Monday, March 14, 2005

பதுங்குகுழி நாட்கள்

.

ஆசிரியர்:பா.அகிலன்
வகை:கவிதைகள்
விலை:ரூ.45.00
வெளியீடு:குருத்து/காலச்சுவடு

மதிப்புரை : ஆர் முத்துக்குமார்

பா. அகிலன் ஈழத்தை சேர்ந்த கவிஞர். 1990 களில் எழுத்துலகத்தில் அடியெடுத்து வைத்த இவர் சேரன், வ.ஜ.ச. ஜெயபாலன் போன்ற படைப்பாளிகளின் கவிதைகளிலிருந்து தனக்கானஉந்து சக்தியை பெற்றதாக அவரே கூறுகிறார். ஈழத்துக்கவிதைகளில் 80க்கு முந்தைய படைப்புகளில் பெரும்பாலும் பொதுவான பிரச்சினைகளை பேசப்பட்டுவந்தன. கா. டோனியலின் 'பஞ்சமர்' நாவல் உள்ளூர் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வட்டார மொழிச்சிலேடைகளுடன் பதிவு செய்திருந்தது. கலவரங்களுக்கும், சிங்கள பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்துக் விடப்பட்ட காலங்களுக்கும் பிறகு வந்த கவிதைகள் பெரும்பாலும் இழந்தவைகளின் நினைவாகவும், பதுங்குகுழியில் கழித்த பெரும்பீதி அழலங்களைப்பற்றியும், இழந்த உடைமை, இழந்த பண்பாட்டுச் சின்னங்கள், இழந்த இறந்த உறவுகள் பற்றியதுமான கவிதைகளாக மாற்றம் அடைந்தது.

புலம் பெயர்ந்தவர்கள் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாக தங்கள் அறிவியக்கத்தை, படைப்பியக்த்தைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர். ஒரு சாரார் சிங்கள எதிர்ப்பு மற்றும் அமைதி வேண்டி தங்களின் நினைவுகளை மீட்டெடுக்கின்றனர். இன்னொரு சாரார் தமிழ் ஈழப் போராளிகளின் செயல்பாடுகளையும், சாதிய மேட்டிமைகளையும் கண்டித்தே தங்கள் படைப்பு மற்றும் அறிவியக்கத்தை வளர்த்திருக்கின்றனர். இந்தப் பெரும் பிரிவில் சேரன், பா. அகிலன் போன்றவர்கள் முந்தையதையும், ஷோபா சக்தி, கலாமோகன், கற்சுறா போன்ற `எக்சில்' குழுவைச் சேர்ந்தவர்கள் பிந்தையதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஒளி அச்சுக்கோர்வை, அல்லது கிராபிக்ஸ் பயன்படுத்திய பிறகு கவிதைக்குக் கீழே ஆனி, ஆவணி என்று 'தமிழ்' மாதங்களின் பெயர் இடப்படும் கருத்தாக்கம் என்னவென்று நமக்கு புரியவில்லை.

பொதுவாக ஊரைவிட்டு, நாட்டைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி பின் மீண்டும் நினைவகத்துள் அதை மறு நினைவு படுத்துதல் என்பது அந்தந்த தருண நிகழ்வுகளின் மறுகற்பனை செய்யப்பட்ட பதிவுகளாகத்தான் இருக்கும். இந்த துரதிஷ்டம் அதாவது Emotions recollected in Tranquility என்ற டி.எஸ்.எலியட் கூறும் படைப்பு அனுபவத்திற்கும், உண்மையாக ஒருவன் அதை அனுபவிக்கும் தருணத்திற்கும், காத தூரம் அல்லது பேரியடைவெளி உண்டு. உண்மையில் இந்த `இடைவெளி' தான் படைப்பின் உந்து சக்தி. இதைத்தியானம் செய்யும் கவிஞன் ஒரு `எதிர்-ரொமான்டிக்' தளத்திலேயே செயல்படுவான். ஆனால் பா. அகிலனின் கவிதைகள் ரொமாண்டிக் தன்மைகளுடனேயே தேங்கிவிடுகிறது.

