Friday, September 23, 2005

'புரகந்த களுவற'

cdv0035.jpg
இலங்கை இனப்பிரச்சனையினதும் தொடரும் யுத்தத்தினதும் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் திரைப்படம் 'புரகந்த களுவற'(Death on a full Moon Day)

தற்போதைய சிங்கள திரைத்துறையின் சிறந்த இயக்குனரான 'பிரசன்ன விதானகே'யால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் நிறைந்த பாராட்டுக்களோடு நிறையவே சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கிறது.

இலங்கையின் நாகரீகங்கள் பெரிதும் வந்தடையாத குக்கிராமம் ஒன்றிலிருந்து இராணுவத்தில் சேர்ந்து போருக்குப் போன சிங்கள இளைஞனின் குடும்பத்தைச் சுற்றிக் கதை பின்னப்படுகின்றது.

வயதான கண்பார்வை இல்லாத தந்தை.திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்குக் தாயாகிய மூத்த சகோதரி,திருமணத்திற்குக் காத்திருக்கும் இளைய சகோதரி.அவளது திருமணப்பரிசாகக் கட்டப்பட்டு அரைகுறையில் நிற்கும் வீடு.இவ்வளவும் இராணுவத்தினனான அந்த இளைஞனின் மதாந்திர உழைப்பை நம்பியே நடக்கின்றன.

ஒரு பூரணை நாள் ஒன்றில்(பௌத்தர்களுக்கு பூரணை விசேட வழிபாட்டு தினம்)போரில் இறந்து போன இராணுவ வீரனது பூத உடலைத் தாங்கியவண்னம் கார் ஒன்று அவர்களது வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்து வருகிறது.
தனது மகன் போரில் இறந்திருப்பான் என்பதை நம்ப தந்தை தயாரில்லை.மகன் உயிருடன் இருக்கிறான் என்றே அவர் நம்புகிறார்.உடலைச் சுமந்து வந்த இராணுவத்தினரோ இறந்ததை உறுதிப்படுத்துகிறார்கள்.

சகோதரனின் முகத்தைப் பார்க்க விரும்பிய சகோதரிக்கு போரில் அவனது உடல் சிதைந்துவிட்டதாகக் கூறி பூத உடலைத் தாங்கிய பேழையை திறக்க மறுக்கின்றனர்.

சகோதரிகள் புலம்ப,வயோதிகத் தந்தை அதிர்ச்சியோடு செயலற்று நிற்க மழை சோவெனப் பெய்துகொண்டிருக்க அவர்களது நிலத்திலேயே மகன் உடல் புதைக்கப்படுகிறது.தந்தையும் வேண்டா வெறுப்பாக மதச் சடங்குகளைச் செய்கிறார்.

அடுத்த நாள் தந்தையை தேடி வரும் கிராம சேவகர் இராணுவத்தில் இருந்து இறந்தவர்களுக்குக் கிடைக்கும் நட்ட ஈட்டுக்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து அதை நிரப்பித் தந்தால் தான் பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.அத்தோடு அந்தப் பணம் வருமிடத்து வீடு கட்டுவதற்காகத் தன்னிடம் வாங்கிய கடனைத் தருமாறும் சொல்கிறார்.

மகன் இறக்கவில்லை என உறுதியாக நம்பும் தந்தை அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

வீட்டில் வறுமை தாங்கமுடியாத இளைய மகள்.தன்னை மணம்புரிவதற்காகக் காத்திருப்பவனது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்கு வேலைக்குப் போகிறாள்.தந்தையின் முடிவு எல்லாவற்றையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்கிறாள்.

நட்ட ஈட்டுக்கு விண்ணப்பிக்கக் கோரி கிராம சேவகர் அடிக்கடி வீட்டுக்கு வந்து நெருக்குதல் கொடுக்கிறார்.அதனை ஏற்றுக்கொண்டால் தான் மகன் இறந்ததை ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால் தந்தை நட்ட ஈட்டை ஏற்க மறுக்கிறார்.

