Wednesday, November 16, 2005

ராம்- சாயம் வெளுத்தபின்னும் வண்ணப்பூச்சு

இந்து ராமின் பிய்ந்து போன முகமூடியை ஒட்டவைக்கும் முயற்சி நடக்கிறது.அவர் கண்மூடித்தனமான இந்தியத் தேசியவாதி இல்லை என்பதற்கு ஜெயகாந்தனின் கட்டுரை நோண்டியெடுக்கப்பட்டு அது பொருந்துமா இல்லையா என்றுகூடப் பார்க்காமல் ஜெயகாந்தன் சொல்கிறார் இதைச் சொன்ன ஜெயகாந்தன் புத்தியுடையவராகவே இருந்திருப்பார் என்ற பொதுப்புத்தியில் இதனை நானும் வழிமொழிகிறேன் என்கிற ரீதியில் சிவகுமார் குறிப்பெழுதுகிறார்.

அதாவது அன்றைய ராம் புலிகளை ஆதரித்ததற்கும் இன்றைய ராம் புலிகளை எதிர்ப்பதற்கும் கட்டாயம் காரணம் இருக்கும் அந்தக் காரணமோ அவரது கொள்கையோ எதுவாக இருந்தாலும் அவரை நான் மதிக்கிறேன் அவரை வழிமொழிகிறேன்.இரண்டு ராமையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது பொதுப்புத்தியில்லை மந்தையாட்டுப்புத்தி.

மந்தையாட்டுக்கூட்டத்தில் முன்னால் போகும் ஆட்டைப் பின் தொடர்வதற்கு பின்னால் போகும் ஆட்டுக்குக் கட்டாயம் காரணம் இருந்தே தீரும்.அதைத் தொடரும் ஆட்டுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.மொத்தத்தில் பார்க்கும் எமக்கு மந்தையாட்டுக் கூட்டம் ஒரே ஆட்டைப் பின் தொடர்வதாய்த் தோன்றுவதற்குக் கூட ஏதேனும் காரணம் இருக்கலாம்.

இந்து ராம் மட்டுமல்ல இன்னபிற இந்தியத் தேசியவாதிகள் விடுதலைப் புலிகளையும் மற்ற இயக்கங்களையும் ஆயுதம் கொடுத்து,பயிற்சியும் கொடுத்து போராடத் தூண்டியதற்கு முக்கிய காரணம் ஈழத்தமிழர் மேலிருந்த அக்கறை என்பதை விட இந்தியாவின் நலனில் உள்ள அக்கறை என்பதே பொருத்தமாக இருக்கும்.இந்து ராம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்கும் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததற்கும் அதேதான் காரணம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ராம் காட்டிய அக்கறை இந்திய நலனைச் சார்ந்ததன்றி ஈழத்தில் அமைதி ஏற்படவேண்டுமென்பதோ விடுதலைப்புலிகளுக்கு நன்மை செய்யவேண்டுமென்பதோ அல்ல.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்ட பின்னர் கூட அவர்களை தம் பக்கம் சாய்த்துவிட இந்திய அரசியல் மட்டத்தினரின் தூதராக பிரபாகரனைச் சந்தித்தார்அது கூட இந்திய நலனை முன்னிறுத்தியதுதான்.ஜெயகாந்தனுக்கு அந்த நேரத்தில் ராமை எதிர்க்கவேண்டி இருந்திருக்கிறது இந்தச் சம்பவத்தை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.ஆனால் அதனை உதாரணமாக சிவகுமார் எடுத்துப் போட்டிருப்பது ராமை நியாயப்படுத்தப் போய் தன் பங்கிற்கு அவரது முகமூடியை இன்னும் கொஞ்சம் பிய்த்துப் போட்டதாகத் தான் இருக்கிறது.

கடைசிவரை ஆரம்பத்தில் ராம் ஏன் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்கும் இப்போது ஏன் எதிர்க்கிறார் என்பதற்கும் காரணங்கள் தேட சிவகுமார் முனையவில்லை ராம் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.காரணமில்லாமல் அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்றவாறாகத்தான் அவரது அணுகுமுறை இருக்கிறது.

எல்லா நேரத்திலும் இந்தியத் தேசியவாதியாகவே ராம் செயற்பட்டிருக்கிறார்.அதனாலேயே புலிகள் இந்தியாவின் அழுத்ததிற்கு பணியாத நிலமை வந்தபோது அவர்களின் தீவிர எதிர்ப்பாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.இதனை சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி மாறிக்கொள்ளும் குள்ளநரித்தனம் என்றும் குறிப்பிடலாம் அல்லது சிவகுமார் சொல்ல வருவது மாதிரி இராசதந்திரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

வரலாறு என்பது ஒற்றைப் பரிமாணமுள்ளது அல்ல அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு அவற்றின் பரிமாணத்துக்கேற்ற மாதிரி அவற்றைப் பார்க்கவேண்டும் எம் கண்ணுக்கு வண்ணக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் வரலாறும் எமது கண்ணாடியின் நிறமாகத்தான் தோன்றும்.எதையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்வதற்கு முன்னாலே வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

இந்த விடயத்தில் ஜெயகாந்தன் எவ்வளவோ மேல் என்று புரிகிறது.அவர் சொல்வது போன்று அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஒரே நிலைப்பாட்டில்-அது புலி எதிர்ப்பாக இருந்தாற் கூட-இருந்திருந்தால் அவரை மதிக்கலாம்.

