Monday, June 20, 2005

புலிகள் பற்றி ஜெயகாந்தன்

(ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (E.P.R.L.F)தலைவர் பத்மநாபாவும் மேலும் இயக்க தோழர் தோழியரும் 19-6-90 ஆம் திகதி சென்னையில் புலிகளால் கொல்லப்பட்டனர். அவர்கள் மரணமெய்தி 15 ஆண்டுகள் நிறைவெய்தும் இத்தருணத்தில் 1-9-90 அன்று சென்னையில் இம்பீரியல் ஹொட்டல் சிராஜ் மண்டபத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன் நிகழ்த்திய உரையைதேனியிலிருந்து இங்கே தருகிறேன்.எனது வலைப்பதிவை இரண்டுநாட்களாகக் காணவில்லை.தற்காலிகமாக புதிய பதிவு ஆரம்பிக்கும் வரை இங்கே எனது பதிவு.).

வன்முறை குறித்து நமக்கு ஆழமான ஒரு பார்வையும், அதிலேயிருந்து மக்களை விடுவிக்கின்ற ஒரு பண்பும் மனசார்ந்து வருகின்ற ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கின்றோம்.(அவர் வாழ்கின்ற சமுதாயம் வன்முறை இல்லாத அமைதிப் பூங்காவா இல்லை உள்ளே கணன்று வெளியே சாம்பல்பூத்த வன்முறை வாழ்க்கையா என்று சொல்ல விருப்பமில்லை)

ஆகவேதான் இந்த வன்முறைக்கு எதிரான சகல மக்களும் கொல்லப்படுவார்கள் என்பது அவர்களுடைய குறியாக இருக்கிறது. திரு.பத்பநாபாவும் அவர்களுடைய நண்பர்களும் ஆயுதம் ஏந்தியவர்கள்தான். அவர்களும் தனி ஈழத்துக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் ஆயுதம் தரித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற அரசியலை மேற்கொண்டவர்கள்தான்.(ஆனால் அதையே கடைசிவரைக்கும் செய்தார்களா என்று ஜெயகாந்தனைக் கேட்கப்போவதில்லை.சொந்த மக்களுக்காகப் போராடியவர்களின் துப்பாக்கி அதே மக்களுக்கெதிராகத் திரும்பிய கதையும்,தமது பெண்களையே வன்புணர்ந்த தோழர்கள் கதையும் ஜெயகாந்தனுக்குத் தெரியாதா என்ன அவர் சொல்ல மாட்டார் சொல்ல மாட்டார்)

எனினும் அவர்களுடைய பார்வை மேலும் தெளிவாக இருந்தது. அவர்கள் உலகளாவிய பார்வை உடையவர்களாகவும், இந்தியாவை நன்கு தெரிந்தவர்களாகவும், அதற்குமேல் இந்தியாவை நேசிப்பவர்களாகவும் இருந்ததினால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆயுதம் எடுத்ததனால் அல்ல வன்முறையை ஆதரித்ததால் அல்ல நியாயம் பேசியதாலும், தர்மத்தை உணர்ந்ததனாலும், இந்தியாவின் தன்மையை உணர்ந்ததினாலும் இந்திய பகைவர்கள் அவர்களை கொன்றார்கள். (இத்தால் சகலரும் அறிவது என்னவென்றால் வையத்துள் வாழ்வாங்கு வாழ இந்தியாவுக்கு வால்பிடிக்கவேண்டும்.பத்மநாபாவும் தோழர்களும் இந்திய வால்பிடிகளாக இருந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் இந்தியாவில் செய்த கொள்ளைகளையும் சூட்டுச் சம்பவங்களையும்.இலங்கையில் நிகழ்த்திய நரவேட்டையையும் நாங்கள் மறந்துவிடுவோம்)

