Thursday, September 22, 2005

நான்கு குறும்பாக்கள்

ஆங்கிலத்தில் Limarics என்றழைக்கப்படும் குறும்பாக்களை தமிழில் அழகாகவும் சுவையாகவும் செய்தவர் மகாகவி.து.உருத்திரமூர்த்தி.

அவரது நூறு குறும்பாக்கள் 'சௌ'வின் கருத்தோவியங்களுடன் மித்ர பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளன.'சௌ'வின் ஓவியங்கள் வருடியில் தெளிவாக வரவில்லை ஆகவே எனக்குப் பிடித்த நான்கு குறும்பாக்களை மட்டும் இடுகிறேன்.


பெஞ்சனிலே வந்தழகக் கோனார்
பெருங்கதிரை மீதமரலானார்.
அஞ்சாறு நாள் இருந்தார்
அடுத்த திங்கள் பின்னேரம்
பஞ்சியிலே இறந்து போனார்.

0000000000000000000000000

சொந்தத்திற் கார்,கொழும்பிற் காணி,
சோக்கான வீடு,வயல்,கேணி
இந்தளவும் கொண்டுவரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி

0000000000000000000000000000000

குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்
குவலயமே நடுங்க அரசாண்டான்.
"உலாத் தங்கள் பேரில்,இதோ!"
-ஒரு புலவர் குரலெடுத்து"
நிலாத்திங்கள்...." எனத் தொடங்க, மாண்டான்

00000000000000000000000000000000

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்தமின்றி,வந்தவனின்
கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான்.போனான் முச்சூலன்

0000000000000000000000000000000000
குசும்பாக எழுதினாலும் ரசிக்கும்படி குறும்பாக எழுதும் குசும்பனுக்கு இக்குறும்பா

பிற்குறிப்பு:இந்தக் குறும்பாக்களைப் படித்து ரசிப்பதோடு மட்டுமன்றி சிறப்பாக குறும்பா எழுதும் ஒருவருக்கு பரிசு வழங்கும் உத்தேசம்.எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

14 Comments:

At 11:45 PM, Blogger இளங்கோ-டிசே said...

குறும்பாக்களுக்கு நன்றி ஈழநாதன். இதை வாசிக்கும்போது முந்தி சரிநிகரில் வாசித்த் குறும்பாக்களும் நினைவுக்கு வருகின்றது.

 
At 11:47 PM, Blogger இளங்கோ-டிசே said...

பெயரிருந்தும் படம்போட்டு பெயர்மறந்தார் பெயரிலி
கதிர்காமஸுக்கு செரிமரத்தைக் கண்டால் ஞாபக அலையடிக்கிறது
பெங்களூரு காலேஜூ
பரிசோதனை எலியாக
நம் 'பேச்சிலர்' கிளப்பிலிருந்து
ஓடிய பாலாஜி-பாரியை
கவ்வியது ஒரு 'கிளி'
சூருட்டுப் பிடிக்கார் எல்லாம் சுருண்டுகிடப்பார் என்று
தும்புக்கட்டையால் சாபமிடும்
மொன்றியல் 'Bewitched' Nicole Kidman
வாத்து மம்மியானதா மம்மி வாத்தானதா
என மூளையைக் கசக்கி
ஆற்றுகின்றார் தேநீர்
அலாஸ்கா அறிஞர்
கொளுவினாலும், கொழுவினாலும் நீதான் என் வசந்தம் என்கின்றார் சைக்கிளைப் பார்த்து வன்னியன்
இவை அனைத்தும் கண்டு நொந்தாலும்
இக்கணமே J.Loவின்பால்
சிந்தை இழப்பான் டிசே

(நெடும்பா; போட்டிக்கு அல்ல :)) )

 
At 11:53 PM, Blogger SnackDragon said...

குரூப்பாய் இங்கே கவியெழுத
குறும்பா விட்ட குறும்பா
கரும்பாய் இனிக்குது பா(ர்)
குறும்பாய் விரி கனவு விரி :-)

 
At 11:53 PM, Blogger era.murukan said...