பதுங்கு குழி பற்றிய பயங்கர அனுபவங்களினூடே கூட சிறு ரொமாண்டிசிசம் தலைதூக்குகிறது. உதாரணமாக "பதுங்கு குழி நாட்கள் - III" என்ற கவிதையில் `நிர்மலவானம்' என்ற வரியும் - "பதுங்கு .IV" என்ற கவிதையில் "குருதியோலம்" கேட்கும் போதே "குருவிச் செட்டைகளும், பூவின் மென் இதழ்களும் வீழ்ந்தனவாம்" என்ற வரியும், மனித ஓலத்தைத் தாண்டிய ரொமாண்டிக் போலித்தனங்கள் நிறைந்த கற்பனையாகவே இருக்கிறது. உண்மையில் பதுங்கு குழி அனுபவங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? அனுபவத்தின் எல்லையற்றதன்மை' என்றெல்லாம் பேசத் தெரிந்த பா. அகிலன் வார்த்தையிலேயே எல்லா உணர்வுகளையும், அனுபவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கை கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

அனுபவம் அது பயங்கர அனுபவமோ அல்லது சாதாரண அனுபவமோ அதன் நடப்பின் இயல்பிலேயே படைப்புத்தளமும் அமைய வேண்டும். ஆனால் பா. அகிலன் `சொற்களின் யாத்திரை' அல்ல வார்த்தைகளின் பூஜிய எல்லைகளுக்குள் சிக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. பக்கம் 20ல் உள்ள `கிராமங்களின் மீதொரு பாடல்' என்ற கவிதையில் முதல்பகுதியில் `எனக்குத் தெரியாது' என ஆரம்பித்து ரொமாண்டிக் உணர்வகளும், பகுதி இரண்டில் அறிந்த கிராமங்கள் என்று நினைவு ஏக்கங்களும் வருகிறது. அதுவரை கவிதை பரவாயில்லை என்று தோன்றும்போதே பகுதி-மூன்று `ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் ஒரு நாள் சூரியன் எழுந்து புலர்ந்ததாம்.' என வரும் அதீத நம்பிக்கை வாழ்க்கைக்கு தேவை. ஆனால் கவிதைக்குத் தேவையில்லை அதனாலேயே அது சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.

எல்லோருமே அவரவர்களின் ஆதி-புரதானங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களே, பயங்கர அனுபவங்கள் நினைவுபடுத்தும் புராதனம் உன்னதப்புராதனம், அதுவல்லாமல் சாதாரண அந்நியமாதல் அனுபவங்கள் கிளப்பும் புராதன நினைவு அவ்வளவு உன்னதமல்ல என்றெல்லாம் கூறமுடியாது. அவரவர்களுக்கான பயங்கரங்களும், அவரவர்க்கான ரொமாண்டிசிசமும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அதுஎவ்வாறு வெளிப்பாட்டு தளத்தில் கலையாகவோ இலக்கியமாகவோ பரிணமிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் மதிப்பீடு சார்ந்த நிலைப்பாடுகளும் ஏற்படும்.

கிராபிக்ஸ் - ஜிம்மிக்ஸ் செய்வதில் செலுத்திய நாட்டத்தை பா. அகிலன் கூடுதலாக கவிதைகளில் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நமக்கு ஏற்படும் உணர்வு நியாயானதே.