அவர்களுக்குப் பெயரே - அவர்கள் மக்களின் பகைவர்களாகவும், இந்தியாவின் பகைவர்களாகவும், இரத்தவெறி பிடித்தவர்களாகவும், ஆயுதத்தை மட்டுமே நம்புகிறவர்களாகவும், அன்பை ஒழிப்பதற்காக ஆயுதம் தரித்த சைத்தான்களாகவும் அவர்கள் மாறியிருப்பது அவர்களுக்கு நல்லதில்லை என்று இந்த அஞ்லிக்கூட்டத்தில் நாம் அவர்களுக்கும் அனுதாபம் செலுத்திக் கொள்ள வேண்டும்.(ச்சொ ச்சொ)

தன்னையே கொல்லும் பகைமையை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை. அவர்கள் பேசுவதற்கு தயாராக இல்லை. அவர்களை ஆதரித்தவர்களை எல்லாம் அவர்கள் தங்கள் விரோதிகள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தலைமைக்கு எதிராக இன்னொரு தலைமை வந்துவிடுமென்றால் அந்த தலைமையை அடித்துக்கட்டுவதே அவர்களின் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த பாஷையில் இலங்கை இராணுவம் பேசிக்கொண்டிருக்கின்றது. அந்த பாஷைதானே அவர்களுக்குப் புரியும்.
(அவர்களும் அதே பாஷையில் இலங்கை இராணுவத்துடன் உரையாடியபடியால் தான் இன்று இலங்கை இராணுவம் பேசித்தீர்ப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது அன்புநிறை ஜெயகாந்தன் அவர்களே)

இந்திய இராணுவம் அங்கே எதனையும் அபகரித்துக் கொண்டு வரப்போகவில்லையென்று ஆயிரம் முறை சொன்னோம். அவர்களுக்கு இடிந்து போன வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும், தகர்ந்துபோன பாலங்களை கட்டித் தருவதற்கும், அழிந்து போன மின்கம்பங்களை இணைத்து அங்கே ஒளியேற்றுவதற்காகவும் அந்த மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்காகவும் 1500 இந்திய சிப்பாய்கள் உயிர்தந்தது எங்களுக்கு பொருட்டன்று.(அப்படியா.ஏற்கனவே இருந்த எத்தனை பாலங்கள் கட்டடங்களை இந்தியப்படை இடித்ததென்று புள்ளிவிபரம் வேண்டுமா.அல்லது போகும்போது கொண்டுபோன பொருட்களுக்கு கணக்கு வேண்டுமா? )

ஆனால் - அத்தனையும் குரங்கு கையில் கொடுத்த மாலைமாதிரி இன்றைக்கு நாம் கட்டித்தந்த பாலங்கள் தகர்க்கப்படுகின்றன. இன்றைக்கு யாழ்ப்பாணத்து மக்கள் மறுபடியும் இங்கே வருகின்றார்கள் என்றால் - அதற்கு யார் பொறுப்பு? என்று கோபதாபமில்லாமல் யோசித்துப் பார்த்தல் வேண்டும்.(யோசித்துப் பார்க்கிறேன் யார் பொறுப்பு ஆரம்பம் முதலே போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து போராடத் தூண்டியது யார்?தெளியும் நேரத்திலெல்லாம் உள்ளே இறங்கி குட்டையைக் குழப்பியது யார்? இளைஞர்கள் பயிற்சிக்காக வந்த போது காந்தீய,புத்த போதனைகளைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்தாமல் ஏ.கேயும் கையெறி குண்டுகளும் கொடுத்தது யார்.சே வரவர எல்லாருக்கும் ஞாபக மறதி கூடிக்கொண்டே போகுது)