இதேவேளை மகன் பண்டாரவினது மூன்றாவது மாத நினைவுக்காய் தானம் வழங்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறார் கிராமத்து மதகுரு.செய்வதறியாத நிலையில் மூத்த மகளும் அவள் கணவனும் வயோதிகரை நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளும்படி நெருக்கிறார்கள்.
இளைய மகளைத் திருமணம் செய்யவிருந்தவனோ வீட்டு வறுமையைத் தீர்ப்பதற்கு தானும் பண்டார வழியில் இராணுவத்திற்குச் சேர்வதுதான் ஒரே வழியென்ற முடிவுக்கு வருகிறான்

அடுத்த பௌர்ணமியும் வருகிறது.பண்டாரவின் நினைவாய் தானம் வழங்க ஆயத்தம் நடக்கிறது.தந்தையால் பொறுக்க முடியவில்லை.மண்வெட்டியுடன் போய் மகனைப் புதைத்த குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறார்.மகள்களின் அழுகுரல் கேட்டு ஊராரும் கூடிவிடுகிறார்கள்.கிழவனாரைத் திருப்திப்படுத்தவேண்டி மருமகன் புதைகுழியைத் தோண்டி பேழையை வெளியே எடுக்கிறான் அனைவரும் சேர்ந்து பேழையைத் திறக்கிறார்கள்.உள்ளே இரண்டு மரக்குற்றிகள் துணியாற் சுற்றப்பட்டு வைக்கைப்பட்டிருக்கின்றன.

இதுதான் படத்தின் கதை.சிங்களத் திரைப்படங்கள் யதார்த்தத்திற்கு மிக அருகிலானவை என்பார்கள்.அந்த வகையில் இது யதார்த்தத்தை எந்தவித மிகைப்படுத்தலுமின்றி அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை,மதகுருக்கள் இடையிலான உறவு என்பன அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன

வயோதிகத் தந்தை வன்னிஹாமியாக பிரபல நடிகர் ஜோ அபேவிக்ரம திறம்படச் செய்திருக்கிறார்.

மொத்தம் 75 நிமிடங்களே நகரும் படம் முடியும் வரைக்கும் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது.

இந்தப் படம் நாட்டுக்காகப் போராடும் இராணுவத்தினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி அதற்குக் தடைவிதிக்குமாறு பிரசன்னா விதானகே மீது அழக்குத் தொடரப்பட்டுள்ளது.பல்வேறு மிரட்டல்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார்.ஒரு கிராமத்து ஏழைக் குடும்பத்து இராணுவ வீரன் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியதற்கான எதிர்ப்பு அது

சிங்களத் திரைப்படங்களை வாங்க விரும்புபவர்களுக்கு

(கீத்துகொட்டாய் அண்ணாச்சி சன்னாசிக்கு இந்தப் பதிவு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Thursday, September 22, 2005

நான்கு குறும்பாக்கள்

ஆங்கிலத்தில் Limarics என்றழைக்கப்படும் குறும்பாக்களை தமிழில் அழகாகவும் சுவையாகவும் செய்தவர் மகாகவி.து.உருத்திரமூர்த்தி.

அவரது நூறு குறும்பாக்கள் 'சௌ'வின் கருத்தோவியங்களுடன் மித்ர பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளன.'சௌ'வின் ஓவியங்கள் வருடியில் தெளிவாக வரவில்லை ஆகவே எனக்குப் பிடித்த நான்கு குறும்பாக்களை மட்டும் இடுகிறேன்.


பெஞ்சனிலே வந்தழகக் கோனார்
பெருங்கதிரை மீதமரலானார்.
அஞ்சாறு நாள் இருந்தார்
அடுத்த திங்கள் பின்னேரம்
பஞ்சியிலே இறந்து போனார்.

0000000000000000000000000

சொந்தத்திற் கார்,கொழும்பிற் காணி,
சோக்கான வீடு,வயல்,கேணி
இந்தளவும் கொண்டுவரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி

0000000000000000000000000000000

குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்
குவலயமே நடுங்க அரசாண்டான்.
"உலாத் தங்கள் பேரில்,இதோ!"
-ஒரு புலவர் குரலெடுத்து"
நிலாத்திங்கள்...." எனத் தொடங்க, மாண்டான்

00000000000000000000000000000000

முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்.
சத்தமின்றி,வந்தவனின்
கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான்.போனான் முச்சூலன்

0000000000000000000000000000000000
குசும்பாக எழுதினாலும் ரசிக்கும்படி குறும்பாக எழுதும் குசும்பனுக்கு இக்குறும்பா

பிற்குறிப்பு:இந்தக் குறும்பாக்களைப் படித்து ரசிப்பதோடு மட்டுமன்றி சிறப்பாக குறும்பா எழுதும் ஒருவருக்கு பரிசு வழங்கும் உத்தேசம்.எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

யுத்தத்தின் மறுபக்கம்

இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது.

ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்களுடனான தொடர்பாடல் அற்ற நிலையில் அரசாங்கம் அவர்களையும் இறந்ததாகக் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி விடும்.

இவற்றையெல்லாம் செய்தியாகப் படிக்கும்போது சிறுவயதில் எனக்கும் வேடிக்கையாகத் தான் இருக்கும்.அரசாங்கத்திற்காகப் போராடும் இராணுவத்தினரையே அரசாங்கத்தால் ஒழுங்காகப் பராமரிக்க முடியவில்லை என்பது கேலியாகத் தான் இருக்கும்.

ஆனால் வேறு சில ஊடகங்கள் வழியாக தென்னிலங்கையில் பெயரே தெரியாத சிறு சிறு கிராமங்களில் பலநூறு குடும்பங்கள் இந்த இராணுவத்தினரின் மாத வருவாயை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன என்பதை அறிந்துகொண்டபோது யுத்தத்தின் மறுபக்கமும்தெரியவந்தது.

நாமெல்லாம்பொதுவாக நம்புவது சிங்கள இளைஞர்கள் இனவாதத்தின் காரணமாகத் தான் இராணுவத்தில் சேர்கிறார்கள் என்பதே

இராணுவத்தினரில் பாதிப்பேர் இனவெறி காரணமாகவும் நாடு நமதே என்ற அரசியல் தூண்டுதல்கள் காரணமாகவும் சேர்கிறார்கள் என்றால் இன்னொருபுறம் தாளமுடியாத வறுமையும் தன் பங்கிற்கு இளைஞர்களைச் சேர்க்கிறது.

ஒவ்வொரு யுத்தத்தின் பின்னாலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பின்னாலும் எஞ்சியிருக்கும் வறுமை மற்றவர்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது.இவர்கள் பெரும்பாலும் மத்திய இலங்கை,மலையகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் குடும்பங்களினது இளைஞர்களினதும் வறுமையையும் அறியாமையையும் ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.இராணுவத்துக்கு ஆள் தேவைப்படும்போதெல்லாம் அரசாங்கம் கொழும்பையும் அதைச் சூழவுள்ள பகுதிலும் வசிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளிடமோ அல்லது வியாபாரிகளின் பிள்ளைகளிடமோ போவதில்லை.இப்படியான கிராமங்களுக்குத் தான் போகிறார்கள்.

இவர்கள் மத்தியில் நாடு பற்றிய,இனம் பற்றிய பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.ஆறாம் வகுப்புவரை கல்வி கற்றவனுக்கு பதினோராயிரம் ரூபா மாதச் சம்பளம் என்பதுதான் அவர்களிடையே எடுபடுகிறது.

ஒருவேளை போரில் சிக்கி இறந்துபோனால் தொகையாகக் கிடைக்கும் ஒரு சில லட்ச ரூபாக்களால் குடும்பம் வாழ்ந்துகொள்ளும் என்று நம்பித்தான் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்கிறார்கள்.

தந்தை போரில் இறந்தபின் அதே குடும்பத்து மகனோ அல்லது தமையன் இறந்தபின் தம்பியோ மீண்டும் இராணுவத்தில் சேர்வதற்கான காரணம் அவர்களது வறுமை.ஒருமுறை கண்ட இழப்பும் கையறுநிலையும் திரும்பத் திரும்ப இராணுவத்தில் சேர்வதே ஒரே வழியாக அவர்களுக்குப் புரிகிறது.

ஆனால் அரசாங்கமோ படைக்கு ஆள்ச்சேர்க்கவும் பாதுகாப்பு நிதிக்கு பெருமளவில் துண்டுவிழும் தொகையைச் சரிப்படுத்தவும்பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது.

