Thursday, February 24, 2005

வர்ணங்கள் கரைந்த வெளிஆசிரியர்:தா.பாலகணேசன்
வகை:கவிதைத் தொகுப்பு
விலை:60.00(இந்திய ரூபா)
வெளியீடு:தமிழியல்-காலச்சுவடு
காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

தேசங்களின் எல்லைகள் தகர்ந்து,விரிந்து அலை மோதிக் கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்படக்ற்கு தா.பாலகணேசனின் கவிதைகள் உதவும்.

குறிப்பாக ஈழத்தின் போர்ச்சூழலையும்,புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம் பெயர்ந்தோருக்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்பு துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.
(நன்றி-காலச்சுவடு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Sunday, February 20, 2005

பச்சைவயல் கனவு

.

ஆசிரியர்:தாமரைச்செல்வி
வகை:நாவல்
பக்கம்:304
விலை:ரூ.250(இலங்கை ரூபா)
வெளியீடு:சுப்ரம் பிரசுராலயம், இலக்.77, குமரபுரம், பரந்தன்.

"நிமிர்ந்து எழுந்ததும் சரிந்து வீழ்ந்ததும் மீண்டும் எழ முயற்சிப்பதுமான வாழ்வு எங்களுக்கானது. எங்களின் வாழ்வுதான் இந்நாவலில் விரிந்து கிடக்கிறது" என்று கூறும், நாடறிந்த எழுத்தாளரின் எட்டாவது நூல்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Saturday, February 19, 2005

மீண்டும் வரும் நாட்கள்ஆசிரியர்:மு.புஷ்பராஜன்
விலை:60.00 (இந்திய ரூபா)
வெளியீடு:தமிழியல்-காலச்சுவடு
காலச்சுவடு பதிப்பகம்,9/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

இவை நகரமும் இல்லாது கிராமமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் திகழும் குருநகர் என்னும் கடலோரத்தைச் சுற்றிக் கவியும் கவிதைகள்.

வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வியாபித்துவரும் இராணுவப் பயங்கரவாதத்தை வெளிக்காட்டி மௌனித்து நகரும் கவிதைகள்.

தன் சொந்த மண்ணிலே தான் வாழ்ந்த காலங்களை,துயரும் மகிழ்வும் தரும் அக்காலங்களை,ஒருவகை nostalgic தன்மையோடு மீட்டுப் பார்ப்பன போன்ற கவிதைகள்.தன் ஆத்மார்த்த பார்வையைப் படரவிட்டு அவற்றின் ஒளியில் தன் விடுதலை எழுச்சிக்குப் பலம் தேடும் கவிதைகள்.

இந்நான்கு வகைக் கவிதைகளின் சங்கமிப்பே புஷ்பராஜனின் இந்தக் கவிதைத் தொகுப்பு.
(நன்றி-காலச்சுவடு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Wednesday, February 16, 2005

பிணம் செய்யும் தேசம்ஆசிரியர்:இளைய அப்துல்லாஹ்(எம்.என்.எம்.அனஸ்)
வகை:கவிதைத் தொகுப்பு
விலை:125.00(இந்திய ரூபா)
வெளியீடு:உயிர்மை,சென்னை.இந்தியா.

லண்டன் தீபம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகத் திகழும் எம்.என்.எம். அனல் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலப் பரிச்சயம் கொண்டவர். இளைய அப்துல்லாஹ், மானுட புத்ரன், ஹரீரா அனஸ் ஆகிய புனைபெயர்களில் இவர் இலங்கையின் இலக்கிய தொகுதிக்கு வளம் சேர்த்திருக்கிறார். 'எங்கள் தாயகமும் வடக்கே' என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை (ஒலிப்பேழை) ஈழத்துக் கவிதை உலகிலும் அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

புலம் பெயர் சஞ்சிகைகளில் தனித்துவமிக்க இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.(உயிர்மை)
நன்றி:காமதேனு

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Saturday, February 12, 2005

தூவானம்
ஆசிரியர் :அ. யேசுராசா
வகை :பத்தி எழுத்துக்களின் தொகுப்பு
வெளியீடு :மூன்றாவது பதிப்பகம்
பக்கங்கள் :88
விலை :ரூ.120.00 (−லங்கை விலை)

ஈழத்துத் தமிழ்ச் சுழலில் 1970களுக்குப் பின்னர் கவனிப்புக்குரிய தாக்கம் நிறைந்த ஒருவராக வெளிப்பட்டவர் அ. யேசுராசா. கவிதை, சிறுகதை விமரிசனம், பத்திரிகையாசிரியர் என பன்முக தளங்களில் இயங்கியவர்.

