Saturday, December 24, 2005

மீளவும் 'மூன்றாவது மனிதன்'

24 டிசம்பர் 2005

ஆக்கபூர்வமான முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்!

நீண்டகால இடைவெளியின் பின், மீளவும் 'மூன்றாவது மனிதன்' சஞ்சிகையை வெளிக்கொணர உத்தேசித்துள்ளோம்!

ஈழத்து தமிழ் கலை இலக்கிய சமூகத் தளங்களில், அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடுவதற்கான களம் இன்மைபற்றிய கவலையை நமது தமிழ்ச் சூழலில் அக்கறையுள்ள சக்திகளிடமிருந்து பல்வேறு தடவைகள் கேட்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய கவலையும் நிலைமையும், தனிமனிதர்களுடைய அங்கலாய்ப்பு மட்டுமன்று, ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இலக்கியத்தின் பின்னடைவு என்றே கொள்ளப்பட வேண்டியுள்ளது.

கலை இலக்கிய நண்பர்களுடனான உரையாடலின் பின் மூன்றாவது மனிதனை வெளிக்கொண்டு வருவதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவரவுள்ளது. ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் உயிர்வாழ்வும், அதன் காத்திரமும் அதன் பேசுபொருளிலேயே (படைப்புகள்) தங்கி உள்ளது என்பதை நாமறிவோம்!

படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், அக்கறை கொண்ட வாசகர்களின் ஒருமித்த பங்களிப்பே நமது முயற்சியை சாத்தியப்படுத்தும். தொடர்ச்சியான உரையாடலும், விரைவான பிரசுர வருகையும் இன்று அவசியமாகி உள்ளது.

படைப்புகளை, கருத்துக்களை எமக்கு ஜனவரி 10ம் திகதிக்கு முன் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும் கீழ்வரும் குறிப்பு தங்களுக்குதவும்!

பிரதம ஆசிரியர்,
மூன்றாவது மனிதன்.


617, Awisawella Road,
Wellampitiya - Sri Lanka.
Tel: 077 3131627
Email: thirdmanpublication@yahoo.com

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Sunday, November 27, 2005

அகவணக்கம்

தமிழீழ விடுதலை/தமிழர்களின் விடுதலை என்னும் பெருங்கனவிற்காய் தமது இன்னுயிரை ஈந்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையும் மரணித்த பொதுமக்களையும் இந்நாளில் நினைவு கூருகிறேன்.

அவர்களுக்கு எனது அகவணக்கம்

நாம் இழந்து போன இந்த ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.இதில் ஏற்றத்தாழ்வுகள் கண்டுபிடிக்க முனைவது சிறுமை.

ஓருயிரை தியாகி என்றும் இன்னோருயிரை துரோகி என்றும் கட்டமைக்கும் ஒருபக்கத்தினரைப் போலவே

ஓருயிரை மக்கள் நேசர்கள் என்றும் இன்னோருயிரை பயங்கரவாதிகள்/தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கட்டமைக்கும்

இன்னோரு பக்கத்தினரையும் மறுக்கிறேன்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Tuesday, November 22, 2005

சிங்கப்பூரின் முன்னுதாரணம்

உலகமெங்கும் சிறுவர்களை பாலியற் தொழிலில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.தென்கிழக்காசிய வட்டாரம் இதில் முன்னணியில் இருக்கிறது.

சிங்கப்பூரில் சட்டபூர்வ வயதுக்கு குறைந்தோரை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதோ அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதோ கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.வயது குறைந்த ஒருவரின் விருப்பதுடன் உறவு கொண்டால் கூட அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதனால் வயதுகுறைந்த பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் ஆண்கள் தாய்லாந்திற்கும் இந்தோனேசியாவின் பாத்தாம் நகருக்கும் விடுமுறையைக் கழிக்கப் போவது வழமையாக உள்ளது.