நாம் அனைவருக்கும் - இது எல்.ரி.ரி.ஈ.யா, ஈ.பி.ஆர்.எல்.எப்பா புளட்டா என்று பேதங்களையே பார்ப்பதில்லை. அவர்கள் அனைவரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, இனவெறி பிடித்த அரசின் துன்பத்துக்கு ஆளாகி நமது துணையை நாடி வந்தவர்கள் - என்ற நேசக்கரமும் அந்த நேசப்பண்பும் தவிர இவர்களுக்கு அரசியல் கற்றுத்தருகிற பண்பு நமக்கு இருந்தது. இவர்களுக்கு துன்பம் வருகிற பொழுதிலெல்லாம் இன்றைக்கும் நாளைக்கும் - ஏனென்றால் இலங்கை அந்நிய நாடுதான் - அந்நிய நாடென்றால் நம்மால் புறக்கணிக்கப்பட்ட நாடு அல்ல. அவர்கள் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகின்றோம். எனவே - அங்கே நடக்கிற காரியங்கள் எப்படித் தீரும்? நல்ல புத்தி வந்தால் தீரும். (இதிலே இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கே புரியவில்லை ஆகவே பொழிப்புரை இல்லை)

“ஸப்கோ ஸன்மதி தே பஹவன்” என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நல்ல புத்தியை தாருங்கள். அவர்களோடு பேசிப் பிரயோசனமே இல்லை. அவர்கள் தாம் சாவது அல்லது யாரையாவது சாகடிப்பது என்கிற ஒரு அரசியலில் ஈடுபடுகின்றார்ள். இது உலகம் பூராவும் பரவியிருக்கின்றது. இது உலக மானுட நேயத்திற்கு சவால் விடுகிறது. இது உலக சகோதரத்துவத்திற்கு சவால் விடுகிறது. பேற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கின்ற அன்புக்கு சவால் விடுகிறது. ஒரு கையால் பிடித்து விடக்கூடிய ஒரு கூட்டம் ஆயுதத்தையும், சில அந்நிய உதவிகளையும் வைத்துக் கெண்டு ஒரு தேசத்தை சுடுகாடாக்குவது என்று தீர்மானித்து விட்டார்கள். இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை; ஈழத்துத் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை; இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை; இலங்கைக்கும் நண்பர்கள் இல்லை; தமக்கே நண்பர்கள் இல்லை அவர்கள்.(சுடுகாடாக்கும் திருப்பணிக்கு பிள்ளையா சுழி போட்டது யாருங்கோ)

எனவே, இந்த அழிவுப் பாதையிலிருந்து அவர்கள் அனைவரையும் மீட்டல் வேண்டும். இவர்கள் மீண்டார்கள்; இந்தியாவோடு சேர்ந்து சனநாயக அரசிலுக்கு அங்கே கால்கோள் நடத்தினார்கள். அங்கே தேர்தல் நடத்த வேண்டுமென்றும், தமிழருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்றும், தமிழ் மொழிக்குரிய அந்தஸ்து தரவேண்டுமென்றும் நாம் பாடுபட்டதை எல்லாம் அவர்கள் பகைமையினால் அழித்திருக்கிறார்கள்.(யாரு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆ? இந்தியா சொற்படி ஆடும் பொம்மை அரசாங்கத்தையும் அதனைக் கட்டிக்காக்க தமிழீழ தேசிய இராணுவம் என்ற ஒன்றையும் அமைப்பதற்கு அந்த இயக்கம் எத்தனை தமிழ் இளைஞர்களைக் காவு கொடுத்தது எத்தனை பேரைத் தானே வேட்டையாடியது.இந்தியாவுக்குச் சார்பாய் நடந்தமையாலே அவர்கள் சன நாய் அக வாதிகள்)