திசை என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்தவர். அப்போது திசையில் கலை இலக்கியத்துறை சார்ந்த பத்தியன்றைத் தொடர்ந்து எழுதி வந்தார். அது தூவானம் என்னும் பெயரில் வெளிவந்தது.

நீலாம்பரன் என்னும் புனைபெயரில் திரைப்படம், ஓவியம், கவிதை, சிற்றிதழ், கலாசார நடவடிக்கைகள் என பலவற்றைத் தொடுவதாக அந்தப் 'பத்தி' எழுத்துக்கள் அமைந்திருந்தன.

தற்போது இந்த பத்தி எழுத்துக்களைத் தொகுத்து 'தூவானம்' என்னும் தலைப்பில் மூன்றாவது பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சூழலுக்கு இது போன்ற நூல்களின் வரவு புதிது. குறிப்பாக பத்திரிகையியல் சார்ந்த வளர்ச்சிப் பரிமாணங்களைஅதன் காத்திரத்தன்மைகளை கோடிட்டுக் காட்டவும் இந்நூல் உதவியாக ருக்கும்.(ஆறந்திணை)

நன்றி:ஆறாந்திணை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

Wednesday, February 09, 2005

அ.முத்துலிங்கம் கதைகள்ஆசிரியர்:அ.முத்துலிங்கம்
விலை:350.00(இந்திய ரூபா)
வெளியீடு:தமிழினி,தமிழ்நாடு.இந்தியா

கனடாவில் வதியும் ஈழத்தைச் சேர்ந்த அ.முத்துலிங்கம் அவர்களுடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு.

நூலின் முன்னுரை:( நன்றி: பதிவுகள்)

அ.முத்துலிங்கத்தின் கதைகள்!
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்!
- க. மோகனரங்கன் -

அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சம் இருளை விரட்ட முயன்று தோற்று, மண்சுவரின் மீது விநோதமான வடிவங்களில் நிழல்களை வீழ்த்தியிருக்கும். ஆற்று நீரில் தினமும் நனைத்து உலர்த்திய பழுப்பு வேட்டியின் தலைப்பில் முகத்தை புதைத்தபடி கண்கள் மூடிக் கேட்டுக் கொண்டிருப்பேன். தாத்தாவின் கதை ஒவ்வொன்றும் 'ஒரே ஒரு ஊரில்...' என்றுதான் தொடங்கும். முதிராத என் சிறுதலையினுள் கொப்பளித்து நுரைக்கும் கற்பனைகளினூடாக மெல்ல விரியும், நான் முன்னறிந்திராத ஒலிகள் நிறங்கள் மற்றும் வாசனைகள் கூடி உருவாகிய அந்த விசித்திர உலகம். தாமதித்து வரும் உறக்கம், மறு நாளுக்காக அதை சுருதுடியெடுத்து பத்திரப்படுத்தி வைக்கும். காதுகளை விடவும் கண்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருபவனாக நான் வளரத் தொடங்குகையில் தாத்தாவின் கரகரப்பான குரலோடு அந்த மாய உலகமும் என் புலன்களின் ஆழத்துள் எங்கோ உறைந்து போய்விட்டது.

எனது குறிக்கோளற்ற, சோம்பலான வாசிப்புப் பழக்கத்தின் வழியாக நான் கடந்துபோக நேரிடுகிற, புனைவின் விளைவான பிரத்யேகமான அடையாளங்கள் கொண்ட ஒவ்வொரு ஊரிலும், என்னையறியாமலேயே நான் தேடிக் கொண்டிருந்தது, சிறுபிராயத்து நினைவில் இன்னமும் மிதந்து கொண்டிருக்கும் அந்தக் கற்பனையூரின் சாயல்களைத்தான் போலிருக்கிறது. வாசிப்பு என்பது ஓர் அலைதல். உடலால் நாம் ஒருபோதும் நிறைவு செய்துவிடமுடியாத அலைச்சலை ஆத்மாவால் நிகழ்த்திக் கொள்ளும் பயணம். அங்கே நாம் எப்போதுமே கண்டடையமுடியாத ஒப்ன்றை தேடுகிறோம் என்பதனாலேயே அதற்கு முடிவுமில்லை. என்னுடைய அந்த இனம் புரியாத தேடுதலை பெருமளவுக்கு நிறைவு செய்பவையாக முத்துலிங்கத்தின் கதைகள் இருக்கின்றன என்பதே அவற்றின்மீதான என் ஈர்ப்பிற்கு முதல் காரணமாகிறது.

