Thursday, September 22, 2005

யுத்தத்தின் மறுபக்கம்

இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது.

ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்களுடனான தொடர்பாடல் அற்ற நிலையில் அரசாங்கம் அவர்களையும் இறந்ததாகக் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி விடும்.

இவற்றையெல்லாம் செய்தியாகப் படிக்கும்போது சிறுவயதில் எனக்கும் வேடிக்கையாகத் தான் இருக்கும்.அரசாங்கத்திற்காகப் போராடும் இராணுவத்தினரையே அரசாங்கத்தால் ஒழுங்காகப் பராமரிக்க முடியவில்லை என்பது கேலியாகத் தான் இருக்கும்.

ஆனால் வேறு சில ஊடகங்கள் வழியாக தென்னிலங்கையில் பெயரே தெரியாத சிறு சிறு கிராமங்களில் பலநூறு குடும்பங்கள் இந்த இராணுவத்தினரின் மாத வருவாயை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன என்பதை அறிந்துகொண்டபோது யுத்தத்தின் மறுபக்கமும்தெரியவந்தது.

நாமெல்லாம்பொதுவாக நம்புவது சிங்கள இளைஞர்கள் இனவாதத்தின் காரணமாகத் தான் இராணுவத்தில் சேர்கிறார்கள் என்பதே

இராணுவத்தினரில் பாதிப்பேர் இனவெறி காரணமாகவும் நாடு நமதே என்ற அரசியல் தூண்டுதல்கள் காரணமாகவும் சேர்கிறார்கள் என்றால் இன்னொருபுறம் தாளமுடியாத வறுமையும் தன் பங்கிற்கு இளைஞர்களைச் சேர்க்கிறது.

ஒவ்வொரு யுத்தத்தின் பின்னாலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பின்னாலும் எஞ்சியிருக்கும் வறுமை மற்றவர்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது.இவர்கள் பெரும்பாலும் மத்திய இலங்கை,மலையகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் குடும்பங்களினது இளைஞர்களினதும் வறுமையையும் அறியாமையையும் ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.இராணுவத்துக்கு ஆள் தேவைப்படும்போதெல்லாம் அரசாங்கம் கொழும்பையும் அதைச் சூழவுள்ள பகுதிலும் வசிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளிடமோ அல்லது வியாபாரிகளின் பிள்ளைகளிடமோ போவதில்லை.இப்படியான கிராமங்களுக்குத் தான் போகிறார்கள்.

இவர்கள் மத்தியில் நாடு பற்றிய,இனம் பற்றிய பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.ஆறாம் வகுப்புவரை கல்வி கற்றவனுக்கு பதினோராயிரம் ரூபா மாதச் சம்பளம் என்பதுதான் அவர்களிடையே எடுபடுகிறது.

ஒருவேளை போரில் சிக்கி இறந்துபோனால் தொகையாகக் கிடைக்கும் ஒரு சில லட்ச ரூபாக்களால் குடும்பம் வாழ்ந்துகொள்ளும் என்று நம்பித்தான் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்கிறார்கள்.

தந்தை போரில் இறந்தபின் அதே குடும்பத்து மகனோ அல்லது தமையன் இறந்தபின் தம்பியோ மீண்டும் இராணுவத்தில் சேர்வதற்கான காரணம் அவர்களது வறுமை.ஒருமுறை கண்ட இழப்பும் கையறுநிலையும் திரும்பத் திரும்ப இராணுவத்தில் சேர்வதே ஒரே வழியாக அவர்களுக்குப் புரிகிறது.

ஆனால் அரசாங்கமோ படைக்கு ஆள்ச்சேர்க்கவும் பாதுகாப்பு நிதிக்கு பெருமளவில் துண்டுவிழும் தொகையைச் சரிப்படுத்தவும்பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது.