சில இராணுவத் தாக்குதல்களில் மாண்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தின் உடல்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.மக்களின் உணர்வுகளைக் கிளறி அவர்களை தங்களுக்குச் சார்பாய்த் திருப்ப இப்படியாகப் பல்வேறு செயல்களைச் செய்தது.சில உடல்களைச் சிதைந்தது சிதைந்தபடியே குடும்பத்தினருக்குக் காட்சிப்படுத்தியது.இன்னும் சில உடல்களை முகாம்களிலேயே எரித்துவிட்டு விடுதலைப்புலிகள் கண்டதுண்டமாக வெட்டிவிட்டார்கள் என்றோ அல்லது உடலைத் தர மறுக்கிறார்கள் என்றோ சொல்லி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடியது.

பெற்ற மகனையோ கணவனையோ சகோதரனையோ அப்படியான நிலையில் பார்க்கும் அந்த மக்களின் துக்கம் வடகிழக்கில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட குடும்பத்தினரின் துக்கம் எல்லாமே ஒன்றுதான்.

அதையெல்லாவற்றையும் விட மோசமான ஏமாற்று வேலை அரசாங்கத்தால் வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும் அதன் பின்னரான புலிகளின் எதிர்த்தாக்குதலின் பின்னும் செய்யப்பட்டது.

போரில் இறந்த இராணுவவீரர்களுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையான ஒரு சில லட்ச ரூபாக்களை ஆளும் வர்க்கம் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு யுத்தத்தில் அவ்வீரன் தப்பியோடிவிட்டதாகவும் அவனை வீட்டுக்குள் மறைத்து வைத்திருத்தல் குற்றம் எனவும் சொல்லிக்கொண்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களே பொய்யாகச் சோதனை போடப்பட்டன

தப்பியோடிய இராணுவத்தினருக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டியதில்லை என்பதால் இறந்த பலநூற்றுக்கணக்கான இராணுவத்தினர் தப்பியோடியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் நட்ட ஈட்டுப் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.

அவர்களின் குடும்பத்தினரோ மகன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்று நம்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.அல்லது அவனுக்குப் பதிலாக சகோதரன் இராணுவத்தில் சேர்கிறான்.

தேர்தல் கூட்டங்களில் பிக்குமார் முழங்குகிறார்கள் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்".மகிந்த முழங்குகிறார் "நாடு துண்டுபடுவதை அனுமதியேன்".ஜே.வி.பி சொல்கிறது "அப்பே ரட்டை"(எங்கள் நாடு)இலங்கையின் பெயர் தெரியா ஒரு கிராமத்தில் அப்புகாமியோ பொடிமெனிக்கேயோ ஆனையிறவுச் சண்டையில் காணாமற் போன தங்கள் மகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

(இந்தப்படியான ஒரு குடும்பத்தினரின் அவலத்தைச் சொல்லும் ஒரு திரைப்படத்தைஇம்முறை இலங்கையிலிருந்து வரும்போது வாங்கி வந்தேன் அதுபற்றிய விமர்சனம் அடுத்தடுத்த பதிவில்)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Wednesday, September 21, 2005

பாதையின் மீதொரு பாவை

பாதையின்
மீதொரு பாவை நடந்தாள்.
பார்வையிலே ஒரு சேதி
எறிந்தாள்.
பாதையின் மீதொரு பாவை
நடந்தாள்....

காதினில் அவள் கைவளை
கேளேன்.
கண்களில் அவள் மைவிழி
காணேன்.
கோதை எறிந்ததோர் சேதி
புகுந்து
கொண்டஎன் நெஞ்சில்
வேறொன்றும் ஓரேன்.
பாதையின் மீதொரு பாவை
நடந்தாள்...

காலையில் அவள் போகையிற்
கண்டேன்
காரணம் இன்றி அலைந்து
திரிந்தேன்.
மாலையில் அவள்
மீள்கையில் நின்றேன்.
மாதரசீ என்று
கூவவிழைந்தேன்.
பாதையின் மீதொரு பாவை
நடந்தாள்....

கோலம் குனிந்து புனைந்தாள்.
அவளுடைய
கோலம் கண்டுள்ளம்
குமைந்தேன்
கோலம் குனிந்து புனைந்தாள்....
காலம்:விடிபொழுது;
முன்றில்,இடம்;கறுத்த
ஆலம் விழியிரண்டும்
அங்கிங்கெடாதபடி
கோலம் குனிந்து புனைந்தாள்...