எனவே, ஈழத்தமிழர்கள் இன்றைக்கு மேலும் இன்னலுக்கு ஆளாவதற்கு காரணம், வெறிபிடித்த அவர்களை போராளிகள் என்றோ புரட்சிக்காரர்கள் என்றோ உலகம் ஒப்பாது. அவர்கள் வெறும் வன்முறையை வழிபடுகின்ற பாஸிஸ்டுகள். அவர்களுக்கு தேசம் இல்லை; அவர்களுக்கு இனம் இல்லை; அவர்களுக்கு மொழி இல்லை; அவர்களுக்கு தாய் இல்லை; தகப்பன் இல்லை; பிள்ளை இல்லை; சந்ததி இல்லை.(ஐயையோ முத்தீட்டுது.நல்ல காலம் வழக்கமாகச் சொல்கிற மாதிரி தம்மைத் தாமே நக்கும் நாய்கள் என்று சொல்லாமல் விட்டார்)

இப்படியொரு கூட்டம்; இப்படியொரு கொள்கை; இப்படி ஒரு கோட்பாட்டிற்கு நம்முடைய இளைஞர் சமுதாயம் பலியாவதும், அதை எதிர்த்து பலியாவதும் - எது பெருமைப்படத்தக்கது என்றால் பத்மநாபாவின் மரணம் பெருமைப்படத்தக்கது! அந்த ஒரு கட்டுப்பாடில்லாத தான்தோன்றித்தனமான வன்முறையை எதிர்த்து, வன்முறையை ஒரு அரசியல் வழிமுறையென்று அங்கீகரித்தார்கள். சனநாயகத்தின் பால் மக்களின் நல்வாழ்வுக்கு இந்தியாவோடு நட்புக் கொண்டு, நம்பிக்கை கொண்டு, நல்லெண்ணம் கொண்டு ஒரு புதிய அரசியலை அங்கே வித்திட்ட பாவத்திற்காகத்தான் அந்த வெறியர்கள், அவர்களை இங்கே வந்து கொன்றார்கள். தமிழர்களுக்குக் கூட இந்திய இராணுவத்தையே ஆட்டிப்படைத்தவர்கள், திருப்பி அனுப்பியவர்கள், வெல்ல முடியாதவர்கள், போராடுகிறவர்கள், உயிருக்குத் துணிந்தவர்கள், என்றெல்லாம் அவர்களது அதிதீவிரவாதத்திற்காக இங்கே அனுதாபம் செலுத்திக் கொண்டிருந்த, ஆதரவு காட்டிக் கொண்டிருந்த தமிழ் மக்களின் அன்பையும் அவர்கள் முற்றாக துடைத்து எறிந்து விட்டார்கள். எனவே, கொலை பாதகர்களின் கொலை தவிர வேறு கொள்கை இல்லாதவர்கள். இந்தியாவோ தமிழக மக்களோ ஒரு போதும் ஏற்க முடியாது.(இந்தியா ஏற்காது என்றாலே போதுமே பிறகேன் தமிழகமும் ஏற்காது.எங்கோ உதைக்கிறது)

எல்.ரி.ரி.ஈ. யை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும். அல்லது கைக்கூலி வாங்கிக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மனிதாபிமானமுடைய, அரசியலுடைய, நெறியுடைய, பண்புடைய தமிழ் அறிந்த, தமிழ் நாகரிகமறிந்த ஒருவரும் அவர்களை ஆதரிக்க முடியாது. உயிருக்குப் பயந்து, கொன்றுவிடுவார்களோ என்று ஆதரிப்பார். அப்படிப்பட்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. பயந்து.. பயத்தினால் அளிக்கும் ஆதரவு எப்படிப் பலனளிக்கும். குறுகிய கால வெற்றிதரும். ஆனால் இவர்கள் கையாளுகின்ற வன்முறையில் குறுகிய கால வெற்றி கூட கிடையாது. மக்களை வாழ்விப்பதற்காக போராட்டமே ஒழிய, மக்களை கொல்வதற்காக, மக்களை அனாதைகளாக்குவதற்காக அல்ல.(அதே மக்கள் தாம் இன்னமும் அவர்களை நம்புவதாகச் சொல்கிறார்கள்.கடந்த தேர்தலில் காட்டியும் உள்ளார்கள்)