ஈழநாதன்,

நம்ம ரமணி மன்றமையத்தில் இரண்டு வருடம் முன் மஹாகவியின் எல்லாக் குறும்பாக்களையுமே எடுத்துப் போட்டிருந்தார். துலேன் பல்கலைக் கணினியிலும் வைத்திருந்ததாக நினைவு. கிடைத்தால் அத்தனையையும் வலைப்பதிவில் இடலாம். ஒவ்வொரு குறும்பாவும் ஒரு முத்து.

மஹாகவியின் 'சிறுநண்டு மணல்மீது' ஒலிக்கோப்பு இணையத்தில் இருக்கிறதா?

 
At 12:05 AM, Blogger era.murukan said...

நான் எழுதிய சில குறும்பாக்கள் :

சங்கீத மும்மூர்த்திகள்
----------------------

தியாகய்யர் தெருப்பாடிப் போனார்
தீந்தமிழில் குரல்கேட்டு நின்றார்
மதிவேண்டும் நின்கருணை
துதிகேட்டு பாகவுந்தி
நிதிசால சுகம்லேது எடுத்தார்.

சென்னைக்குத் தீட்சிதரும் வந்தார்
செண்ஜார்ஜு கோட்டைக்குப் போனார்.
இங்க்லீசு இசைகேட்டு
இருகீர்த்த னம்மெழுதி
குருகுஹவ்விஸ் இட்கேட்டார் சிரித்தார்.


(இரண்டாம் குறும்பாவில் கொஞ்சம் உண்மை கலப்பு உண்டு)

சாத்திரியார் பாட்டிசைக்க லானார்
ராத்திரியும் நீண்டுபோகக் காணார்
சாமாநீ போய்ப்படுடா
மாமாக்கும் பாய்போட்டேன்
சியாமகிருஷ் ணசோதரியும் போனார்.


பிற
----
அனந்தையிலே பெண்கொடுத்தான் நம்பி
ஆடிக்கு அழைத்திடவி ரும்பி
அவன்போக "இட்டலி-தா;
ஆவியிலே புட்டும்வை
சம்மந்தி அரை"யென்றார் தம்பி.

(சம்மந்தி - மலையாளத்தில் சட்னி
தம்பி - மலையாளத்தில் அரச குலம் சார்ந்த துணைப்பெயர் - இறையிம்மன்
தம்பி போல்)

தமிழய்யா போட்டபழத் தோட்டம்
தம்பிகளுக் கெல்லாம்கொண் டாட்டம்
காய்முன்னேர் விளமுன்னேர்
கவிஎழுத அவர்போக
மாமுன்னேர் நிற்கின்றான் வாண்டன்.

(ஈழத்து மஹாகவியின் குறும்பா இலக்கணப்படி

காய் காய் தேமா
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா
)


நண்பர் அபுல் கலாம் ஆசாத் எழுதிய குறும்பாக்கள்

1.
ஆண்டாண்டு அரபுலகில் வேலை
ஆனாலும் அரபுபேச வில்லை
ஆசிரியர் வைத்தாலும்
அரிச்சுவடி பிடித்தாலும்
'அன்தாகை·ப் ஆனாக்வைஸ்' தொல்லை!

அன்தா கை·ப் = நீ எப்படி
ஆனா க்வைஸ் = நான் நலம்

2.
காசோலை வரிசையிலே நின்று
கால்கடுக்க நேரத்தைக் கொன்று
பணமனுப்பி வைத்தபின்னே
பாமரனாய் நின்றேனே
பணவீக்கம் என்றால்என் னென்று!

 
At 12:05 AM, Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

 
At 12:07 AM, Blogger SnackDragon said...

நெடும்பாக்கு வந்த இடும்பா?

படம் போட்டதும் பெயர் மறந்ததா
பெயர் மறந்ததும் படம் போட்டாரா?
கிளி கவ்வியதும் எலி ஓடியதா?
எலி ஓடியதும் கிளி கவ்வியதா?
சுருட்டு பிடிப்பதால் சுருண்டு வீழ்வரா?
சுருண்டு கிடப்பதால் சுருட்டு பிடிப்பரா?
தேநீர் ஆறினதால் மூளை கசங்கியதா?
மூளை கசங்கியதால் தேநீர் ஆறியதா? :-)

 
At 12:18 AM, Blogger கொழுவி said...