பல கடல்களையும் கண்டங்களையும் கடந்த பிறகு அப்பால் தோன்றுகின்றன அவர் நமக்குக் காட்டும் கிராமங்களும், நகரங்களும். விரைவுப் புகைவண்டி ஒன்றில் பயணிக்கையில் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் சாளரக் காட்சிகள் போல, அவ்வூர்கள் நமக்கு தெரியாத புவியியல், தட்பவெப்ப, பண்பாட்டுப் புலத்திருந்து நம்முன் எழுகின்றன. சுற்றி வர பார்த்தபடி மேலே நகரும் ஒரு விடுமுறைக்கால யாத்ரீகனுடைய மனோ நிலையில் இருந்து காணும்போது, இக்கதைவழி மனிதர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் முதலியன நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக , நமது பிரக்ஞையின் சமநிலைகளை சீண்டுவனவாக , அதனாலேயே ஒரு நூதனத்தைக் கொண்டிருப்பனவாகத் தோன்றும். ஆனால் இது மேலெழுந்தவாரியான தோற்றமே. அதனடியில் இந்த நூதனத்திற்கும் மேலானதொரு நோக்கம் அவற்றையெல்லாம் ஊடுருவி ஒருங்கே கோர்த்து நிற்பதைக் காணலாம்.

மேலும், ஓரிடத்தில் நிரந்தரமாய் வசிப்பவர்களினாலோ அல்லது அவ்விடத்திற்கு அக்கம் பக்கமிருந்து வழக்கமாக வந்து போகிறவர்களினாலோ காண இயலாத அழகு ஒன்றினை, திசைகள் ஏதுமற்று திரியும் ஒரு தேசாந்திரியால் அங்கே காணமுடியும். ஏனெனில் அவனுடைய இடையறாத யாத்திரிரையின் போக்கில் தோன்றிமறையும் காட்சிகளின் வரிசை குவியும் ஆரப்புள்ளியில் நிலைத்திருக்கும் மாறாததொரு மையத்தை அவன் மாத்திரமே அறிவான். ஏனெனில் அவன் அங்கேயுள்ளவனல்ல. அங்கே உள்ளவர்கள் அல்லாதவர்களுக்குக் காட்டுவதற்கென்றே ஒவ்வொரு ஊரும் தன் முகமொன்றை சேமித்துவைத்துள்ளது. மனித அறிதல்களின் சாரமான அத்தகையதொரு மையத்தை தொட முயலுபவையே இத்தொகுப்பிலிருக்கும் அநேகக் கதைகள் உதாரணமாக இவருடைய ஒரு கதாபாத்திரம் தன்னுடன் வசிக்கின்ற பிறிதொரு நாட்டவனை நமக்கு அறிமுகப்படுத்தும் விதமாகக் கூறிகிறான். 'அவன் பெயர் உச்சரிக்க முடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும் கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடதுகால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால் வலதுகால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான்' (கொழுத்தாடு பிடிப்பேன்). ஒரு அயல்தேசத்தவன் என்பதை எளிதாக சுட்டுவதற்கு உருவம், நிறம், உடைகள் என எத்தனையோ இருக்க அவன் மொழிபற்றிய ஒரு குறிப்பை தருவதற்கு வேறு முகாந்திரம் இருக்குமோ என யோசித்தால், இக்கூற்றை இங்கே தருபவன் அந்நியநாட்டுச் சிறையன்றில் அடைபட்டிருப்பவன். தன் சொந்தமொழியை பேசிக் கேட்கவோ, கண்ணால் காணவோ எவ்விதவழியுமற்ற தனிமையில் நெடுங்காலமாக வதையுறுபவன் என்கையில், மொழி பற்றி அவன் குறிப்பிடுவது வெறும் தகவலுக்காக யதேச்சையாய் முன் வைக்கப்பட்ட ஒன்று அன்று என்பது புரியும்.

