பதுங்குகுழி நாட்கள்

ஆசிரியர்:பா.அகிலன்
வகை:கவிதைகள்
விலை:ரூ.45.00
வெளியீடு:குருத்து/காலச்சுவடு
மதிப்புரை : ஆர் முத்துக்குமார்
பா. அகிலன் ஈழத்தை சேர்ந்த கவிஞர். 1990 களில் எழுத்துலகத்தில் அடியெடுத்து வைத்த இவர் சேரன், வ.ஜ.ச. ஜெயபாலன் போன்ற படைப்பாளிகளின் கவிதைகளிலிருந்து தனக்கானஉந்து சக்தியை பெற்றதாக அவரே கூறுகிறார். ஈழத்துக்கவிதைகளில் 80க்கு முந்தைய படைப்புகளில் பெரும்பாலும் பொதுவான பிரச்சினைகளை பேசப்பட்டுவந்தன. கா. டோனியலின் 'பஞ்சமர்' நாவல் உள்ளூர் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வட்டார மொழிச்சிலேடைகளுடன் பதிவு செய்திருந்தது. கலவரங்களுக்கும், சிங்கள பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்துக் விடப்பட்ட காலங்களுக்கும் பிறகு வந்த கவிதைகள் பெரும்பாலும் இழந்தவைகளின் நினைவாகவும், பதுங்குகுழியில் கழித்த பெரும்பீதி அழலங்களைப்பற்றியும், இழந்த உடைமை, இழந்த பண்பாட்டுச் சின்னங்கள், இழந்த இறந்த உறவுகள் பற்றியதுமான கவிதைகளாக மாற்றம் அடைந்தது.
புலம் பெயர்ந்தவர்கள் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாக தங்கள் அறிவியக்கத்தை, படைப்பியக்த்தைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர். ஒரு சாரார் சிங்கள எதிர்ப்பு மற்றும் அமைதி வேண்டி தங்களின் நினைவுகளை மீட்டெடுக்கின்றனர். இன்னொரு சாரார் தமிழ் ஈழப் போராளிகளின் செயல்பாடுகளையும், சாதிய மேட்டிமைகளையும் கண்டித்தே தங்கள் படைப்பு மற்றும் அறிவியக்கத்தை வளர்த்திருக்கின்றனர். இந்தப் பெரும் பிரிவில் சேரன், பா. அகிலன் போன்றவர்கள் முந்தையதையும், ஷோபா சக்தி, கலாமோகன், கற்சுறா போன்ற `எக்சில்' குழுவைச் சேர்ந்தவர்கள் பிந்தையதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஒளி அச்சுக்கோர்வை, அல்லது கிராபிக்ஸ் பயன்படுத்திய பிறகு கவிதைக்குக் கீழே ஆனி, ஆவணி என்று 'தமிழ்' மாதங்களின் பெயர் இடப்படும் கருத்தாக்கம் என்னவென்று நமக்கு புரியவில்லை.
பொதுவாக ஊரைவிட்டு, நாட்டைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி பின் மீண்டும் நினைவகத்துள் அதை மறு நினைவு படுத்துதல் என்பது அந்தந்த தருண நிகழ்வுகளின் மறுகற்பனை செய்யப்பட்ட பதிவுகளாகத்தான் இருக்கும். இந்த துரதிஷ்டம் அதாவது Emotions recollected in Tranquility என்ற டி.எஸ்.எலியட் கூறும் படைப்பு அனுபவத்திற்கும், உண்மையாக ஒருவன் அதை அனுபவிக்கும் தருணத்திற்கும், காத தூரம் அல்லது பேரியடைவெளி உண்டு. உண்மையில் இந்த `இடைவெளி' தான் படைப்பின் உந்து சக்தி. இதைத்தியானம் செய்யும் கவிஞன் ஒரு `எதிர்-ரொமான்டிக்' தளத்திலேயே செயல்படுவான். ஆனால் பா. அகிலனின் கவிதைகள் ரொமாண்டிக் தன்மைகளுடனேயே தேங்கிவிடுகிறது.