ஈழநாதன், குறும்(புப்)பாக்களுக்கு நன்றி.
வாசிக்க இனிமையானது மரபுதான்.
அதன் சந்தம் எப்போதும் மனத்தை வருடும்.
குறிப்பாக நேரிசை வெண்பாக்கள் எப்போதும் என் முதற்றர இரசனைக்குரியவை.
கோணேசக் கவிராயர் என்றபேரில் புதுவை எழுதிய வெண்பாக்கள் எனக்குப் பிடிக்கும்.
மகாகவியின் நையாண்டிகளும்.

சிறுநண்டு மணல்மீது கவிதை, பலரால் இசைக்கப்பட்டதாக நினைக்கிறேன். இசைவாணர் கண்ணனால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டதாக நான் அறிந்ததுண்டு. சின்னவயசில பள்ளிக்கூடத்திலயும் சொல்லித்தந்தவை.
-----------------------------------
டி.சே.,
சின்ன வரிக்குள்ள எவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்லிப்போட்டியள்.
எனக்கு உங்கட ___பாவில விளங்காதது என்னெண்டா "கொளுவினாலும்" எண்டதுதான்.
நான் கொழுவிறதா நினைக்காதையுங்கோ.

ஈழநாதன்,
ஒருத்தரும் பா எழுதப்போறேல. பேசாமல் டி.சேக்கே பரிசைக் குடுத்துவிடும்.

 
At 3:36 AM, Blogger Thangamani said...

//குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்
குவலயமே நடுங்க அரசாண்டான்.
"உலாத் தங்கள் பேரில்,இதோ!"
-ஒரு புலவர் குரலெடுத்து"
நிலாத்திங்கள்...." எனத் தொடங்க, மாண்டான்//

இதற்கு அப்புறமும் நான் பாட்டெழுத முடியுமா?

:))

நல்ல பதிவு. பாக்களை இரசித்தேன். தேநீரை ஆற்ற வேண்டியதுதான்; குளிர்காலம் விரைந்து வருகுது!

 
At 12:11 PM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

தமிழ்மணத்திலே பலரும் வழங்குவர் பதிவுகளை வாரி
வாசிக்கையிலே இருக்கையை விட்டெழுவார் மேலதி காரி
சாளரத்தைச் சொடுக்காவிட்டால் மாறி
கண்மணியே - வேலையிலே எல்லாம் நாறிவிடும் நாறி!

- சொந்தக்கதைதான்! ;O)

 
At 10:35 PM, Blogger சின்னவன் said...

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
என் மர மண்டைக்கு இது புரியுமா
கத்துக் கொடுத்த வாத்தியாரின் பெண் சுட்டி
ஒரு வெள்ளைக்காரனை கல்யாணம் கட்டி
இப்ப கான்வெண்டில் படிக்குது அவளின் குட்டி
குசும்பன் குழலி வீஎம் முகமூடி
படிக்கிறேன் அனைத்தும் தினமும் வாய்மூடி
பெரியவங்க போடறாங்க படம் வாத்து
புரியாத பின்னூட்டங்கள் அதில் பாத்து
பாட்டு லிங்கை கிளிக்கினால் வெறும் காத்து

 
At 2:52 AM, Blogger பத்மா அர்விந்த் said...

நல்ல குரும்பாக்கள் ஈழநாதன்.

 
At 5:07 AM, Blogger Chandravathanaa said...

ஈழநாதன்,
குறும்பாக்களுக்கு நன்றி.

 
At 10:29 AM, Blogger Kanags said...

ஈழநாதன், மகாகவியின் குறும்பாக்கள் மிக அருமை. மகாகவியின் நாடகம் ஒன்று கொழும்பில் என்னுடைய கணித ஆசிரியர் அரியரத்தினம் அவர்களின் நெறியாள்கையில் மேடையேறியபோது பார்த்த நினைவுகள் வருகிறது. பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை.

 

Post a Comment

<< Home