தனித்தன்மையுடைய புறஅடையாளங்கள் மழுங்கடிக்கப்பட்டு அகத்தின் பிரதிபலிப்புகளாகவே பெரிதும் எஞ்சும் தமிழ்சிறுகதைகளின் நிலக்காட்சிகளோடு ஒப்பிடுகையில் இலங்கை, இந்தியா, சுவீடன், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ன்டான், ஸியாராலியோன், பாகிஸ்தான் என விரியும் முத்துலிங்கத்தின் கதைப்புலங்கள் நமக்கு அளிக்கிற ஆசுவாசமும், புத்துணர்வும் சாமானியமானதல்ல். பூகோள ரீதியாக இடத்திற்கிடம் மாறுபடும் மொழி, இனம், நிறம், உணவுப் பழக்கங்கள், சடங்குகள், சமய வழிபாடுகள் போன்ற இயல்பான வேறுபாடுகளினால் உருவாகும் அனுபவங்களின் முரண் தன்மையை தன் கதைகளில் மிகுந்த ஆர்வத்தோடு பதிவு செய்கிறார். அதே சமயத்தில் அவற்றை தன்னுடைய சொந்த மதிப்பீடுகளுக்குட்படுத்தி சரி, தவறு என தீர்ப்பு வழங்காமலிருக்கும் விவேகமும் அவரிடமிருக்கும். தான் எதிர்கொள்ள நேரிடுகின்ற எத்தருணத்தையும் விருப்பு வெறுப்பின்றி வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து காண்கிற முதிர்ந்ததொரு வாழ்க்கை நோக்கிலிருந்தே அத்தகைய விவேகம் ஒருவருக்கு கூடும்.

தான் பிறந்து வளர்ந்த சூழலின் ஒழுக்கநெறிகளும் பழக்கவழக்கங்களுமே புவியில் மிகச்சிறந்தவை, அல்லது 'இயல்பானவை' என்றுதான் நாம் ஒவ்வொருவரும் இயல்பாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதை அளவுகோலாகக் கொண்டே மற்ற பண்பாடுகளில் உள்ள 'விசித்திரங்களை' அளவிடுகிறோம். கறுப்பு மாட்டுக்கும் சிவப்பு மாட்டுக்கும் வேறுவேறு சொற்கள் புழங்கும் விசித்திரம் நம்மை தாக்கும்போது 'நின்றுகொண்டே இருக்கும் ' நிலையும் ' போய்க்கொண்டே இருக்கும் ' நிலையும் சாத்தியமான தமிழின் விசித்திரம் நம்மை தாக்குவது இல்லை. சொல்லப்போனால் இத்தகைவ சுயமைய அளவுகோலில் இருந்தே 'மானுடவியல்' என்ற அறிவுத்துறையே உருவாகியிருப்பதாக படுகிறது. ஆகவே ஒரு சிறந்த படைப்பாளியின் நோக்கு ஒருபோதும் மானுடவியல் சார்ந்ததாக இருக்காது என்று படுகிறது. சொல்லபோனால் மானுடவியலை தலைகீழாக திருப்பியபடியே படைப்பு செயல்படுகிறது . அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தைவைத்து ஆப்ரிக்காவை மதிப்பிடுவது இல்லை மாறாக ஆப்ரிக்காவை வைத்து யாழ்ப்பாணத்தை மதிப்பிடுகிறார். ஒருபோதும் அவர் வேடிக்கைபார்ப்பது இல்லை. ஒருபோதும் தீர்ப்பு சொல்வது இல்லை. வெறுமே பார்க்கிறார் என்று முதலில் தோன்றும், அடுத்தகட்ட மனப்பயணத்தில் அவர் தம்மை அளவிடுவது தெரியும்.