வெங்கட் சாமிநாதனின் சிறிய முன்னுரை மிகவும் வழக்கமான பழகிப் போன ஒன்றுதான் அதை யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம். பா. அகிலனின் 'பின்னுரை' வாசிக்க நன்றாக இருக்கும் நடையாகும். அதே இயல்பிலேயே கவிதைகளும் எழுதலாம். அனுபவங்களைப் பற்றி சிந்திக்கும்போது விஷயத்தில்தான் அதன் ஆழம் இருக்க வேண்டுமே தவிர யோசித்து யோசித்து வார்த்தைகளைப் போடுவதில் என்னாளும் கவிதானுபவம் நமக்குக் கிடைக்காது.
நன்றி:வெப் உலகம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

10 Comments:

At 2:00 PM, Blogger -/பெயரிலி. said...

/புலம் பெயர்ந்தவர்கள் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாக தங்கள் அறிவியக்கத்தை, படைப்பியக்த்தைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர். ஒரு சாரார் சிங்கள எதிர்ப்பு மற்றும் அமைதி வேண்டி தங்களின் நினைவுகளை மீட்டெடுக்கின்றனர். இன்னொரு சாரார் தமிழ் ஈழப் போராளிகளின் செயல்பாடுகளையும், சாதிய மேட்டிமைகளையும் கண்டித்தே தங்கள் படைப்பு மற்றும் அறிவியக்கத்தை வளர்த்திருக்கின்றனர். இந்தப் பெரும் பிரிவில் சேரன், பா. அகிலன் போன்றவர்கள் முந்தையதையும், ஷோபா சக்தி, கலாமோகன், கற்சுறா போன்ற `எக்சில்' குழுவைச் சேர்ந்தவர்கள் பிந்தையதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்./

இது மிகவும் அநியாயமான "வைச்சால் குடும்பி; சிரைச்சால் மொட்டை" பிரிகோடு :-(

/ஒளி அச்சுக்கோர்வை, அல்லது கிராபிக்ஸ் பயன்படுத்திய பிறகு கவிதைக்குக் கீழே ஆனி, ஆவணி என்று 'தமிழ்' மாதங்களின் பெயர் இடப்படும் கருத்தாக்கம் என்னவென்று நமக்கு புரியவில்லை./

இதிலே இவருக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு விளங்கவில்லை.

 
At 2:32 PM, Blogger ஒரு பொடிச்சி said...

This comment has been removed by a blog administrator.

 
At 2:45 PM, Blogger ஒரு பொடிச்சி said...

இந்த விமர்சனத்தை படித்துள்ளேன். பிரதிக்கு நேர்மை வழங்காத விமர்சனம். 'சிரிப்பு' வருகிற இடங்கள் எல்லாம் அப்படியொன்றும் சிரிப்பு வரவில்லை. ஒரு கோரத்தை எப்படி ஒருவர் வெளிப்படுத்தவேண்டும் என முத்துக்குமார் நினைப்பதிலையே பிரச்சினை இருக்கிறது. சேரன் ஜெயபாலன் பாதிப்பு இருக்கென்று அவர் சொல்லியிருந்தாலும் அவர்களுடைய பாதிப்புகள் கவிதையில் இல்லை, ரஸ்யக் கவிதைகளின் பாதிப்புத்தான் உண்டு. அதை இவர் 'றொமான்ரிஸம்' 'சிரிப்பு வந்தது' என்று எழுதுவாரா?
"பொதுவாக ஊரைவிட்டு, நாட்டைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி பின் மீண்டும் நினைவகத்துள் அதை மறு நினைவு படுத்துதல் என்பது அந்தந்த தருண நிகழ்வுகளின் மறுகற்பனை செய்யப்பட்ட பதிவுகளாகத்தான் இருக்கும். இந்த துரதிஷ்டம் அதாவது Emotions recollected in Tranquility என்ற டி.எஸ்.எலியட் கூறும் படைப்பு அனுபவத்திற்கும், உண்மையாக ஒருவன் அதை அனுபவிக்கும் தருணத்திற்கும், காத தூரம் அல்லது பேரியடைவெளி உண்டு. உண்மையில் இந்த `இடைவெளி' தான் படைப்பின் உந்து சக்தி. இதைத்தியானம் செய்யும் கவிஞன் ஒரு `எதிர்-ரொமான்டிக்' தளத்திலேயே செயல்படுவான். ஆனால் பா. அகிலனின் கவிதைகள் ரொமாண்டிக் தன்மைகளுடனேயே தேங்கிவிடுகிறது."
என்பதே ஒரு கருத்துத்தானே? இப்படித்தான் இருக்கவேண்டுமென்றில்லை.

