3:52 PM, Blogger ஜெயச்சந்திரன் said...

யாழ்ப்பாணத்தில் புராணம் படிப்பவர்களது எண்ணிக்கை அருகி விட்டதால், சைவ புலவர் சபை? ஒவ்வொரு இடத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு புராண படிப்பு வகுப்புக்களை ஒழுங்கு செய்து நடத்தியது தெரியும். தற்போதும் இருக்கிறதா தெரியவில்லை

 
At 8:20 AM, Blogger துளசி கோபால் said...

என்ன வசந்தன்,

இங்கேயுமா?

'ஸாரி'யைவிட்டுக் கனகாலம் ஆச்சே.

 
At 8:26 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி.இப்போது நான் ஊர் சென்றிருந்தபோது புராணப் படிப்பு வெகுவாக அருகிவிட்டதைக் கண்டேன் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோவிலில் மட்டும் படிக்கிறார்கள்

 
At 3:30 PM, Blogger ஜெயச்சந்திரன் said...

http://us.geocities.com/rmayooranathan/
இது தான் மதி சொன்ன யாழ்ப்பாண வீடு பற்றிய இணைய பக்கம் என நினைக்கிறேன்

 

Post a Comment

<< Home