இதிலுள்ள கதையன்றில், ஈழத்திலிருந்து கனடாவிற்கு திருமணமாகி வந்த ஒரு பெண் குறித்து அவளது கணவன் கூறுகிறான். 'இங்கு வந்த பிறகு அவள் குதிகால் வெடிப்பில் ஒட்டியிருந்த மண் முற்றிலும் மறைய சரியாக ஆறு மாதம் எடுத்தது. ஆனால் அவள் அடியோடு மாறுவதற்கு ஆறு வாரம் கூட எடுக்க வில்லை' ஆறு வாரத்தில் நடைஉடை பாவனைகள் மாறலாம் ஆறு மாதத்தில் காலில் ஒட்டியிருந்த மண்ணின் நிறம் மாறலாம். ஆனால் அறுபது வருடங்களானாலும் புறத்தே நிகழும் இந்த மாறதல்களுக்கெல்லாம் ஈடுகொடுத்தபடி தன்னளவில் மாறாது உள் நிற்கும் உணர்வுத் தொகுப்பு ஒன்றுண்டு. ஒருவன் பிறந்த மண்ணின் சுவையும், தாய் மொழியின் நினைவும், இவை இரண்டின் விளைவான கலாச்சார தாக்கமும் ஒருபோதும் அந்த உள் உணர்வுத் தொகுப்பினின்றும் மறைவதேயில்லை. அதுவே கனடாவில் கேயாஸ் தியரி பற்றி பேசும் நிறுவனத்தலைவரிடம் ஔவையின் 'வரப்புயர...' வை பற்றி குறிப்பிடவும் ஆப்பிரிக்க நகரமொன்றில் அணைகட்டுவது பற்றி முடிவெடுக்க நடைபெறும் ஐ.நா. பிரதிநிதிகளின் கூட்டத்தில் 'கச்சியப்பர் விதி' என்ற ஒன்றை சமயோசிதமாகப் பயன்படுத்தவும் அக்கதைகளின் பாத்திரங்களைத் தூண்டுகிறது. முன்னெப்போதும் நாம் அறியவந்திராபோதும் கூட இக்கதைகளின் அனுபவங்கள் நமக்கு மிகவும் அணுக்கமாகத் தோன்றுவது எதனாலென்றால், இவற்றை நமக்கு பரிச்சயப்படுத்துகின்ற கதைசொல்லியின் அந்த உள் உணர்வு மையம் மொழியின் வழியே நமக்கு மிக நெருங்கிய ஒன்றாக இருப்பதனாலேயே எனலாம்.

தழிழகத்தைப் பொறுத்தவரையிலும் 'முன் தோன்றிய மூத்தகுடி' என்ற வெற்றுப் பெருமிதம் ஒருபுறம், ஆங்கிலக் கல்வியினால் உருவான காலனிய மனோபாவம் மறுபுறம், இரண்டிற்கும் நடுவே நம் மொழியின் மரபிலக்கியங்கள் குறித்த ஆக்கபூர்வமானதொரு பார்வையை வளர்த்தெடுப்பதில் எங்கேயோ தவறிவிட்டோம்.காவரது பாணியிலே சொல்வதென்றால் 'குப்பையோடு குழந்தையையும் ' தூக்கிவீசிவிட்டோம் . அதன் காரணமான இழப்பு எத்தன்மையது என்பதை முத்துலிங்கத்தின் இந்தக் கதைகளை படிக்கும்போது உணரமுடிகிறது. ஒரு மென்பொருள் நிரலில் கண்டுபிடிக்க இயலாமல் ஔ¤ந்திருக்கும் ஒரு தவறைத் தேடி மாதக்கணக்கில் இராப்பகலாக அவஸ்தைப்படுகிற அந்நேரத்திலும், அந்தப் பனிபெய்யும் அந்நிய தேசத்தில், அவனுக்கு நினைவுக்கு வருவது கம்பனின் பாடல் ஒன்றுதான். இராவணனின் இதயத்தில் சீதை மீதானஇச்சை இன்னும் எங்கேனும் ஒளிந்திருக்கிறதா என தேடித் துளைக்கிற இராமனின் அம்பு பற்றியது அப்பாடல். கடைசியாக அந்நிரலின் பதினேழாம் பக்கம் நான்காவது வரியில் அந்தப் பிழையை அவன் காணும்போதுகூட அது 'ஸ்ரீரங்கநாதர் நீண்டு சயனிப்பது போல நீளவாட்டில் படுத்துக் கொண்டிருப்பதாகவே' அவனுக்கு காட்சியளிக்கிறது. ( ஒரு சாதம்). இது வெறுமே ஒப்பீடு அல்ல. சமத்காரமும் அல்ல. இது ஒருவகை சுய கண்டடைதல். தன் உள்ளே உள்ள ஒளீயையே உலகம் முழுக்க பிரதிபலித்துக் காணுதல் மட்டுமல்ல உலகை வைத்து தன் உள்ளே உள்ள ஒளியை அடையாளம் காணுதலும்கூட.