தனிஈழம் கேட்பவர்கள் - ஏன் அந்த மண்ணை விட்டு, ஏன் பரிதவித்து ஓடி வருகிறார்கள். தனிஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் அந்த மக்களை அங்கே இருக்கவிட்டு, சாப்பாடு கேளுங்கள் நாங்கள் தருகிறோம். ஆதரவு கேளுங்கள் நாங்கள் தருகிறோம். இருநூறு ஆண்டுகாலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டம் நடந்தது. இங்கேயிருந்து அகதிகளாக நான்கு பேர்களாவது எங்காவது தேசத்திற்குப் போனதுண்டா?(இலங்கை அரசு அடித்த போது இந்தியாவிலும் தமிழர்கள் இருக்கிறார்களே என்று ஓடி வந்தார்கள்.இந்திய இராணுவம் தாக்கியபோது வந்தார்களா சொல்லுங்கள்.இந்தியாவை பிரிட்டாசார் ஆண்டபோது உலகத்தின் பெரும்பகுதி அவார்கள் கையில் இருந்தது அப்படியிருக்க பிரிட்டிசார் தாக்குகிறார்கள் என்று ஓடுவதற்கு இந்திய மக்களுக்கு இடமெதுவும் கிடைக்கவில்லை.சே ஜெயகாந்தனுக்கு வரலாறே தெரியவில்லை.)

அப்படி அனுப்புகின்ற மக்களை - அப்படி நாலுபக்கமும் சிதறடித்து விரட்டுகின்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு அரசியல் பொறுப்பு இருப்பதாக உலகத்தினர் நம்பமாட்டார்கள்.(ஒருதரம் மணிப்பூரையும்,காஷ்மீரையும் நினைவுபடுத்திப் பார்க்கவும்)

இவர்களது தலைமையகம் டெல்லியிலே இருக்கிறது. சாகிறவர்கள் அங்கே இருக்கிறார்கள். கொல்லுபவர்கள் அங்கே இருக்கிறார்கள்.(யார் மன்மோகன் சிங்கா சோனியா காந்தியாஇப்படிப் பூடகமாகச் சொன்னால் யாருக்குப் புரியும்.யாரையாவது கைக்காட்டவேண்டியதுதானே)

கொல்லத்தூண்டுபவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் போட்டு, உலகமெல்லாம் கூக்குரல்போட்டு லண்டனிலே உல்லாசமாக மாபெரும் வல்லரசுத் தலைவர்கள் போன்று அறிக்கை விடுகிறார்கள். வெட்கமில்லை!(இதே நீர்தான் ஈழத்தமிழர் போராட்டத்தை ஏற்கமுடியாது என்று அறிக்கைவிட்டீர் இன்று முன்னைநால் போராளிகளை ஆதரித்து நியாயப்படுத்தி அறிக்கைவிடுகிறீர்.உமது அரசியலுக்கு அவர்கள் எல்லாம் கால் தூசு)

இவர்களைப் பார்க்கின்றபோது நாணத்தால் நாங்கள் தலைகுனிகின்றோம். இவர்களுடைய நன்றிகெட்டத்தனத்திற்காக தலைகுனிகின்றோம். சொந்தச் சகோதரர்களை கொல்லுகின்ற இவர்களுடைய சூரத்தனத்தை இந்தியா ஒருபோதும் பாராட்டாது.(அதே சொந்தச் சகோதரர்களைக் கொன்ற வரதராஜப் பெருமாளுக்கு ஒரிசாவில் பங்களா கட்டிக்கொடுக்கும்.பரந்தன் ஞானசேகரனை தன்னுடைய செலவில் இலங்கை அனுப்பி தானே கட்சி ஆரம்பித்துக் கொடுக்கும்.மிச்ச சொச்ச ஈ.பி களுக்கு வீடும் வாசலும் கொடுத்து உபசரிக்கும்)