நீளம் மிகுந்த பின்னல்
கீழ்மண்ணிலத்தழுந்த
வாழ்வின் சுவை நிரம்பி மார்பின்
துணிதளும்ப,
வீழ்கின்ற கோடுகளில் ஓடும் நகம்
மினுங்க,
ஆளும் விழியிரண்டும்
ஆர்க்கும் கொடாதபடி,
கோலம் குனிந்து புனைந்தாள்..


*************************************


ஏனோ எனை அவர் அவ்விதம்
பார்த்தார்?
ஏதோ பொருள் ஒன்றோ
என்னிடம் கேட்டார்?
ஏனோ அவர் எனை அவர் அவ்விதம்
பார்த்தார்..?

நானோ சிறியவள்.
அஞ்சி உலைவேன்.
நாணாதொழிதலும்
ஏலாது நைவேன்.
"தேனே" எனதுடல் என்றோ
நினைவார்?
தேவை எனை எனில், எங்கே
அலைவார்?

ஏனோ எனை அவர் அவ்விதம்
பார்த்தார்...?

மகாகவியின் மாநிலத்துப் பெருவாழ்வுகுறுங்காவியத்தில் இருந்து

(கவிஞனும் தீராத விளையாட்டுப் பிள்ளையுமான அண்ணன் டி.சேயுக்கு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Tuesday, September 20, 2005

இது என் புராணம்

யாழ்ப்பானத்துக் கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம் இப்படி யாராவது யாழ்ப்பாணத்தவர் பெருமையடிச்சுக் கேள்விப்பட்டிருக்கிறியளோ?

ஊர்ப்பெருமை பேசுவதற்கு மற்றெந்த ஊர்க்காரரையும் விட குறைந்தவர்கள் இல்லை.யாழ்ப்பாணத்தார் அதாவது நாங்கள்.அப்படி எங்கள் ஊரைப்பற்றி நாங்களே பெருமையாச் சொல்லிக்கொள்ளுற ஒரு விசயம் எங்கடை கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம்.

உன்னிப்பாப் பார்த்தால் இதிலை கலாச்சாரமும் இல்லை ஒரு மண்ணுமில்லை.வாழையடி வாழையாக கந்தபுராணம் வீடுகளில் படிக்கப்பட்டு வந்தது.அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சி கந்தபுராணக் கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது.அவ்வளவுதான் என்பது புரியும்.ஏதோ கந்தபுராணம் படிச்சு அதைப் போலவே வாழ்க்கை நடத்தினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்

ஆனால் தமிழை வளர்க்கிறதிலையும் சைவ சமயத்தை வளர்க்கிறதிலையும் கந்தபுராணப் படிப்புச் செலுத்திய செல்வாக்கு குறைச்சு மதிப்பிட முடியாதது.

மூன்று நான்கு தலைமுறையளுக்கு முந்தி படிப்பெண்டா உத்தியோகத்துக்கு மட்டுமே என்றிருந்த காலத்திலை.நாலெழுத்தாவது படிக்கவேணும் என்ற தூண்டுதலுக்கு கந்தபுராணாம் காலாக இருந்திருக்கிறது.கந்தபுராணம் படிச்சுப் பொருள் சொல்லத் தெரிந்தவன் ஊருக்குள்ளை நாலெழுத்துப் படிச்சவன் என்ற மதிப்பைப் பெறுவான்.அந்த மதிப்பின் பொருட்டு ஊருக்குள்ளை வாற பிரச்சனையளுக்கு தீர்வு சொல்லுறதிலை இருந்து அரசாங்க உத்திரவுகளைப் படிச்சுக் காட்டுறதுவரை உந்த புராணம் படிக்கிறாக்களிட்டையே எல்லாரும் வருவினமெண்டு அம்மம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.

யாழ்ப்பாணத்துப் பழைய வீடுகளை யாராவது பார்த்திருப்பியள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பியள்.குடிசைகள் வீடான நேரத்திலை கட்டப்பட்டவை அனேகமாக நாச்சார் வீடுகள் தான் நடுவிலை முற்றம் வைச்சு சுற்றி வரக் கட்டப்பட்ட வீடுகள்.

முற்றத்துக்கு நாற்புறமும் அரைச்சுவருடன் கூடிய திண்ணை இருக்கும்.
இதைத் தவிர வீட்டுக்கு வெளியிலும் வாசற்படிக்கருகில் திண்ணை கட்டியிருப்பார்கள் இந்தத் திண்ணைகள்தான் புராண படனத்துக்குரிய இடம்.திண்னையை அண்டிய சுவற்றில் மாடங்கள் கட்டப்பட்டிருக்கும் அதுதான் புத்தகம் வைக்கிற இடம்.சிலர் அந்த மாடத்துக்குள்ளை விளக்கும் ஏற்றி வைச்சிருப்பினம்.

