Monday, November 21, 2005

காட்டுமிராண்டிகள் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இளைஞனை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

இது பற்றி நிறைய எழுதினேன் கடைசியில் எனக்கே கோபத்தில் உளறுவதாகப் பட்டதால் அழித்துவிட்டேன்.

இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு எதற்குப் போராட்டம் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஒருத்தனை அடித்தே கொல்ல முடியும் அதுவும் பொதுமக்கள் சேர்ந்து என்றால் யாழ்ப்பாணம் எந்தளவு வளர்ச்சி அடைகிறது என்று சொல்லத் தேவையில்லை.

இந்த மிலேச்சக் கூட்டத்தில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.

இவன் ஒரு சமூக விரோதி இவனுக்கான தண்டனையை நீங்களே தீர்மானியுங்கள் என்று எழுதிய ஒரு வாசகம் போதும் இந்த நீதி தேவதைகளை உசுப்பேற்றி விடுவதற்கு.ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் சமூக விரோதி இளைத்தவன் ஒருவன் கிடைத்தால் நீதி தேவதையாகிவிடுகிறான்.

நாளைக்கே இராணுவம் புலி இயக்க உறுப்பினன் ஒருவனைப் பிடித்து கையையும் வாயையும் கட்டி சமூக விரோதி என்று எழுதிப் போட்டால் போதும்.அவனை யார் இன்னார் என்று விசாரிக்காமல் அடித்தே கொன்றுவிட்டு நாட்டைக் காப்பாற்றிய சந்தோசத்தில் போகும் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம்.

இந்தச் செயற்பாட்டில் தாங்கள் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றி புலிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.இல்லாவிட்டால் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி

யாழ்ப்பாணத்து மக்கள் மெல்ல மெல்ல தீவிர மனச்சிதைவுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் பயமாகவிருக்கிறது

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

8 Comments:

At 5:48 PM, Blogger ஜோ/Joe said...

ஈழநாதன்,
என்னாச்சு? நல்லா தானே இருந்தீங்க?

 
At 6:01 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ஜோ அளவற்ற ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன் அதனால் அழித்துவிட்டேன்.நீங்கள் பார்க்கும் போது தலைப்பு மட்டும் தெரிந்திருக்கிறது

 
At 6:06 PM, Blogger ஜோ/Joe said...

ஓ!செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது .உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்

 
At 9:30 PM, Blogger பிருந்தன் said...

காட்டுமிராண்டிக் கலாச்சாரம்

யாழ்ப்பாணக் குடநாட்டு மக்கள் மன அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டிருப்பது குறித்து அடிக்கடி நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகள் வெளிக்காட்டி வந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நடுத்தரவயது மக்களில் பாதிக்குமேல் -உண்மையில் எந்தவித நோயும் இல்லாமல்- உளவியல் அழுத்தத்தினால்தான் தமக்கு நோய் இருப்பதாகக் கருதிச் சிகிச்சைக்கென வருகிறார்கள்.

மிலேச்சத்தனமான முறையில் மூன்று மணித்தியாலங்கள் - கதறிய தாயையும், சகோதரியையும் பொருட்படுத்தாமல்- மக்கள் தாக்கினார்கள் என்றால், அந்த மக்களது உளவியல் பிறள்வினை என்னால் அறிந்துகொள்ள -புரிந்துகொள்ள- முடிகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போது பெருகிவரும் தொடர் கொள்ளைகள் அந்த மக்களை மேலும் பதட்டத்திலும் திகிலிலும் ஆழ்த்தியிருக்கின்றன.

மன அழுத்தத்துடன் வடிகால் இல்லாது அலையும் மக்கள்.

அவர்கள் முன்னே அந்த மக்களால் பெரிதும் மதிக்கப்படும் 'கலாசாரம் பேணும் குழுவினரின்' பெயரில் 'இவன் கொள்ளையன் நீங்களே தண்டனை வழங்குங்கள்' என்று இனங்காட்டும் அறிவித்தல்.

இந்த நிலையில் அந்த மக்கள் என்ன தண்டனையைக் கொடுப்பார்கள் என்பது அந்த அறிவித்தலை எழுதிவைத்துவிட்டுப் போனவர்களுக்கு -அது எவராக இருப்பினும்- தெரியாத விடயமல்ல.

இப்படி சமூகக் குற்றங்களுக்கான தண்டனையை மக்களிடமே தீர்ப்புக்கு விடுவது எதிர்காலத்தில் பாரது}ரமான சமூகக் குற்றங்களுக்கே வழிகோலும்.

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுபோல தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ளவும் இந்த முறையை எவரும் நாடும் சூழ்நிலை உருவாகும்.

எனவே இதை யார் செய்திருந்தாலும் என்ன நோக்கத்திற்காகச் செய்திருந்தாலும் அதனை என்னால் ஏற்க முடியாது.

ஒரு உயிரை அடித்தே கொல்வது எவ்வளவுது}ரம் அந்த உயிருக்கு வேதனையைக் கொடுக்கும் என்பது தொழில் முறையில் எனக்கு நன்கு பரிச்சயம் என்பதும் நான் இச்சம்பவத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதற்கு ஒரு காரணம்;.

வீரச்சாவடைந்த சங்கரண்ணா முன் ஒருதடவை கொள்ளைக் குற்றத்துடன் பொதுமக்களால் ஒருவர் நிறுத்தப்பட்டார். அந்தப் பொதுமகனைத் தீர விசாரித்த அவர் - வறுமையால் திருடியதை அறிந்து -அரிசி, பருப்புடன் காசும் வழங்கி சொந்தத் தொழில் செய்யுமாறு அனுப்பிவைத்திருந்தார்.