 
At 2:59 PM, Blogger Vijayakumar said...

ஈழநாத், படத்தை எழுத்துக்கு அப்புறம் போடுங்களேன். தமிழ்மணத்தில உங்க எழுத்துக்கும் மற்றவர்கள் எழுத்துக்கும் நீண்ட இடைவெளி தோன்றுகிறது.

 
At 3:35 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி மற்றும் பொடிச்சி
முதற்கண் உங்கள் பதில்களுக்கு நன்றி,இந்தப் பதிவிலே இடப்படும் நூல்கள் மீது விமர்சனங்கள் மீதும் உங்கள் விமர்சனங்களை வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.அப்போது பரவலான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் ஈழத்தவர் நூல்கள் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தலாம்.இது தனியாக நான் மட்டும் செய்வது இயலாது.நீங்கள் இரண்டுபேர்,டி.சே,மதி,சந்திரவதனா போன்றோர் அவ்வப்போது படிக்கும் ஈழத்தவர் நூல்களைப் பற்றிய செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.இதை ஒரு நல்ல ஆரம்பமாக கருதுகிறேன்

முத்துக்குமாரின் விமர்சனம் மேம்போக்கானது.ஈழத்துக் கவிதைகள் பற்றிய பெருமளவு புரிதல் இன்றிய.புலம்பெயர் ஈழத்துப் படைப்பாளிகளை பெயரளவிலே மட்டும் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்று.
ஒரே நாட்டில் போர் நடக்கும் ஒரே சூழலில் ஒரே மக்கட் கூட்டத்திலிருந்து வந்த கவிஞர்களின் கவிதைகளில் ஒத்த தன்மை காணப்படுவது இயல்பும் இயற்கையும்.சேரனில் ஜெயபாலனின் பாதிப்பு இருக்கென்றொ ஜெயபாலனில் சேரனின் பாதிப்பு இருக்கென்றோ கூறிவிட முடியாது.மரணத்துள் வாழ்வோம் தொகுதியின் முன்னுரையை நீக்கிவிட்டுப் பார்த்தால் அத்தனை கவிதையும் ஒருவரால் எழுதப்பட்டவையாகவே எனக்குத் தோன்றுகின்றன.
இது ஒருவரால் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அல்ல ஒட்டுமொத்த படைப்பாளிகள் அனைவர் மீதும் போர் ஏற்படுத்திய பாதிப்பு.இந்த வித்தியாசத்தை அல்லது அடிப்படையை முத்துக்குமார் விளங்கிக்கொள்ளவில்லையென்றே தோன்றுகின்றது.

மாதங்களின் பெயரைத் தமிழில் குறிப்பிடுவதனா இவரது எள்ளல் குதர்க்கமாகவே படுகிறது கிராபிக்ஸ் பயன்படுத்தி நூல் தயாரிக்கும் ஒருவன் உள்ளேஎ மாதங்களின் பெயரைத் தமிழில் எழுதக்கூடாது என்று ஏதாவது விதிமுறை இருக்கா தெரியவில்லை.அநேகமான கவிஞர்கள் படைப்பாளிகள்(ஈழத்தவர்) காலத்தைக் குறிப்பிடும் போது ஆனி ஆடி என்றே குறிப்பிடுவது வழக்கம்.

இந்நூலை நான் வாசித்ததில்லை.அதன் தரம் பற்றி எதுவும் கூற முடியவில்லை.தெரிந்தவர்கல் பகிர்ந்து கொள்ளுங்களேன்

 
At 12:05 AM, Blogger சன்னாசி said...