நாங்கள் பிறந்த நேரத்திலை இப்படியான வீடுகளும் அருகி புராணப் படிப்பும் அருகிப்போய்விட்டாலும் அப்படி ஒரு வீட்டை நான் பார்த்திருக்கிறன்.அந்த வீட்டை வாத்தியார் வீடு என்பார்கள்.ஆனால் அந்த வீட்டில் யாரும் ஆசிரியராக இருந்ததில்லை.காலம் காலமாக கந்தபுராணம் படித்து பொருளும் சொல்லி அதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்ததால் அது வாத்தியார் வீடாகிவிட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக புராணப் படிப்பு நடக்கும் இடங்கள் சிலவற்ரைக் கடந்துதான் சிறுவயதில் படிக்கப்போவது வழக்கம்.

அப்படிப் போற நேரத்தில் கந்த புராணதினாலோ அல்லது பாடுபவராலோ கவரப்பட்டு நானும் இருந்து கேட்க ஆரம்பித்தேன்.

புராணம் பாடுபவரைப் பார்த்தாலே பக்தி தன்பாட்டிலை பெருக்கெடுக்கும்.தண்ணீரிலை குழைச்சுப் பூசிய மூன்று திருநீற்றுக் குறி நெற்றியிலை பளிச்செண்டு இருக்கும்.நடுமத்தியிலை சந்தனம் குங்குமம் பொட்டு.

அதே மாதிரி மார்பிலையும் நீறும் சந்தனமும் இட்டிருப்பார்கள்.காதில் ஏதாவது பூ இருக்கும்.நான் பார்த்த இடத்தில் பாடுபவர் இரண்டு காதிலும் இரண்டு செவ்வரத்தப் பூக்களை வைத்திருப்பார்.அந்தப் பூவுக்கும் அவரது குரலுக்கும் சேர்த்து நாங்கள் வைத்த பெயர் லவுட்ஸ்பீக்கர்.அப்படியான கணீர்க் குரலிலே அவர் பாட ஆரம்பித்தால் நேரத்தை மணிக்கூடு பார்க்காமலே சொல்லிவிடலாம்.அப்படியொரு நேரந்தவறாமையை அதிலே கடைப்பிடித்தார்கள்.

பாடுபவருக்கு முன்னாலே விளக்கொன்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும்.புத்தகத்தை வைத்து முதுகு வளையாமல் படிப்பதற்காக ஒரு சிறிய பீடமொன்றை வைத்திருப்பார்கள்.எதிரில் பொருள் சொல்லுபவருக்கும் அதே மாதிரியான வசதி இருக்கும்.

முதலில் பாடுபவர் ராகம் போட்டு ஒரு செய்யுளைப் படிப்பார்.எந்தவிதப் பிசிறும் இல்லாமல் பொருள் விளங்கி உச்சரிப்புப் பிழையின்றி படிப்பதைக் கேட்பதே தனி சுகம்.அவர் முடித்ததும் பாட்டின் முதலடியை ராகத்தோடு மறுபடியும் பாடி நிறுத்துவார்.இப்போது பொருள் சொல்பவர் அதே மாதிரி ராகத்தில் நீட்டி முழக்கி பொருள் சொல்லுவார்.பாதிப்பாட்டுக்கள் அனேகம் பேருக்கு பாடம் என்கிறபடியால் புத்தகம் பார்க்காமல் பொருள் சொல்லுவார்கள்.

ஒரு கூட்டம் ஆண்களும் பெண்களும் சுற்றிவர இருந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.அவர்கள் தானென்றில்லை அந்தத் தெருவால் போறவர்களும் காலாற இருந்து புராணப் படிப்புக் கேட்ட்பதுண்டு.