அப்படியான தளபதி இருந்து வளர்ந்த அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு இவ்வாறான சம்பவங்களையிட்டு மேலும் பொறுமை காக்கக் கூடாது.

இந்த இளைஞன் திருடனானதற்கு என்ன காரணம்? வறுமை தான் காரணம் எனில் இனி அந்தக் குடும்பத்தை யார் கவனிப்பது??

எவருமே பிறக்கும்போதே திருடர்களாகப் பிறப்பதில்லை. எனவே தற்போது யாழில் பெருகியுள்ள திருடர்களின் பின்னணி ஆரயப்படவேண்டும்.

அவர்கள் திருடர்களானதற்கு வறுமைதான் காரணம் எனில் அதற்கு மரணம் தண்டனையல்ல! வேறு காரணங்களால் திருடர்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அதற்கான தண்டனையை வழங்கவேண்டியது பொதுமக்களல்ல!!

மக்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதென்பது வேறு. தம்முள் ஒருவனுக்குத் தண்டனை வழங்க முற்படுவதென்பது வேறு. முன்னையதை நியாயப்படுத்தலாம். பின்னையதை எவ்விதத்திலும் ஏற்கமுடியாது. அவன் தேசத்துரோகியாக இருந்தாலும் கூட. ஏனெனில் இது இப்படியே அனுமதிக்கப்பட்டால் -நண்பர்கள் குறிப்பிட்டதுபோல-எவரும் எவரையும் கொன்றுவிட்டு கொல்லப்பட்டவரைத் தேசத்துரோகியாக்கிவிடும் அவலம்தான் இறுதியில் எஞ்சும்.

அது அப்படியிருக்க, நண்பர் வசம்பு அவர்கள் " அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெருவில் கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் வந்த உருந்துருளி அணியினர் சிலர் அந்த இளைஞர்களின் தலையிலும், முதுகிலும் தாக்கினர்" என்ற சாரப்பட குறிப்பிட்டிருந்தார்.

இதனை யார் செய்திருந்தாலும், செய்த நோக்கம் எதுவாயிருப்பினும் தாக்கப்பட்டது தலையிலாயின் அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

யாழ்ப்பாணம் மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தமிழ் இளையோர் தமக்குத்தாமே தலையில் அடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வருவதும் அதன் பக்க விளைவுகள் குறித்தும் தகவல்கள் வெளியான நிலையில், அதே இளையவர்களை திருத்துவதற்காக என்று கூறி அவர்களது தலையிடிப்பது எமது தலையில் நாமே அடிப்பதற்கு ஒப்பாகும்.


வருத்தத்துடன் திரு

குறிப்பு:இந்த மடல் தனிமடலில் அனுப்பப்படுவதால் இரகசியமாக வைக்கப்படவேண்டும் என்பதல்ல. தாங்கள் விரும்பும் எவருக்கும் பரிமாறிக்கொள்ளலாம். இந்தக் கருத்தைப் பகிரங்கமாகச் சொல்லவே நான் விரும்புகிறேன்.

 
At 11:06 PM, Blogger கரிகாலன் said...

உண்மையிலையே வருத்தம் தரும்
ஒரு விடயம்.

 
At 12:12 AM, Blogger மு. மயூரன் said...

//அப்படியான தளபதி இருந்து வளர்ந்த அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு இவ்வாறான சம்பவங்களையிட்டு மேலும் பொறுமை காக்கக் கூடாது. //

வேண்டாத இடத்தில் புலிகளை புனிதப்படுத்த முயல்வது எரிச்சலூட்டுகிறது.

இத்தகைய கலாசாரம் யாரால் அமைப்பு ரீதியாக கட்டி வளர்க்கப்பட்டதென்கிறீர்கள்?

எமது சமூகம் அரசியல்மயப்படுத்தப்படுவதற்குப் பதிலாக வன்முறைமயப்படுத்தப்பட்டுள்ளது.

 
At 12:21 AM, Blogger கொழுவி said...

மயூரன்,
இங்கே பிருந்தன் என்ற பெயரில் வந்த கருத்து ஈழநாதனின் இப்பதிவுக்கு வந்தகருத்தன்று.
வேறெங்கோ ஏற்கெனவே எழுதப்பட்டதை இங்கே வந்து ஒட்டியிருக்கிறார்கள். எழுதப்படும் தளங்களைப் பொறுத்துத்தானே கருத்துக்கள் வரும்?

 
At 12:47 AM, Blogger இளங்கோ-டிசே said...

ஈழநாதன் இந்தக்கொலை உட்பட, பாடசாலை அதிபர்களின் கொலைகள், அப்பாவிப் பொலிஸை அடித்துக்கொன்ற சம்பவங்கள் அனைத்தும் 80களின் இறுதிப்பகுதிகளை நினைவுபடுத்துகின்றது. பதினைந்து வருடங்கள் கழிந்தபின்னரும் இன்னமும் எமது சமூகம் பின்னோக்கிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தப்படுவதைவிட வெட்கபபடவே வேண்டியிருக்கிறது. இதைத்தானா இத்தனை வருட கோர யுத்தமும், 'சாமாதனமும்' நமக்கு கற்றுத் தந்திருக்கின்றதென்பது ...... :-(?

 

Post a Comment

<< Home