Tuesday, June 21, 2005

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

என்னுடைய அம்மா அடிக்கடி பழமொழிகள் சொல்வார். வழி வழியாக அம்மம்மா அவவுடைய அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பழமொழிகள்.சொல்நயமும் ஓசை நயமும் ஒருங்கே வாய்க்கப்பெற்று சுவைபட இருப்பவை பழமொழிகள்.இடம்,பொருள் ஏவல் தெரிந்து பழமொழி சொல்வதோடு நின்றுவிடாது காலத்துடன் மனிதருக்கேற்ற வகையில் பொழிப்புரையும் சொல்ல வல்லவர் அம்மா.

சொல்ல வந்ததை நறுக்கென மனதில் பதியும்படி சொல்வதற்கும் பொருளை விளக்கமாகச் சொல்வதற்கும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டன என்று அம்மா வாயிலாக அறிந்தேன்.சில இடங்களில் பழமொழி என்று வழங்காது முதுமொழி என்றும் வழங்குவார்கள்.மூத்தோர் வாய் வருவதனால் முதுமொழி.

இந்தப் பழமொழிகள் அம்மாவின் அம்மா,அவருடைய அம்மா காலத்தையும் தாண்டி எனது காலத்துக்கும் சாலப் பொருந்துவதுதான் எனக்கு இன்னமும் இனிய ஆச்சரியம்.காலத்தால் அழியாத சொற்சித்திரங்கள் என்று அவற்றைச் சொல்லலாம்.அன்று தொட்டு இன்றுவரை பழமொழிகள் தரும் பொருளுக்கெற்ற வகையிலேயே மனிதர்களின் நடத்தைக் கோலங்கள் இருக்கின்றன.

இப்படியாக அம்மா வழக்கத்திற் பயன்படுத்தும் பாமொழிகளில் ஒன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி.. அதாவது பசியால் மெலிந்து உணவுதேடி வாசலில் இரந்து நிற்கும் பிச்சைக்காரனுக்கு உணவும் கொடுக்காமல் நாயையும் ஏவிவிட்டால் எப்படி இருக்கென்பதை விளக்குகிறது இப்பழமொழி

சமகால இலங்கை அரசியல் குழப்பம் நிறைந்திருக்கிறது.அரசில் அங்கம் வகித்த ஜே.வி.பி விலகினாலும் பரவாயில்லை கூட்டமைப்பை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்று ஜனாதிபதி ஒற்றைக்காலில் நிற்பது பலரை வாய்பிளக்க வைத்திருக்கிறது.
பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் ஜே.வி.பியினரால் தூண்டிவிடப்படும் மாணவர்கள் போராட்டம் எனப் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே ஜனாதிபதி இம்முடிவை எடுத்திருக்கிறார் என்றால் அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரம்தான் அதற்கு முக்கிய காரணம்.

இப்போது ஜே.வி.பி விலகிய நிலையில் உள்ள தொங்குபறி அரசாங்கம் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் எனக் கூற முடியாதுள்ளது.கூட்டமைப்பை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் இன்னும் கால தாமதம் என்றும் புரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது ஜனாதிபதியாக சந்திரிக்காவின் பதவிக்காலம் இன்னும் ஒருவருடம் தான்.எனவே அந்தப் பதவிக்கு ஆபத்து வருவதைப் பற்றி அவருக்கு கவலையில்லை.அதே போல எதுவும் செய்யமுடியாத தொங்குபறி அரசாங்கத்தை வைத்து அவரும் களைப்படைந்துவிட்டார்.அவருக்குப் பின்னர் ஜானதிபதியாக வருவார் என்ரு நிச்சயம் இல்லாத நிலையில் சந்திரிக்கா அரசியல் வாழ்வை விட்டு ஒட்ர்குங்க முனைவதாக ஆரூடம் கூறப்படுகிறது.இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

ஆனால் அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார்கள் என்றால் அங்கேதான் சிரிக்கிறது விதி.சந்திரிக்கா இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தமையால் தேர்தலில் போட்டியிட முடியாது.மகிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளுக்குளேயே எதிர்ப்பு.ரணிலுக்கு வாய்ப்பு குறைவு.பிரகாசமான வாய்ப்பு யாருக்கு என்கிறீர்களா.

ஜே.வி.பி

அதுதான் உண்மை சிங்களக் கிராம மட்டத்திலும் மாணவர்கள் மத்தியிலும் அசைக்க முடியாத செல்வாக்கை ஜே.வி.பி கொண்டிருக்கிறது.போதும் போதாததற்கு பௌத்த பிக்குகளின் ஆசீர்வாதமும் இருக்கின்றது.பௌத்த பிக்குமாரின் கட்சியான சிகல உறுமயவும் பேரினவாத ஜே.வி.பியினருடன் ஒத்தோடும் பட்சத்தில் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு ஜே.வி.பியின் தலைவர்களில் ஒருவருக்குத் தான்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை தனது ஆட்சிக்காலத்திலேயே ஒழிப்பேன் என்பதுதான் சந்திரிக்காவின் தேர்தல் விஞ்ஞாபனமாக இருந்தது.ஜே.வி.பியினரின் விடாப்பிடியான கொள்கை முழக்கமும் ஜனாதிபதிப் பதவியை ஒழித்து நாடாளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்குவதாகவே இருந்தது.இப்போது அதிகாரம் தமது கைக்குள் வரும் என்னும் பட்சத்தில் ஜே.வி.பியினர் அதுபற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஒதுங்கவிருக்கும் பட்சத்தில் சந்திரிக்காவும் அதனைப் பொருட்படுத்தப் போவதில்லை.நாடாளுமன்றத்தில் பெருன்பான்மை ஆதரவின்றி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களையும் ஒழிக்க முடியாது

பேரினவாத கட்சியாகியான ஜே.வி.பியினரில் ஒருவர் ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் தமிழர் நிலை எவ்வாறு இருக்கும் என்கிறீர்களா

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதுதான்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 4:21 PM, Blogger Sri Rangan said...

ஈழநாதன்,இன்றைய இலங்கை நிலை-அரசியற் சூழலை நீண்ட நாளாகக் காய் நகர்த்தி,இப்போது இறுதியாட்ட முடிவுக்கு இந்தி இந்தியா வந்துள்ளது.இதில் அரை குறைத் தீர்வுகளோடு தமிழர்கள் பிரச்சனை தீர்க்கும் பெரும் பொறி வைக்கப்படுகிறது.அதுவும் பற்பல அரசியல் தந்திரோபாயத்துடன் தமது பிராந்திய நலனின் வலிவுக்கேற்றமாதிரி திடீர்த் தலைமைகள் நமக்குள் உருவாகும்.அதுள் பச்சைக் கள்ளன் ஆனநந்த சங்கரியின் கையைமேலோகச் செய்யும் வியூகம் வகுகப்படுகிறது.ஜே.வி.பியேதாம் இன்றைய நம்பிக்கை நச்சத்திரம் இந்தியாவுக்கு.அதனூடாக இந்தியாவை எதிர்ப்பதுபோலுவும்,தமிழருக்கு வழங்கும் அரை குறைத் தீர்வுகளையே எதிர்ப்பதும்போலவும் இந்தியா நாடகமாட வைக்கிறது.இந்த அரசியலில் பலியாவதென்னவோ நமது மக்களின் உரிமைகள்தாம்.இதை இந்தியா பல காலஞ் செய்தபடி நம்மைப் பேய்க்காட்டி வருகிறது.

 

Post a Comment

<< Home