இந்த ஆபத்திலிருந்து இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும், சுரண்டலும் ஒருபக்கம். சுகபோகம் இன்னொருபக்கம். பட்டினியும் சாவும் இருக்கின்ற ஒரு சமூகத்தில் இளைஞர்கள் அதிதீவிரவாதத்திற்கு நிச்சயம் பலியாவார்கள். ஆயினும் அவர்களை காப்பாற்ற வேண்டும்.(சும்மா பினாத்துவதை விட்டுவிட்டு அதை முதலில் செய்யுங்கள்)

அவர்களோடு சென்று அவர்களுடைய இலட்சியத்திற்காக அவர்களை முதலில் வென்றெடுக்கவேண்டுமென்ற மாபெரும் பணியை ஏற்றிருந்தவர் பத்மநாபாவும் அவரது நண்பர்களும். இந்தப் போராளிகளில் சல்லடைபோட்டு - சலித்துச் சலித்துப் பார்த்து உலக அரசியல், உள்நாட்டு அரசியல், இந்திய அரசியல், தத்துவம் எல்லாம் தெரிந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாங்கள் தேடித்தேடி சலித்தெடுத்த நண்பர்கள் இவர்கள்.(ஆக மொத்தம் இந்தியப் பொம்மைகள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.எல்லா இயக்கத்தையும் நீங்கள்தானே உருவாக்கினீர்கள்.அப்போதே ஏன் ஒரேயொரு இயக்கத்தை மட்டும் வளர்த்து மற்றவற்றை முடக்கியிருக்கக்கூடாது.)

அவர்களைக் கொன்றுவிடுவதனால் - அவர்களின் கொள்கைகளை கொன்றுவிட முடியாது. எனவே இவர்கள் வெல்ல வேண்டுமென்றால் - இவர்கள் பாதையிலே இலங்கையிலே உள்ள யாழ்ப்பாணத்திலே உள்ள தமிழர்கள் செல்லுதல் வேண்டும்.(எந்தப் பாதை பத்மநாபா போராட்டத்தை ஆரம்பித்தபோது இருந்த பாதையா இல்லை இந்திய அமைதிப்படை காலத்தில் நடந்த பாதையா.இரண்டாவது என்றால் நிறையப் பேருக்குப் பிடிக்கும்.சொந்தப் பெண்களை வன்புணர்வது எவ்வளவு இன்பம்)

நடுவிலே அவர்களுக்கு உரிய மரியாதையையும் உரிய அரசியல் சூழ்நிலையையும், வாழ்க்கை சூழ்நிலையையும் இலங்கையில் நிலைமை மாறிவிட்டது என்ற நம்பிக்கையை இலங்கைவாழ் தமிழர்களிடம் ஏற்படுத்துவதில் மாபெரும் வெற்றி கண்டவர் பத்மநாபா. (வடக்கு கிழக்கு மாகாணசபை எப்படிச் செயல்பட்டது என்று சிறுவனாக இருந்த எனக்கே தெரியுமுந்தப் பூவை இப்ப இருக்கிற குழந்தைப் பெடியளுக்கு சுத்தலாம்)