இத்தொகுதி முழுவதிலுமே சாத்தியமானஇடங்களிலெல்லாம் மிக சகஜமாக எடுத்தாளப்படுகின்ற பழந்தமிழ்க் கவிதைவரிகள், புராண, இதிகாசத் தருணங்கள் போன்றவை இக்கதைகளுக்கு மேலதிகமானதொரு காலப் பரிமாணத்தை அளிப்பதாகவும், கலாச்சாரத்தின் உட்பொதிந்த நினைவை மீட்டுவதாகவும் அமைகிறது. ஆனால் இக்கதைகளைப் பொறுத்தவரை மேலதிகமான ஒரு தளமும் இதற்கு உள்ளது. இவை புலம்பெயர்ந்த நாடிழந்த ஒருவரின் கதைகள். அ.முத்துலிங்கத்தின் ஆக்கங்களில் எப்போதுமே இந்த ஏக்கம், தவிப்பு வெளிவருவது இல்லை [ விதிவிலக்கான கதை 'கறுப்பு அணில்'] ஆனால் அவரது எல்லா கதைகளிலும் அடிநாதமாக இந்த மனநிலை இருந்துகொண்டுமுள்ளது. புலம் பெயர்ந்து வசிப்பதால் அடையநேர்கின்ற இழப்புகள் அனைத்திற்குமான ஒரு வித ஈடுகட்டலாக முத்துலிங்கத்தின் கதைகளில் மொழியின் மீதான இம்மீள் பயணம் நிகழ்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. தேசம் என்றால் என்ன , மண் எனறால் என்ன என்று எண்ணத்தோன்றுகிறது. தேசத்தையும் மண்ணையும் ஒருவர் தன் மொழியில் சுமந்தலைய முடியுமா? யூதர்கள் இரண்டாயிரம் வருடம் தங்கள் நிலத்தை மொழியில் சுமந்துதான் உலகமெல்லாம் அலைந்தார்கள். மொழியில் மண்ணும் தேசமும் விதை வடிவில் உள்ளன போலும். நூற்றாண்டுகள் தாண்டிய பிறகும், கானான் மலைகளே தேய்ந்தபிறகும் கூட, மொழியில் கருவடிவில் இருந்த அந்த தேசமும் அந்த மண்ணும் அழியவில்லை . அவ்விதைகளை நட்டு தங்கள் தேசத்தை புதிதாக உருவாக்கினர். தங்கள் மண்ணை மீட்டெடுத்தனர். அ.முத்துலிங்கத்தின் கதைகள் கலஹாரிப் பாலைவனத்து செம்மணல் போல . மணல்பருக்களுக்குச்சமானமாக விதைகள் கொண்டவை. உலர்ந்து நீளுறக்கத்தில் மூழ்கிய விதைகள். ஒரு மழையில் அவை முளைத்து காடாக மாறமுடியும்.

எவ்வெவ்விதங்களிலெல்லாம் இப்புவி மீது வாழத் தகுதியற்றது மனித வாழ்க்கை என்பது பற்றிய விசாரங்களே, இன்றைக்கு எழுதப்படும் பெருமளவு நவீனப் புனைகதைகளின் ஆதார உந்துதலாக அமைந்திருக்கும் நிலையில், வாழ்வின் பிரகாசமான தருணங்களை முன்னிருத்துபவையாக, அச்சூழலிலும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை இழக்கச் சம்மதியாதவையாக அமைந்தவை இவருடைய கதைகள்.சுற்றி நிகழும் குரூரங்களைக் காணாமல் கண்களை மூடிக் கொண்டு விடுவதால் அல்ல, மனிதனின் கீழ்மைகள், அவனுடைய ஆழ்மனதின் இருண்ட பக்கங்கள், புரிகின்ற தீவினைகள் எதுவுமே அவனுடைய இயல்போ, நிரந்தர சுபாவமோ அல்ல எனும் ஆழந்த நம்பிக்கையினின்றும் பிறப்பதுவே இவருடைய வாழ்வு மீதான காதலும் அதன் உப விளைவான மென்னகையும். உணர்ச்சிகளின் சுழிப்பிற்கும் ஏதுவான சந்தர்ப்பங்களிலும் கூட அவற்றினுள் முழுவதுமாய் அமிழ்ந்து போய்விடாமல் எட்ட நின்று பார்க்கும்படியான ஒரு விலகலை அவரது மொழி பெற்றிருப்பது நுண்ணறிவின் பாற்பட்ட அந்நம்பிக்கையினாலேயே எனலாம் (எ.கா. தில்லையம்பலப் பிள்ளையார் கோவில், அம்மாவின் பாவாடை, கொழுத்தாடு பிடிப்பேன், அனுலா) வியப்பூட்டும் அம்சம் இது. பெருங்கனவுகள் நெய்யப்படும் சூழலில் படைப்புமனம் யதார்த்தத்தின் வெந்நிலம் கண்டு எரிகிறது. கனவுகள் எரிந்த வெந்நிலத்தில் அது குளிர்சோலை ஒன்றை கண்டடைகிறது . 'சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து' [சேரன்] எழுந்துவரும் ஒரு படைப்புக்குரலில் உள்ள இந்த நம்பிக்கையும் உற்சாகமும் படைப்புயக்கத்தின் வகுத்துவிட முடியாத தன்மையை, அதன் முடிவின்மையை , அதன் அச்சமூட்டும் மகத்துவத்தை நமக்குக் காட்டுகின்றன. அ.முத்துலிங்கத்தின் பாணியிலேயே சொல்வதென்றால் படைப்புமனநிலையின் இத்தன்மைக்கு கோடைகாலத்தில் குளிர்ச்சியுடனும் , குளிர்காலத்தில் இதழ்களுக்குள் பொதிந்துவைக்கப்பட்ட இதமான வெம்மையுடனும் இருக்கும் தாமரைப்பூவுக்கு தன் தலைவியை ஒப்பிடும் குறுந்தொகை கவிஞனையே மேற்கோளாக்கமுடியும்.

