Friday, March 11, 2005

பாலஸ்தீனக் கவிதைகள்



நூல் :பலஸ்தீனக் கவிதைகள்
மொழிபெயர்ப்பு :எம்.ஏ.நு·மான்
வெளியீடு :மூன்றாவது மனிதன்,37/14 வாக்ஷால் லேன், கொழும்பு-2
ஸ்ரீலங்கா.தொலைபேசி: 302759
மின்னஞ்சல்: adaiyalam@yahoo.com
விலை :ரூ.200-
பக்கங்கள் :162

எப்போதும் எந்தவொரு சமூகத்தின் கலாச்சார மரபிலும் கவிதை ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. குறிப்பாக அரேபியக் கலாச்சார மரபில் கவிதைக்குத் தனியான இடமுண்டு. நீண்ட கவிதைப் பாரம்பரியத்துடன் செழுமை மிக்க கவிதா வெளிப்பாட்டு முறைகளைத் தன்னகத்தே கொண்டு வருகிறது. அரேபியச் சமூகத்தில் சமூக அரசியல் கருத்தியல் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இணையாகக் கவிதைகளிலும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. இந்த அரசியல் கவிதைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன.

21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து காத்திரமான செழுமைப்பாங்குடன் கூடிய கவிதைகள் அரேபியர்களிடையே தோன்றத் தொடங்கின. இவை அரேபியத் தேசிய உணர்ச்சிக் குமுறல்களுடனும், எழுச்சியுடனும் புது உத்வேகத்துடனும் கவிதையில் வெளிப்பட்டன.

இந்த நீண்ட நெடிய கவிதைப் பாரம்பரியம் பாலஸ்தீன மக்களின் துன்ப துயரங்களுடன் போராட்ட எழுச்சிகளுடன் சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக மாறியது. அரசு அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு, அடக்குமுறைகளுக்குக் கவிஞர்கள் பலியாக்கப்பட்டனர்; நாடு கடத்தப்பட்டனர். 1948-க்குப் பின்னர் பாலஸ்தீன மக்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்தனர்.

அரபு உலகின் எல்லா இடங்களிலும் சிதறடிக்கப்பட்டு வாழும் அரேபியர்களை ஐக்கியப்படுத்தவும், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டைத் திரும்பப் பெறவும் வேண்டி கோரிக்கைகளைப் படைக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீனக் கவிதைகள் திரும்பவும் மீட்கப்பட்டுப் புதிய உத்வேகத்துடன் எழுதப்படத் தொடங்கின.

தொடர்ந்த பாலஸ்தீன மக்களின் போராட்ட எழுச்சியுடன் கவிதைகளும் வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன. தங்கள் தனித்துவ அரசியல் அடையாளம், தங்களின் சொந்த மண் பற்றிய ஏக்கம், விடுதலைக் கீதம் எனப் பாலஸ்தீனக் கவிஞர்களின் போராட்டம் அரசியல் கவிதை வழியே பிரதானப்படுத்தப்படுகிறது.

தமிழில் பாலஸ்தீனக் கவிதைகள் ஆங்காங்கு பலராலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஈழத்தில் 1981-களில்
9 கவிஞர்களின் 30 கவிதைகள் இடம் பெற்ற 'பலஸ்தீனக் கவிதைகள்' எனும் தொகுப்பை கவிஞர் எம்.ஏ. நு·மான்மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். இத் தொகுப்பு அக் கால ஈழத்தின் அரசியல் முனைப்புக்குத் தக்க ஊக்கியாகவும் இருந்தது. தற்போது அந் நூல் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம் பெற்று −ரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

தமிழில் அரபுக் கவிதைகள் பல மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. யமுனா ராஜேந்திரன், சிவசேகரம் உட்பட பலரும் முயன்றுள்ளனர். அவர்களது தொகுப்புகளில் வெளிவந்த கவிதைகள் கூட இத் தொகுப்பில் உள்ளன. ஒரு கவிதையைப் பத்துப் பேர் மொழிபெயர்த்தால் பத்து வேறுபட்ட கவிதைப் பிரதிகள் கிடைக்கும் என்பது நிச்சயம் என்பதை நு·மானின் மொழிபெயர்ப்பும் நமக்கு உணர்த்துகிறது.

நு·மானின் கவிதை ஆளுமையும், மொழி ஆளுமையும், கவிதைச் செயற்பாடும் கவிதா வெளிப்பாட்டு உந்துதலும் தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தர முடிந்துள்ளது எனக் கூறலாம்.

தமிழில் அரசியல் போராட்டக் கவிதைகள் மேன்மேலும் ஊக்கம் பெற்று வளமான கவிதைகள் வெளிப்பட, நு·மானின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள பாலஸ்தீனக் கவிதைகளும் சிறந்த ஊக்கியாக இருக்கும். நீதி மறுக்கப்பட்டு அநீதிகள் எங்கும் தலை விரித்தாடும் பொழுது வெடித்துக் கிளம்பும் போராட்டங்களில் வடிகாலாகக் கவிதைகள் எப்படிப் பிறக்கும் என்பதற்குப் பாலஸ்தீனக் கவிதைகள் தக்க சாட்சியாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின், நீதி மறுக்கப்பட்ட மக்களின் குரலாகவே பாலஸ்தீனக் கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.

இவை பாலஸ்தீனர்களின் குரல்கள் மட்டுமல்ல. மானுட நீதி கேட்டுப் போராடும் அனைத்து மக்களின் குரல்களும் கூட. (ஆறாந்திணை)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home