//அதாவது Emotions recollected in Tranquility என்ற டி.எஸ்.எலியட் கூறும் படைப்பு அனுபவத்திற்கும்,//

டி.எஸ்.எலியட் அல்ல; வில்லியம் வர்ட்ஸ்வொர்த் (William Wordsworth).

 
At 12:56 AM, Blogger கறுப்பி said...

ஈழநாதன் அகிலனின் பதுங்குகுழி நாட்கள் ஈழத்துவாசகர்களால் அடையாளம் காணப்பட்ட கவிதைத் தொகுதி.
//அப்போது பரவலான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் ஈழத்தவர் நூல்கள் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தலாம்.\\
எதற்காக இப்படி ஒரு வேண்டுகோளை முன்வைத்தீர்கள் என்று கூற முடியுமா? அடையாளம் காணப்படாத எத்தனையோ தரமாக ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கனடாவில் வாரம் ஒன்று இரண்டு புத்தகவெளியீடுகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன. காரணம் பணவசதி. ஈழத்தில் வெறும் கைபிரதிகளோடு வெளியே வரமுடியாமல் மடிந்து விடும் படைப்புக்கள் பல. அந்த வகையில் அகிலனின் படைப்பு வெளிவந்து பலரால் பேசப்பட்டது. தங்களது வேண்டுகோள் எனக்குச் சிறிது சங்கடத்தைத் தருகிறது. தாங்கள் எதை மனதில் கொண்டு அப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை. குறுக்குவழி என்பது தங்கள் கருத்தாக இருக்காது என்று நம்புகின்றேன்.

 
At 3:47 AM, Blogger -/பெயரிலி. said...

/அடையாளம் காணப்படாத எத்தனையோ தரமாக ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கனடாவில் வாரம் ஒன்று இரண்டு புத்தகவெளியீடுகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன.
.........
ஈழத்தில் வெறும் கைபிரதிகளோடு வெளியே வரமுடியாமல் மடிந்து விடும் படைப்புக்கள் பல. அந்த வகையில் அகிலனின் படைப்பு வெளிவந்து பலரால் பேசப்பட்டது./

கறுப்பி,
ஈழநாதனுக்காக நான் பேசமுடியாது. அவர்தான் பதில் சொல்லவேண்டும். ஆனால், எனக்கென்றால், 101% நீங்கள் விரும்புகின்ற மேற்படியான அர்த்தத்திலேயே அவர் சொல்லியிருப்பார் என்றே தோன்றுகின்றது. ஈழப்படைப்பாளிகள் என்ற பெயரிலே ஈழக்களம் தவிர்ந்த மீதிபுலமெல்லாம் புலம்பெயர்ந்தோர்களே தம்மை உய்வித்துக்கொண்டிருக்கின்றார்கள்; அதற்கு, இலங்கையிலிருந்தே (ஈழமென்றால், தீவின் வடகிழக்குமட்டுமே அடங்கிவிடும் என்பதால்) படைக்கும் படைப்பாளிகளையும் வெளிக்காட்டவேண்டும். அந்த அர்த்தத்திலேயே ஈழநாதன் எழுதியிருப்பாரென்று தோன்றுகிறது

 
At 5:15 AM, Blogger கறுப்பி said...