இப்படி பாடுறதைக் கேட்டு மட்டும் கொண்டிருந்த எனக்கு பாடுறதுக்கும் சந்தர்ப்பம் வந்துது.ஆனால் அது கந்தபுராணமில்லை பிள்ளையார் புராணம்.கார்த்திகை மாதம் இருபத்தியொருநாள் விநாயகசஷ்டி விரதமிருப்பார்கள்.அந்த நேரம் விரதமிருப்பவர்களுக்கு விநாயக புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லவேண்டும்

வழக்கமாகப் பாடுபவ்ர்களின் இறப்பு எங்கடை தலைமுறையை உள்ளே கொண்டுவந்தது.வழக்கமாகப் பாடும் வயதான ஐயாவுடன் நானும் போய் இருந்தால் சபையே என்னை விசித்திரமாகப் பார்த்துச்சுது.எனக்கு குரலெல்லாம் நடுங்கி அழுகைவாறமாதிரி ஆகிப்போச்சுது.முதலே கொஞ்சம் படித்து வைத்திருந்ததாலை தட்டித் தடக்கி முதற்பாட்டை வாசிச்சு முடிச்சன்.என் ராகம் எனக்கே கேட்கச் சகிக்கேலாமல் இருந்துது இரண்டு மூன்று நாளிலை எனக்கு ராகம் பிடிபட்டுப் போச்சு.

அதுக்குப் பிறகென்ன பாவம் விரதமென்று சொல்லி பசியோடிருப்பவர்களை வாட்டு வாட்டென்று வாட்டியதுதான் நான் செய்ததெல்லாம்.

பாட்டெல்லாம் முடிய பாடியதற்குச் சன்மானமாய் பழமும் மோதகம் வடை பொங்கலும் தருவார்கள் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டியதுதானே வேறென்ன வேண்டும்.

என்னதான் விநாயக புராணம்,திருவாதவூரடிகள் புராணம் சித்திரகுப்தர் புராணமென்று படிச்சாலும் கந்தபுராணம் மீது ஆர்வம் போகவில்லை. கந்தபுராணம் படிக்க கொஞ்சநாள் தான் சந்தர்ப்பம் கிடைச்சது அதுக்குப் பிறகு படிக்க ஆளில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது படிக்கப்பட்டும் நாட்களும் படிப்பதற்கு ஆட்கள் பயந்ததற்குக் காரணம்.கிட்டத்தட்ட ஆறுமாதமாகும் முழுப்புராணத்தையும் படிச்சு முடிக்க.திரும்ப ஆறுமாதம் லீவு பிறகு திரும்பவும் ஆரம்பமாகும்.

இப்படியாக படிக்கும் வழக்கம் ஒருத்தரிலை இருந்து ஒருத்தருக்குப் பரவியதும் அதையொட்டி பலர் தமிழ் படித்துப் பண்டிதர்கள் ஆனதையுமே கந்தபுராணக் கலாச்சாரம் என்கிறார்கள் என நினைக்கிறேன்

கந்தபுராணம் கலாச்சாரமோ இல்லையோ செந்தமிழின் இனிமையை இண்டைக்கும் நாவிலினிக்கும்படி ஊற்றிவிட்டிருக்கிறது.ஞாபகத்திலிருக்கும் பாடல்களை சொல்லிப் பார்க்கும் போது அந்த ராகமும் அப்படியே நெஞ்சில் நிற்கிறது

(ஊர்க்கதைகளைச் சுவைபடச் சொல்லும் வசந்தனுக்கும்.ஊர்க்கதையென்றாலே ஆவென்று கேட்கும் மதிக்கும் இது சமர்ப்பணம்)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Monday, September 19, 2005

வா(ல்) வெள்ளியே

வலைப்பதிவுக்குள் கால்பதித்த பின் இரண்டாவது தடவையாக நட்சத்திரமாக பிரகாசிக்கும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது சுற்றுக்கும் தாக்குப்பிடித்துவிட்ட குத்துச் சண்டைவீரன் கணக்காய் என்னை நானே பெருமிதத்துடன் தட்டிக்கொள்கிறேன்.(மவனே இந்தக் குத்துடன் நீ காலி என்பவர்களை பின்னூட்டத்தில் சந்தித்துக் கொள்கிறேன்).

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுக்கி வலைப்பதிவுகளில் விழுந்தேன்.விழுந்த போது பெயரளவில் கூட யாரையும் தெரியாது,எழுதும் போது யாருக்காக எழுதுகிறேன் என்றும் தெரியாது எழுதியதை யாரெல்லாம் படிக்கிறார்கள் என்றும் தெரியாது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது மாதிரி இருந்தது.