பதுங்கு குழி பற்றிய பயங்கர அனுபவங்களினூடே கூட சிறு ரொமாண்டிசிசம் தலைதூக்குகிறது. உதாரணமாக "பதுங்கு குழி நாட்கள் - III" என்ற கவிதையில் `நிர்மலவானம்' என்ற வரியும் - "பதுங்கு .IV" என்ற கவிதையில் "குருதியோலம்" கேட்கும் போதே "குருவிச் செட்டைகளும், பூவின் மென் இதழ்களும் வீழ்ந்தனவாம்" என்ற வரியும், மனித ஓலத்தைத் தாண்டிய ரொமாண்டிக் போலித்தனங்கள் நிறைந்த கற்பனையாகவே இருக்கிறது. உண்மையில் பதுங்கு குழி அனுபவங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? அனுபவத்தின் எல்லையற்றதன்மை' என்றெல்லாம் பேசத் தெரிந்த பா. அகிலன் வார்த்தையிலேயே எல்லா உணர்வுகளையும், அனுபவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கை கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
அனுபவம் அது பயங்கர அனுபவமோ அல்லது சாதாரண அனுபவமோ அதன் நடப்பின் இயல்பிலேயே படைப்புத்தளமும் அமைய வேண்டும். ஆனால் பா. அகிலன் `சொற்களின் யாத்திரை' அல்ல வார்த்தைகளின் பூஜிய எல்லைகளுக்குள் சிக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. பக்கம் 20ல் உள்ள `கிராமங்களின் மீதொரு பாடல்' என்ற கவிதையில் முதல்பகுதியில் `எனக்குத் தெரியாது' என ஆரம்பித்து ரொமாண்டிக் உணர்வகளும், பகுதி இரண்டில் அறிந்த கிராமங்கள் என்று நினைவு ஏக்கங்களும் வருகிறது. அதுவரை கவிதை பரவாயில்லை என்று தோன்றும்போதே பகுதி-மூன்று `ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் ஒரு நாள் சூரியன் எழுந்து புலர்ந்ததாம்.' என வரும் அதீத நம்பிக்கை வாழ்க்கைக்கு தேவை. ஆனால் கவிதைக்குத் தேவையில்லை அதனாலேயே அது சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.
எல்லோருமே அவரவர்களின் ஆதி-புரதானங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களே, பயங்கர அனுபவங்கள் நினைவுபடுத்தும் புராதனம் உன்னதப்புராதனம், அதுவல்லாமல் சாதாரண அந்நியமாதல் அனுபவங்கள் கிளப்பும் புராதன நினைவு அவ்வளவு உன்னதமல்ல என்றெல்லாம் கூறமுடியாது. அவரவர்களுக்கான பயங்கரங்களும், அவரவர்க்கான ரொமாண்டிசிசமும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் அதுஎவ்வாறு வெளிப்பாட்டு தளத்தில் கலையாகவோ இலக்கியமாகவோ பரிணமிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் மதிப்பீடு சார்ந்த நிலைப்பாடுகளும் ஏற்படும்.
கிராபிக்ஸ் - ஜிம்மிக்ஸ் செய்வதில் செலுத்திய நாட்டத்தை பா. அகிலன் கூடுதலாக கவிதைகளில் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நமக்கு ஏற்படும் உணர்வு நியாயானதே.
வெங்கட் சாமிநாதனின் சிறிய முன்னுரை மிகவும் வழக்கமான பழகிப் போன ஒன்றுதான் அதை யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம். பா. அகிலனின் 'பின்னுரை' வாசிக்க நன்றாக இருக்கும் நடையாகும். அதே இயல்பிலேயே கவிதைகளும் எழுதலாம். அனுபவங்களைப் பற்றி சிந்திக்கும்போது விஷயத்தில்தான் அதன் ஆழம் இருக்க வேண்டுமே தவிர யோசித்து யோசித்து வார்த்தைகளைப் போடுவதில் என்னாளும் கவிதானுபவம் நமக்குக் கிடைக்காது.
நன்றி:வெப் உலகம்
தமிழà¯à®®à®£à®®à¯ தளதà¯à®¤à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®ªà¯ பதிவ௠மதிபà¯à®ªà®¿à® நà®à¯à®à®¤à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®à¯à®à¯à®à¯à®à®³à¯:
à®à®¤à¯ தறà¯à®ªà¯à®¤à¯à®¯ நிலவரமà¯