பெயரிலி மற்றவர்களை நான் நக்கலடித்துக் கதைக்க விரும்பவில்லை. ஆனால் கனடாவில் இந்தக் கவிதை வெளியீடு புத்தக வெளியீடு என்பது பார்க்கச் சகிக்கவில்லை. மண்டபத்துக்கு முன்னால் நிறைகுடம் வைத்து குத்துவிளக்கேற்றிப் பெண்கள் பட்டுச் சேலைகளுடன் ஜிகுஜிகு என்று. விமர்சகர்கள் எல்லோரும் ஆகோ ஆகா என்று கவிதை எழுதியவரை புகழ்ந்து கொண்டு.. என்னானானான செய்யிறது.
கனேடியத் தமிழ் வானொலிகளில் கவிதைக்கான நேரம் எண்டிட்டு ஒரு தலைப்பைக் குடுக்க வீட்டில வேலை வெட்டியில்லாமல் நிக்கிறாக்கள் எல்லாம் வந்து சும்மா பட்டதை எழுதி வாசிக்கிறது. இப்பிடி வாரா வாரம் எழுதிக்குவிச்சதை பிறகு ஒரு தொகுப்பா விடுறது. (கறுப்பியும் தமிழ் வானொலிக்கு கவிதை பாடினவளாக்கும் முன்பு ஒரு காலத்தில)
அடுத்த மாதம் கறுப்பியின்ர சிறுகதைத் தொகுப்பு ஒண்டு வெளிவரப்போகுது. ஒரே கென்பியூசா இருக்கு வெளிவிடுவமா வேண்டாமா எண்டு. நண்பர் ஒருவர் தான் பொறுப்பெடுத்திருக்கிறார். கறுப்பியின்னர கதைகள் படிக்க பதிக்கக் கூடியது எண்ட நம்பிக்கை இருக்கிறதால பரவாயில்லையோ எண்டு தோணுது.

 
At 1:04 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி நன்றி பதிலுக்கு
கறுப்பி உங்களுக்குச் சங்கடம் விளைவிக்கக்கூடிய அளவு நான் என்ன சொன்னேன் என்று புரியவில்லை.ஈழத்துப் படைப்பாளிகள் என்றால் கனடாவிலும் ஐரோப்பாவிலும் வாழும் 1983 கலவரத்திலும் அதற்குப் பின்னும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள்தான் என்ற புரிதல் எனக்கு இல்லை.அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முதலே உதயனின் இணைப்பாக வெளிவந்த சஞ்சீவியிலும் வெளிச்சம் இதழிலும் எழுதியவர்களை அறிந்திருந்தவன்/ரசித்தவன் நான்.அவற்றைவிட சுதந்திரப்பறவைகளினதும் விடுதலைப்புலிகளினதும் தொடர் வாசகனாக இருந்தவன். இப்போதும் கூட இந்தப் பதிவைக் கூட ஈழத்தில் தற்போதும் வாழ்ந்திருந்து எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கெனச் செய்யத்தான் விரும்பினேன் ஆயினும் அதில் சில சிக்கல்கள் உண்டு நானே இனம்பிரிப்பதாக நினைத்துக் கொண்டுவிடக் கூடாது என்றுதான் பொதுவாக ஈழத்து/புலத்து படைப்பாளிகளினது படைப்புகள் என்று பதிவின் ஆரம்பித்திலேயே வேறுபடுத்திக் காட்டினேன்.அதுவும் கூட ஒருவகையில் தவறுதான் தமிழ்மொழியையும் அதனை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தையும் இலங்கை இந்தியா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனால் தமிழகத்திலிருந்து எழுதுபவர்கள் பற்றியும் வெளிவரும் நூல்கள் பற்றியும் எனக்கு அறிவு குறைவு மேலும் அவை எப்படியாவது விளம்பரத்தைப் பெற்றுவிடுகின்றன.ஆகவேதான் வலைப்பதிவுகள் மூலமாவது பெயரிலி பொடிச்சி முதலியோர் இவ்வகை நூல்களை விமர்சித்து கவன ஈர்ப்பை ஏற்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீங்கள் கூட பதிவுகளில் ஏழாம் உலகத்தையும் ஜெயமோகன் படைப்புலகத்தையும்,புலிநகக் கொன்றையையும் பற்றி விமர்சிக்கும் அதே ஆர்வத்துடன் ஈழத்துப் படைப்புகளையும் படித்து விமர்சிக்கவேண்டும் என்பது எனது விருப்பம்/வேண்டுகோள்

 

Post a Comment

<< Home