அந்த வேளையில் முடிந்த முடிவுகள் நிறையவே கொண்டுதான் இந்த வலைப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.தமிழீழ விடுதலைப் போராட்டம்,பெண்ணியம்,தமிழ்ச்சமூகம்,இலக்கியம் பற்றியெல்லாம் முடிந்த முடிவுகள் பலவற்றை வைத்திருந்தேன்.வைத்திருந்தது மாத்திரமன்றி அவைதான் சரியானவை என்றும் நம்பிக்கொண்டிருந்தேன்.என்னுடைய ஆரம்பப் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு அது புரிந்திருக்கும்.

இன்று மாற்றம்தான் நிரந்தரம் என்று நான் நம்புவதற்கு முழுமுதற் காரணமாய் இருப்பது இந்தத் தமிழ் வலைப்பதிவுலகம்.

இன்றுகூட குறைபாடுகள் நிறையவே இருந்தாலும் நான் வளர்ந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிறது வலை பதிய ஆரம்பித்து.இந்தக் குறுகிய காலத்தில் நான் கற்றுக்கொண்டவை ஏராளம் கற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தவையும் ஏராளம்.பெற்றுக்கொண்ட நண்பர்கள் ஏராளம்.

குறைகளைச் சுட்டியவர்கள்.நிறைகளைப் பாராட்டியவர்கள்

எவரையும் இழந்ததாய் நினைவில்லை.

வாசிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவும் ஒரு புத்தகத்திற்கு இணையானதாகத் தோன்றுகிறது எனக்கு.முற்றும் வாசகத்துடன் முடிந்து போய் மனதில் மட்டும் கேள்விகளை எழுப்பி விடைகாணா வினாக்களுடன் அலையவிட்ட புத்தகங்களைப் போலன்றி வினவவும் விடையிறுக்கவும் வசதி செய்துகொடுத்தவை வலைப்பதிவுகள்

இது எனது பள்ளிக்கூடம்

வலைப்பதிவுகள் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பட்டியல் போட்டால் இந்த வாரம் போதாது.அதனைச் சாத்தியமாக்கிய நண்பர்களான

தமிழ்மணம் காசி,மதி மற்றும் சந்திரவதனா,பத்ரி,மீனாக்ஸ்,அன்பு,செல்வராஜ் ஆகியோருக்கும்
எழுத்துருக்களையும்செயலிகளையும் செய்து கொடுத்து பதிவதற்கு இடமும் கொடுத்த மோகன் சுரதா ஆகியோருக்கும்.

என்றும் தோழர்களாய் இருக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில விதயங்களைப் பேசலாம் என்று நினைக்கிறேன்.அவை யாரையுமே வேண்டுமென்று காயப்படுத்த அல்ல ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாமே என்று மனத்தாங்கலின் வெளிப்பாடு மட்டுமே ஆகவே எல்லோரும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்பித் தொடர்கிறேன்

(யாழ் நெட்டில் அமைந்த வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் படிக்க முடியவில்லை என்று மாலனும் பிரகாசும் தெரிவித்திருந்தமையைக் கருத்திற் கொண்டு வலைப்பதிவைத் தற்காலிகமாக இங்கே மாற்றியிருக்கிறேன்எனது முன்னைய பதிவுகளைப் படிக்க

வலைப்பூவில் ஆசிரியராக இருந்தபோது எழுதியவற்றைப் படிக்க

எனது இருப்பு

இங்கு முதல் இங்கு வரை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Thursday, September 01, 2005

டி.சேயிற்கு


அண்ணை டி.சே ஆளாளுக்கு ஒரு பாட்டும் பதிவும் போட்டிருக்கிறார்.அவரது மனநிலை தம்பி எனக்கு விளங்குது மற்றாக்களுக்கும் விளங்க வேணுமெல்லோ.பாலாசி பாரிக்கு சிற்றுவேசன் சோங் குடுத்திருக்கிறார்.அதைக் கேட்க கேட்க அண்ணனை நினைச்சு இந்தத் தம்பிக்கு அழுகை அழுகையா வருது

அதுக்காக இந்தப் பாட்டும் படமும் அவருக்கு அர்ப்பணம்,சமர்ப்பணம்.

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் நேரம் வரும்
நேரம் வரும் வேளை வரை
காத்திருப்போமே
லல லல லா

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்