தமிழ்ச் சிறுகதைகளில் நாம் சாதாரணமாக சந்திக்கவியலாத ஆனால் முத்துலிங்கத்தின் கதைகளில் பிரித்து தனியே நோக்க முடியாதபடி வெகு சுபாவமாக இயைந்து காணப்படுகின்ற அபூர்வமான அம்சம் ஒன்று உள்ளது. ஏழுடன் வரைக்கும் எடையுள்ள ராதுசச ஆப்பிரிக்க யானை முதற்கொண்டு பதினேழு ஆண்டுகள் வரை பூமிக்குள் புதைந்து கிடக்கும் சிகாடா பூச்சி ஈறாக இவரது கதைகள் நெடுகிலும் சுயேச்சையாக உலவித் திரிகின்ற மனிதல்லாத பிற ஜீவராசிகளின் இருப்புதான் அவ்வம்சம். இந்தப் பரந்த உலகத்திற்கு மனிதர்களாகிய நாம் மட்டுமின்றி மரம், செடி, கொடிகள், விலங்குள், பறவைகள், புழு பூச்சிகள் என சகல உயிர்களும் சமமான பங்குதாரர்களே எனும் ஆழமான பிரக்ஞையும், இயற்கையின் 'உயிரிச்சமநிலை' என்பது குறித்த கரிசனமும் சாத்தியமான இடங்களிலெல்லாம் இக்கதைகளின் வழியே வௌ¤ப்படுவதைக் காண்கிறோம். சகலமும் நுகர்வு மயமாகிப் போய்விட்ட இன்றைய நிலையில் 'மனிதாபிமானம்' என்ற சொல்லே கட்டுப்படியாகாத ஒன்றாக ஒதுக்கிவைக்கப்படும் அவலகதிக்கு நடுவிலே முத்துலிங்கம் முன்னிறுத்த பிரயாசைப்படுமது 'ஜீவதயை' என்பதன் பெறுமானம் என்னவாக இருக்கும்? விஞ்ஞானிகளால் ஆய்வுக் கூடத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட சரித்திரத்திற்கும் முந்தைய காலகதுடத்து விநோத உயிர்ராசி ஒன்றின் அசந்தர்ப்பமான வருகையைப் போல இந்த அம்சம் மழுங்கிப் போய்விட்ட நம் நுண்ணுணர்வுகளை உறுத்துவதாகயிருக்கிறது. எவ்வளவுதான் உன்னதமான விஷயம் பற்றியதாக இருந்தாலும் அறிவுறுத்தல் அல்லது உபதேசம் என்பது நவீன் கதைகளுக்கு உகக்காத ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்நிலையிலுமே கூட, கதையின் போக்கில் அடுத்தடுத்த வரிகளை நோக்கி நகரமுடியாமல் நம்மை நிறுத்திவைக்கும் ஆற்றல் அவரது இத்தகைய விசாரங்களுக்கு இருக்கிறது என்பதே நம்மீதான அதன் பாதிப்பைச் சுட்டி நிற்பதாகிறது. காரணம் அவை பறவையின் சூட்டை தன்மீது கொண்ட முட்டைகள் போல ஆசிரியனின் அகக்கனிவின் வெம்மையை தன்னுள் கொண்டவையாக உள்ளன என்பதே.