சில இராணுவத் தாக்குதல்களில் மாண்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தின் உடல்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.மக்களின் உணர்வுகளைக் கிளறி அவர்களை தங்களுக்குச் சார்பாய்த் திருப்ப இப்படியாகப் பல்வேறு செயல்களைச் செய்தது.சில உடல்களைச் சிதைந்தது சிதைந்தபடியே குடும்பத்தினருக்குக் காட்சிப்படுத்தியது.இன்னும் சில உடல்களை முகாம்களிலேயே எரித்துவிட்டு விடுதலைப்புலிகள் கண்டதுண்டமாக வெட்டிவிட்டார்கள் என்றோ அல்லது உடலைத் தர மறுக்கிறார்கள் என்றோ சொல்லி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடியது.

பெற்ற மகனையோ கணவனையோ சகோதரனையோ அப்படியான நிலையில் பார்க்கும் அந்த மக்களின் துக்கம் வடகிழக்கில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட குடும்பத்தினரின் துக்கம் எல்லாமே ஒன்றுதான்.

அதையெல்லாவற்றையும் விட மோசமான ஏமாற்று வேலை அரசாங்கத்தால் வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும் அதன் பின்னரான புலிகளின் எதிர்த்தாக்குதலின் பின்னும் செய்யப்பட்டது.

போரில் இறந்த இராணுவவீரர்களுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையான ஒரு சில லட்ச ரூபாக்களை ஆளும் வர்க்கம் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு யுத்தத்தில் அவ்வீரன் தப்பியோடிவிட்டதாகவும் அவனை வீட்டுக்குள் மறைத்து வைத்திருத்தல் குற்றம் எனவும் சொல்லிக்கொண்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களே பொய்யாகச் சோதனை போடப்பட்டன

தப்பியோடிய இராணுவத்தினருக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டியதில்லை என்பதால் இறந்த பலநூற்றுக்கணக்கான இராணுவத்தினர் தப்பியோடியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் நட்ட ஈட்டுப் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.

அவர்களின் குடும்பத்தினரோ மகன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்று நம்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.அல்லது அவனுக்குப் பதிலாக சகோதரன் இராணுவத்தில் சேர்கிறான்.

தேர்தல் கூட்டங்களில் பிக்குமார் முழங்குகிறார்கள் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்".மகிந்த முழங்குகிறார் "நாடு துண்டுபடுவதை அனுமதியேன்".ஜே.வி.பி சொல்கிறது "அப்பே ரட்டை"(எங்கள் நாடு)இலங்கையின் பெயர் தெரியா ஒரு கிராமத்தில் அப்புகாமியோ பொடிமெனிக்கேயோ ஆனையிறவுச் சண்டையில் காணாமற் போன தங்கள் மகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

(இந்தப்படியான ஒரு குடும்பத்தினரின் அவலத்தைச் சொல்லும் ஒரு திரைப்படத்தைஇம்முறை இலங்கையிலிருந்து வரும்போது வாங்கி வந்தேன் அதுபற்றிய விமர்சனம் அடுத்தடுத்த பதிவில்)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

10 Comments:

At 10:45 AM, Blogger porukki said...

எனக்குத் தெரிந்தவரை முதன் முதலில் இலங்கை யுத்தத்தின் மறுபக்கம் இந்தப் பதிவில்தான் எழுதப்பட்டுள்ளது. நல்ல பதிவு ஈழநாதன். முடிந்த முடிவுகளை மாற்றியிருக்கிறேன் என்று முந்தைய பதிவில் நீங்கள் குறிப்பிட்டபடி பதிவில் மாற்றமிருக்கிறது.

இலங்கையில் மட்டுமல்ல, யுத்தம் நடக்கும் நாடுகளில் வறுமைதான் இராணுவத்திற்கு ஆள்பிடித்துக் கொடுக்கிறது. குறிப்பாக அமெரிக்க இராணுவத்தைப் பார்த்தால் அந்நியநாடுகளில் போரிட்டு மடிபவர்களாக வறுமைப்பட்ட-சிறுபான்மையினரே அதிகம்.