கருத்துக் கணிப்பொன்றின் மூலம் அண்மைக்காலங்களில் சிங்கப்பூர் ஆண்கள் வயது குறைந்தோருடனான உறவை மேற்கொள்ள 'பாத்தாம்' செல்வது அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.பன்னிரெண்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான பெண்களை முதலீடாகக் கொண்டு பாலியற் தொழில் 'பாத்தாமி'ல் கொடிகட்டிப் பறக்கிறது.
இதனைத் தடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.இனிமேல் சிங்கப்பூருக்கு வெளியேயும் சிங்கப்பூர் வாசிகள் வயது குறைந்தோருடன் பாலியல் உறவிலீடுபட்டது நிரூபிக்கப்பட்டால் உள்ளூரில் நடைபெறும் குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதே தண்டனை கிடைக்கும்.

இதன்படி 'பாத்தாம்' செல்லும் ஒரு சிங்கப்பூர் வாசி.வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துக்கொண்டால் கூட தண்டனைக்குரிய குற்றம்.இதே சட்டத்தின் படி உள்ளூரில் பாலியல் வன்முறைக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை அதனை வெளியூரில் செய்தாலும் கிடைக்கும்

உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்கிறது அரசு
ஒருவர் பாலியல் உறவுகொள்வதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுந்தாலும் சிங்கப்பூர் சரியானதொரு முன்னுதாரணத்தை காட்டியுள்ளது.இதனை வாய்கிழிய ஜனநாயகம் பேசும் மற்றைய நாடுகளும் பின்பற்றினால் சிறுவர்களை பாலியலில் ஈடுபடுத்துவது எவ்வளவோ குறையும்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Monday, November 21, 2005

காட்டுமிராண்டிகள் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இளைஞனை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

இது பற்றி நிறைய எழுதினேன் கடைசியில் எனக்கே கோபத்தில் உளறுவதாகப் பட்டதால் அழித்துவிட்டேன்.

இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு எதற்குப் போராட்டம் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஒருத்தனை அடித்தே கொல்ல முடியும் அதுவும் பொதுமக்கள் சேர்ந்து என்றால் யாழ்ப்பாணம் எந்தளவு வளர்ச்சி அடைகிறது என்று சொல்லத் தேவையில்லை.

இந்த மிலேச்சக் கூட்டத்தில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.

இவன் ஒரு சமூக விரோதி இவனுக்கான தண்டனையை நீங்களே தீர்மானியுங்கள் என்று எழுதிய ஒரு வாசகம் போதும் இந்த நீதி தேவதைகளை உசுப்பேற்றி விடுவதற்கு.ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் சமூக விரோதி இளைத்தவன் ஒருவன் கிடைத்தால் நீதி தேவதையாகிவிடுகிறான்.

நாளைக்கே இராணுவம் புலி இயக்க உறுப்பினன் ஒருவனைப் பிடித்து கையையும் வாயையும் கட்டி சமூக விரோதி என்று எழுதிப் போட்டால் போதும்.அவனை யார் இன்னார் என்று விசாரிக்காமல் அடித்தே கொன்றுவிட்டு நாட்டைக் காப்பாற்றிய சந்தோசத்தில் போகும் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம்.

இந்தச் செயற்பாட்டில் தாங்கள் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றி புலிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.இல்லாவிட்டால் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி

யாழ்ப்பாணத்து மக்கள் மெல்ல மெல்ல தீவிர மனச்சிதைவுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் பயமாகவிருக்கிறது

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Thursday, November 17, 2005

பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்












ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.


(மேலதிக செய்தி உதவி:ஜனநாயகம் அண்ணா)

இந்நிகழ்வைப் படம்பிடிக்க முயன்ற பெல்ஜியம் வாழ் தமிழ் இளைஞர் ஒருவர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினரான புலம்பெயர் வாழ் ஜனநாயகப் பேரவையினரால் தாக்கப்பட்டு அவரது படப்பிடிப்புக் கருவி சேதமாக்கப்பட்டுள்ளது.

இதே வழியில் தொடர்ந்தும் புலம் பெயர் வால் ஜன நாய் அகத்தை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்

கீழே வைக்கப்பட்டிருக்கும் போத்தல்களில் பச்சை :ஹெனிக்கன்(ஏதோ இந்தப் பொடிப்பயலுக்குத் தெரிந்தது) மற்றது என்ன பிராண்ட் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த சமூகப் பொறுப்புணர் வாலர் பட்டம் கிடைக்கும்.


பட உதவி நன்றி அநாமதேயம்:ஜனநாயகம் வலைப்பதிவு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்