ஆனால்

இந்த வன்முறையாளர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது வேறு: இவர்களுக்கே இடம்
கொடுப்பது வேறு என்று புரிந்து கொண்ட ராஜீவ் காந்திதான் ஜனநாயக வழியில் அரசியல்
தீர்வு காண்பது ஒன்றே ஈழப்பிரச்னை தீர வழியென்று நிரூபித்தார். அமிர்தலிங்கமும்,
ஈழப் புரட்சிகர முன்னணியினர் பலரும் ராஜீவின் வழியை ஆதரித்தனர். யாழ்ப்பாணம்
புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஈழத் தமிழ் மாநிலம் அமைந்தது. தேர்தலும் நடந்து
தமிழர்க்கு என்று ஒரு மாநில அரசும் அமைந்தது...


என்று சொல்வதற்கு ஜெயகாந்தன் நிச்சயம் வெட்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.பிரம்படி முதல் யாழ் வைத்தியசாலை வரை பலநூற்றுக்கணக்கான மக்களின் குருதியில் தோய்ந்து பொம்மை ஆளுநர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஈழத்தமிழ் மாநிலம்.பலநூற்றுக்கணககான பெண்களை பசியாறக் கொடுத்து இந்திய இராணுவத்தால் ஜனநாயக முறைப்படி காவல் காக்கப்பட்டதை வசதியாக மறைக்கும் ஜெயகாந்தன் ராமுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர் இல்லை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

12 Comments:

At 5:54 PM, Blogger அன்பு said...

இந்த சிவக்குமார் என்பவர் யார்? எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் தோன்றுகிறார்? அவரைப்பற்றி ஏன் பொருட்படுத்தவேண்டும் என்றே தெரியவில்லை!

 
At 6:05 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

அன்பு அண்ணா பிரச்சனை வருகிறபோதுதானே நாட்டாமையும் வருவார்.பிரச்சனையில்லாவிட்டால் பஞ்சாயத்துக்கேது இடம்

 
At 6:30 PM, Blogger Unknown said...

//இதனை சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி மாறிக்கொள்ளும் குள்ளநரித்தனம் என்றும் குறிப்பிடலாம் அல்லது சிவகுமார் சொல்ல வருவது மாதிரி இராசதந்திரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.//

சிவக்குமாருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்துவது இது!

தமக்குப் பிடித்தவர் செய்தால் இராசதந்திரம்!

மற்றவர் செய்தால் குள்ளநரித்தனம்!!

சரிதானா?

 
At 6:32 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Well done and well said. Jayakanthan is loyal to Nehru
family and for him that loyalty
is equal to being a patriot.

 
At 7:25 PM, Blogger சுந்தரவடிவேல் said...

என்ன இருந்தாலும் ஆங்காங்கே பிய்ந்து தொங்கும் ஒரு "அரசியல்" கட்டுரையை எடுத்துப் போட்டு ஞானபீட ஜெயகாந்தனின் ஞானத்தை இப்படிக் காலம் கடந்து அம்பலப் படுத்தியிருக்க வேண்டியதில்லை!

எல்டிடிஈ இருந்த இடத்தில் எந்த இயக்கம் இருந்திருந்தாலும் இந்தியாவும் இந்துராமும் இப்படித்தான் இருப்பார்கள்.
1)இலங்கையில் தமிழர்களை இந்தியாவுக்கு ஒடுங்கிய, அதே நேரத்தில் கலகக் குழுவினராக வைத்திருப்பதையே இந்தியா விரும்புகிறது என்று புஸ்பராஜா முதற்கொண்டு பலரும் அறிந்து சொல்லியான பின்பும்,
2)ராம்வோச்சர் முதற்கொண்டு பல பதிவுகள் இந்து ராமின் இலங்கைத் தமிழர் குறித்த அப்பட்டமான திரிப்புக்களை, பிபிசி, ராய்ட்டர் போன்ற செய்தித்தளங்களும் இந்துவும் பயன்படுத்தும் வார்த்தைகளை நோண்டிப் பிடித்து, சொல்லி வரும் போதும்,

3)ஐபிகேஎப் காலத்திலிருந்து, மைலாய் முதற்கொண்டு, சுனாமி உட்பட எல்லாக்காலங்களிலும் தன் பத்திரிகை தர்ம வாயை மூடிக்கொண்டு பேரினவாத அரசாங்கத்துக்கு இந்து வால் பிடித்ததை உலகமே அறிந்த பின்னும் ,

4) நிமலராஜன், தராக்கி உட்படப் பல ஊடகவியலாளர்களைக் கொன்றும், இன்றளவும் பயமுறுத்தியும் வரும் எதேச்சாதிகாரர்களின் சதிகள் வெளியிலே வந்து கொண்டிருக்கிற போதும்,

இன்றைக்கு இந்து ராமுக்கு பத்திரிகை தர்மத்துக்காக இலங்காரத்ன விருது கிடைக்கிறதென்றால் அதனைப் பாராட்டுபவர்களின் அறியாமையைப் புரிந்து கொள்ளலாம், அல்லது அவர்களது வாய்மையையும், மக்களைச் சுரண்டும் போலி ஜனநாயகவாதிகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்றையும் கண்டு கொள்ளலாம்.