ஈழ விடுதலைப் போராட்டத்திலும் மத்தியதர-பணக்கார வர்க்கம் வெளிநாடுகளுக்குத் தப்பியோட, போராளிகளானது வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. தப்பியோட முடியாமல் கொல்லப்பட்ட மக்களில் பெரும்பான்மையினரும் இவர்களே. போராளிகளில் அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததன் பின்னணியும் இதுவே.

Prasanna Vithanage என்பவர் எழுதி இயக்கிய Dead on a Fullmoon day என்ற படம் பாருங்கள். யுத்தத்தின் மறுபக்கத்தை காட்டியுள்ளார்கள்.

 
At 10:52 AM, Blogger Thangamani said...

நல்ல பதிவு ஈழநாதன். நன்றி!

 
At 11:19 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்லதொரு பதிவு ஈழநாதன் நன்றி!

-மதி

 
At 12:00 PM, Blogger கொழுவி said...

இதைவிடவும், புலிகளாற் கொடுக்கப்பட்ட கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களைப் பொறுப்பேற்காமல் விட்டது, ஆயிரக்கணக்கான அச்சடலங்களை நாங்கள் எரித்தது என்றும் நிகழ்வுகளுண்டு.
ஓயாதஅலைகள் 1, ஓயாதஅலைகள் 2 தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களில் அரசாங்கத்தால் பொறுப்பேற்க மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவை மட்டுமே ஆயிரம் வரும்.

 
At 1:50 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பின்னூட்டத்திற்கு நன்றி தங்கமணி,மதி,கொழுவி
பொறுக்கி நீங்கள் சொன்ன படம்தான் நான் மேலே குறிப்பிட்ட சிங்களப்படம்.இன்று அல்லது நாளை இப்படத்தைப் பற்றி எழுதுகிறேன்.

 
At 2:48 PM, Blogger அன்பு said...

நல்ல பதிவு ஈழநாதன், வழமைபோல் நிறைய விடயம் தெரிந்துகொள்ள முடிந்தது, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

 
At 5:57 PM, Blogger ஸ்ருசல் said...

மிக அருமை நண்பரே.

ஸ்ருசல்.

 
At 1:08 AM, Blogger Boston Bala said...

---ஒவ்வொரு யுத்தத்தின் பின்னாலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பின்னாலும் எஞ்சியிருக்கும் வறுமை மற்றவர்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது---

இதே கருத்தை நிலைநிறுத்தும் 'டைம்ஸ்' கட்டுரை ஒன்றையும் சமீபத்தில் படித்தேன். பதிவுக்கு நன்றி.

 
At 2:33 AM, Blogger பத்மா அர்விந்த் said...

ஈழநாதன்:
இலங்கை மட்டும் இல்லை. அமெரிக்காவில் கூட வறுமையின் காரணமாகவே பலர் இராணுவத்தில் சேர்கின்றனர். இராஅணுவத்தில் சேர்ந்து இரண்டு மூன்று வருடங்களில் வெளியேறுபவர்கள் கல்லூரியில் எப்போழுது படிக்கவும் இராணுவம் பொருள் தருவதால் 18 வயது இளைஞர்கள் சேர்கிறார்கள். இவர்களின் ஊதியமும் மணிக்கு 10-15$ மட்டுமே.நல்ல மருத்துவ காப்பீடு போன்றவையும் கிடையாது. அமெரிக்கா சாதரண போர்வீரன் படும் துயரம் கொஞ்ச நஞ்சமில்லை.

 
At 2:47 AM, Blogger Jayaprakash Sampath said...

ஈழநாதன், நல்ல தகவல்களுடன் அமைந்த கட்டுரை. நன்றி. நேரம் கிடைக்கும் போது, இன்னும் விரிவாக எழுத வேண்டுகிறேன்.

 

Post a Comment

<< Home