அவரது மரணம் குறித்து நாம் பெருமிதம் அடைகின்றோம். வீரவணக்கம் செய்கின்றோம் - கண்ணீர் அஞ்சலி செய்வதல்ல எமது காரியம். அவர்கள் இரத்தாஞ்சலி செய்திருக்கிறார்கள். தங்கள் உயிரை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். தெரியும் எப்படியும் கொல்லப்படுவோம். இந்த கொள்கைக்காக கொல்லப்பட்டால் அதிலே நாங்கள், இரும்பூதெய்துகின்றோம் என்று எண்ணுகின்ற வீர நெஞ்சம் அவர்களுக்கிருந்தது. அந்த நெஞ்சத்திற்கு தமிழ்மக்கள் தலைவணங்குவார்கள். அவர்களுடைய நண்பர்கள் இங்கே எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலை இன்று எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். தமிழர்களின் நிலைவேறு இவர்களின் நிலைவேறு அல்ல. ஆகவே தமிழர்களின் வாழ்வு மீண்டும் தலையெடுக்க வேண்டுமானால், வன்முறையை நாம், ஆழமாக சித்தாந்த ரீதியாக சிந்தித்துப் பார்த்து உலகரீதியாக ஏற்படுகின்ற மாற்றங்களைப் பார்த்து இன்றைக்கு வன்முறையினால் - எந்தக் காரியமும் சாதிக்க முடியாது எந்தக்காரியத்தையும் சாதிக்காமல் மனிதனைக் கொன்றழிக்கின்ற ஒரு சித்தாந்தத்திலிருந்து இவர்கள் வன்முறையாளர்களாக மாறியிருக்கின்றார்கள். இவர்களிடமிருந்து இலங்கையை இந்தியாவை உலகத்திலுள்ள வருங்கால சந்ததிகளை, காப்பாற்றவேண்டும். அந்த மாபெரும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் பத்மநாபாவும் அவருடைய தோழர்களும் வீரமரணம் எய்தியிருக்கிறார்கள்.(அங்கே எஞ்சியிருப்பவர்களுக்கு ஆயுதமும் ரிக்கற்றும் கொடுத்து போ போய்க் கிலக்கிலங்கையில் இன்னின்னாரைப் போட்டுத்தள்ளு என்று சொல்வதற்குப் பெயர்தான் அரசியல் சித்தாந்த வகுப்பு)

ஆக மொத்தம் ஜெயகாந்தன் தனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறார்.நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறேன் இதைப் படித்து யாருக்காவது இரத்தக் கொதிப்பு ஏறினால் நான் பொறுப்பு இல்லை.

நீதி:செக்குகள் இருக்குமட்டும் நாய்களும் நக்கும்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

4 Comments:

At 2:20 PM, Blogger Thangamani said...

ஜெயகாந்தன் அமெரிக்காவைப்பற்றியும் பொருள் முதல்வாதத்தைப் பற்றியிம் இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார். பிறகு சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா போனபிறகு கேபிடலிஸத்தின் வழி உலகம் உய்யும் என்றார்; அதாவது அவர் விருப்பினாராம் ஆனால் அது அவரது விருப்பமாகத்தான் இருந்தது; உண்மையாக இருக்கவில்லை என்றார். ஈழ விசயத்திலும் பின்னொருநாள் அப்படிச் சொல்வார்.

 
At 2:31 PM, Blogger Saran said...

ராஜீவ்காந்தி இலங்கைக்கு செய்தது மிகப்பெரிய தவறு. ஆனால் அவருடைய இறப்பு இலங்கை எங்களுக்கு செய்த மிகபெரிய துரோகம். ஏந்த ஒரு காலதிலும் எல்.டி.டி.ஈ யை அதற்காக மன்னிக்கவெ முடியாது. அது இன்ன்மும் வலித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் தனிஈழம் இன்னும் எங்கள் கனவாகதான் இருக்கிறது. எம் சகோதரனின் முகத்தில் சந்தோசத்தை பார்க்கும் நாள் எந்நாளோ?

சிங்காசரன்

 
At 5:53 PM, Blogger dondu(#11168674346665545885) said...

This comment has been removed by a blog administrator.

 
At 5:55 PM, Blogger dondu(#11168674346665545885) said...

"எனது வலைப்பதிவை இரண்டுநாட்களாகக் காணவில்லை.தற்காலிகமாக புதிய பதிவு ஆரம்பிக்கும் வரை இங்கே எனது பதிவு."
இது கவலை அளிக்கும் விஷயம் ஈழநாதன் அவர்களே. இம்மாதிரி உங்களுக்கு நடந்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தயவு செய்து என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியுமா? என் மின்னஞல் raghtransint@gmail.com

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

 

Post a Comment

<< Home