 
At 7:56 PM, Blogger ROSAVASANTH said...

ராம் முன்னாடி ஆதரித்தார் என்ற 'தகவலை, வைத்து எந்த முடிவு எடுக்க முடியும் என்று புரியவில்லை. பிரச்சனை ராமும், இந்துவும் இதுவரை மாறி மாறி எழுதிய, புனைந்த, தர்க்கங்கள் சந்திரிகா போன்ற நாசுக்கு ரேசிஸ்டுகளுக்கு அளித்த விமர்சனமற்ற ஆதரவு, சோவிடம் கடன் வாங்கிய தர்க்கம், இவற்றை முன்வைத்துதான் பேசமுடியும். கடந்த 5 ஆண்டுகள் இந்து படிக்கும் எவருக்கும் இந்துராமின் கண்மூடித்தனமான புலி எதிர்ப்பு, கண்மூடித்தனமான சந்திரிகா ஆதரவை தவிர வேறு எதுவும் தென்பட வாய்பில்லை. விருது கிடைப்பTகர்கான தகுதியும் அதுவன்றி இம்மியளவு கூட வேறில்லை. (Pl bear with speling mistakes, if any).

 
At 8:54 PM, Blogger மு. மயூரன் said...

இருக்கிறீங்களா சார்...?

 
At 8:54 PM, Blogger Thangamani said...

//இந்து ராம் மட்டுமல்ல இன்னபிற இந்தியத் தேசியவாதிகள் விடுதலைப் புலிகளையும் மற்ற இயக்கங்களையும் ஆயுதம் கொடுத்து,பயிற்சியும் கொடுத்து போராடத் தூண்டியதற்கு முக்கிய காரணம் ஈழத்தமிழர் மேலிருந்த அக்கறை என்பதை விட இந்தியாவின் நலனில் உள்ள அக்கறை என்பதே பொருத்தமாக இருக்கும்.//

இதை மறுக்கிறேன் ஈழநாதன். இந்தியாவின் நலனெல்லாம் இல்லை. தனிப்பட்ட அரசியல்வாதிகள்/ குழுக்களின் நலனே காரணம் எனலாம். இந்திரா தனது தனிப்பட்ட நலனுக்காக சீக்கியபயங்கரவாதத்தை ஆதரித்ததையும், எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததையும் பார்க்கும் போது இன்னொருநாட்டில் சிலரை ஆதரிப்பதில் என்ன நாட்டு நலன் இருக்கமுடியும். அதே போல இராசீவ் போபோர்ஸ் குற்றச்சாட்டில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளில் ஒன்றே இலங்கை இந்திய ஒப்பந்தம். இதற்காக எவ்வாறான முயற்சிகள் நடந்தன என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் நீங்கள் இந்திய நலன் என்றெல்லாம் புனிதப்படுத்தவேண்டாம்.

இதில் ஜெயகாந்தன் கண்டிப்பாக எந்தப்பக்கம் இருப்பார் என்பதும் எளிதில் புரியக்கூடியதுதான்.

வாழ்க மார்க்சீயம்!

 
At 10:14 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நன்பர்களின் கருத்துக்கு நன்றி.இது தொடர்பில் ஸ்ரீகாந் மீனாட்சி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

உள்மனதை உள்ளபடி சொல்லியிருக்கிறார் ஸ்ரீகாந்.அவருக்கு நன்றி

 
At 10:59 AM, Blogger குழலி / Kuzhali said...

//வரலாறு என்பது ஒற்றைப் பரிமாணமுள்ளது அல்ல அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு அவற்றின் பரிமாணத்துக்கேற்ற மாதிரி அவற்றைப் பார்க்கவேண்டும் எம் கண்ணுக்கு வண்ணக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் வரலாறும் எமது கண்ணாடியின் நிறமாகத்தான் தோன்றும்.எதையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்வதற்கு முன்னாலே வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.
//
மிகவும் உண்மையான கருத்து

 
At 11:05 AM, Blogger கரிகாலன் said...

நீண்டநாட்களுக்கு பின்னர் நல்லதொரு
விடயத்துடன் வந்திருக்கிறீர்கள் ஈழநாதன்.

 
At 9:26 PM, Blogger Vaa.Manikandan said...

amaangga! yaaru sivakumar?

 

Post a Comment

<< Home