Friday, September 23, 2005

'புரகந்த களுவற'

cdv0035.jpg
இலங்கை இனப்பிரச்சனையினதும் தொடரும் யுத்தத்தினதும் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் திரைப்படம் 'புரகந்த களுவற'(Death on a full Moon Day)

தற்போதைய சிங்கள திரைத்துறையின் சிறந்த இயக்குனரான 'பிரசன்ன விதானகே'யால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் நிறைந்த பாராட்டுக்களோடு நிறையவே சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கிறது.

இலங்கையின் நாகரீகங்கள் பெரிதும் வந்தடையாத குக்கிராமம் ஒன்றிலிருந்து இராணுவத்தில் சேர்ந்து போருக்குப் போன சிங்கள இளைஞனின் குடும்பத்தைச் சுற்றிக் கதை பின்னப்படுகின்றது.

வயதான கண்பார்வை இல்லாத தந்தை.திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்குக் தாயாகிய மூத்த சகோதரி,திருமணத்திற்குக் காத்திருக்கும் இளைய சகோதரி.அவளது திருமணப்பரிசாகக் கட்டப்பட்டு அரைகுறையில் நிற்கும் வீடு.இவ்வளவும் இராணுவத்தினனான அந்த இளைஞனின் மதாந்திர உழைப்பை நம்பியே நடக்கின்றன.

ஒரு பூரணை நாள் ஒன்றில்(பௌத்தர்களுக்கு பூரணை விசேட வழிபாட்டு தினம்)போரில் இறந்து போன இராணுவ வீரனது பூத உடலைத் தாங்கியவண்னம் கார் ஒன்று அவர்களது வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்து வருகிறது.
தனது மகன் போரில் இறந்திருப்பான் என்பதை நம்ப தந்தை தயாரில்லை.மகன் உயிருடன் இருக்கிறான் என்றே அவர் நம்புகிறார்.உடலைச் சுமந்து வந்த இராணுவத்தினரோ இறந்ததை உறுதிப்படுத்துகிறார்கள்.

சகோதரனின் முகத்தைப் பார்க்க விரும்பிய சகோதரிக்கு போரில் அவனது உடல் சிதைந்துவிட்டதாகக் கூறி பூத உடலைத் தாங்கிய பேழையை திறக்க மறுக்கின்றனர்.

சகோதரிகள் புலம்ப,வயோதிகத் தந்தை அதிர்ச்சியோடு செயலற்று நிற்க மழை சோவெனப் பெய்துகொண்டிருக்க அவர்களது நிலத்திலேயே மகன் உடல் புதைக்கப்படுகிறது.தந்தையும் வேண்டா வெறுப்பாக மதச் சடங்குகளைச் செய்கிறார்.

அடுத்த நாள் தந்தையை தேடி வரும் கிராம சேவகர் இராணுவத்தில் இருந்து இறந்தவர்களுக்குக் கிடைக்கும் நட்ட ஈட்டுக்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து அதை நிரப்பித் தந்தால் தான் பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.அத்தோடு அந்தப் பணம் வருமிடத்து வீடு கட்டுவதற்காகத் தன்னிடம் வாங்கிய கடனைத் தருமாறும் சொல்கிறார்.

மகன் இறக்கவில்லை என உறுதியாக நம்பும் தந்தை அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

வீட்டில் வறுமை தாங்கமுடியாத இளைய மகள்.தன்னை மணம்புரிவதற்காகக் காத்திருப்பவனது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்கு வேலைக்குப் போகிறாள்.தந்தையின் முடிவு எல்லாவற்றையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்கிறாள்.

நட்ட ஈட்டுக்கு விண்ணப்பிக்கக் கோரி கிராம சேவகர் அடிக்கடி வீட்டுக்கு வந்து நெருக்குதல் கொடுக்கிறார்.அதனை ஏற்றுக்கொண்டால் தான் மகன் இறந்ததை ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால் தந்தை நட்ட ஈட்டை ஏற்க மறுக்கிறார்.

இதேவேளை மகன் பண்டாரவினது மூன்றாவது மாத நினைவுக்காய் தானம் வழங்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறார் கிராமத்து மதகுரு.செய்வதறியாத நிலையில் மூத்த மகளும் அவள் கணவனும் வயோதிகரை நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளும்படி நெருக்கிறார்கள்.
இளைய மகளைத் திருமணம் செய்யவிருந்தவனோ வீட்டு வறுமையைத் தீர்ப்பதற்கு தானும் பண்டார வழியில் இராணுவத்திற்குச் சேர்வதுதான் ஒரே வழியென்ற முடிவுக்கு வருகிறான்

அடுத்த பௌர்ணமியும் வருகிறது.பண்டாரவின் நினைவாய் தானம் வழங்க ஆயத்தம் நடக்கிறது.தந்தையால் பொறுக்க முடியவில்லை.மண்வெட்டியுடன் போய் மகனைப் புதைத்த குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறார்.மகள்களின் அழுகுரல் கேட்டு ஊராரும் கூடிவிடுகிறார்கள்.கிழவனாரைத் திருப்திப்படுத்தவேண்டி மருமகன் புதைகுழியைத் தோண்டி பேழையை வெளியே எடுக்கிறான் அனைவரும் சேர்ந்து பேழையைத் திறக்கிறார்கள்.உள்ளே இரண்டு மரக்குற்றிகள் துணியாற் சுற்றப்பட்டு வைக்கைப்பட்டிருக்கின்றன.

இதுதான் படத்தின் கதை.சிங்களத் திரைப்படங்கள் யதார்த்தத்திற்கு மிக அருகிலானவை என்பார்கள்.அந்த வகையில் இது யதார்த்தத்தை எந்தவித மிகைப்படுத்தலுமின்றி அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை,மதகுருக்கள் இடையிலான உறவு என்பன அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன

வயோதிகத் தந்தை வன்னிஹாமியாக பிரபல நடிகர் ஜோ அபேவிக்ரம திறம்படச் செய்திருக்கிறார்.

மொத்தம் 75 நிமிடங்களே நகரும் படம் முடியும் வரைக்கும் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது.

இந்தப் படம் நாட்டுக்காகப் போராடும் இராணுவத்தினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி அதற்குக் தடைவிதிக்குமாறு பிரசன்னா விதானகே மீது அழக்குத் தொடரப்பட்டுள்ளது.பல்வேறு மிரட்டல்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார்.ஒரு கிராமத்து ஏழைக் குடும்பத்து இராணுவ வீரன் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியதற்கான எதிர்ப்பு அது

சிங்களத் திரைப்படங்களை வாங்க விரும்புபவர்களுக்கு

(கீத்துகொட்டாய் அண்ணாச்சி சன்னாசிக்கு இந்தப் பதிவு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

6 Comments:

At 3:02 PM, Blogger Thangamani said...

Thanks for this nice post!

 
At 7:16 PM, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள ஈழநாதன்,
இந்தப்பதிவு நான் இதுவரை அறிந்திராத சிங்க்ளத் திரைப்படத்தினைப் பற்றிய நல்ல ஒரு அறிமுகமாக அமைந்தது. இந்தப்பதிவே படத்தின் அழுத்தத்தைக் கொணர்ந்துவிட்டது. மனதைத் த்டும் கதை !
பதிவுக்கு நன்றி !
நட்சித்திர வாரத்திற்கு( தாமதமாக :)!) வாழ்த்துக்கள்.
அன்புடன், ஜெயந்தி சங்கர்

 
At 1:34 AM, Blogger -/பெயரிலி. said...

http://www.eelampage.com/?cn=20329

 
At 6:56 AM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

பதிவுக்கு நன்றி ஈழநாதன்.

 
At 1:06 AM, Blogger Senthu VJ said...

நன்றி. உங்கள் பார்வைக்கு.
நானும் பார்த்தேன்.
தமிழ் சினிமா இன்னும் வளரவேண்டும் இதுபோன்ற படங்களுக்கு அல்லது தமிழ் ரசிகர்கள் வளரவேண்டும்.

 
At 7:15 AM, Blogger சன்னாசி said...

நன்றி ஈழநாதன்.

 

Post a Comment

<< Home