இங்கே முத்துலிங்கம் கதைகளின் வடிவம் குறித்தும் சிலவற்றைக் கூறவேண்டும். அதீத வடிவப் பிரக்ஞையும், இறுகிய மொழிப் பிரயோகமும் கொண்ட இன்றை நவீனத்துவ பாணியிலான சிறுகதைகளின் மானசீக வரையறைகளைப் பொருட்படுத்தாது ததும்பியும், வழிந்தும் நிற்பவை இவருடைய கதைகள். வாய்மொழிக் கதைகளின் நேரடியான, விவரணைத்தன்மையுடைய மொழியும், எழுதி அச்சேற்றப்படும் கதைகளினுடைய காட்சித் தன்மை, குறிப்பு நுட்பம் ஆகியவையும் ஊடாடிக் கலந்தவொரு சுயேச்சையான வடிவத்தை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் சொல்ல வரும் விஷயத்தை மிச்சமின்றி முழுவதுமாக சொல்லிவிடவேண்டும் என்ற ஆவலும், ரசனைமிக்க விரிவான சித்தரிப்பும் கொண்டதாகக் காணப்படும் இவர் கதைகள் ( எ.கா- வையன்னா கானா) போகப் போக செறிவும், அக அடுக்குகளும், இறைச்சித் தன்மையும் கூடினவையாக மாறுவதைக் காணமுடிகிறது. (எ.கா- பீனிக்ஸ் பறவை, கறுப்பு அணில், ஐவேசு) அதே சமயத்தில் இவரது இயல்புக்கு அந்நியமான வௌ¤ப்பாட்டு உத்திகளை ஆசை பற்றி இவர் அறைய முயலுகையில் அவை வெற்றிகரமானவையாக அமையவில்லை என்பதையும் காணமுடிகிறது (எ.கா- செங்கல், கல்லறை, குந்தியின் தந்திரம்) தவிரவும், கதை சொல்பவர்கள் அனைவரிடமும் தென்படும் பலவீனம் ஒன்றுண்டு. அது சொல்லும் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து பாத்திரத்தின் அக ஓட்டத்திற்குள்ளாகவும் தன்னை நுழைத்துக் கொண்டுவிடுவது. முத்துலிங்கமும் அத்தகையதொரு அத்துமீறலை சிலவேளை அவரறியமலேயே நிகழ்த்துகிறார். ஆனால் இத்தகைய சிறுசிறு விஷயங்களையெல்லாம் பொருட்படுத்தி உற்றுநோக்காதபடிக்கு அவருடைய கதைகளின் அபாரமான வாசிப்புத்தன்மை நம்மை கதையின் போக்கில் கட்டி இழுத்துச் சென்றுவிடுகிறது.

இத்தொகுப்பில் 'ரி' என்று ஒற்றை எழுத்தை தலைப்பாகக் கொண்ட ஒரு கதை இருக்கிறது. அதில் இசையனுபவம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது 'இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று, அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு, இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை, இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் தனி ' இக்குறிப்பை முத்துலிங்கத்தின் கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கமுடியும் ஏனெனில் அதில் சுட்டப்பெறும் அந்த மயக்கம், அர்த்தம், சூட்சுமமம் மூன்றுமே பொதிந்திருக்கும் கதைகள் ஏராளமாக இத்தொகுப்பில் இருக்கின்றன. மலர்கள் செடிகளுக்கு மட்டுமே தங்களை சூடிக்கொள்ளும் உரிமையை அளிப்பவை என்கிறான் ஜென் கவிஞன். செடி மலர்களிலேயே தேன் இருக்கமுடியும். பறித்த கணம் முதல் மலர் சருகாக ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் தலைவியின் கூந்தலில் மலர் செடியிலிருப்பதைப்போனற ஒளியுடனும் இனிமையுடனும் இருக்கிறது என்கிறான் சங்கக் கவிஞன். அவளுக்குள் விரிந்திருக்கும் காதலின் புறச்சின்னமாக அம்மலர் இருக்கிறது என்பதனால் அது ஒரு போதும் தன் மணத்தையும் மதுவையும் இழக்க முடியாது. அனுபவங்களை பறிக்காமல் தொடுக்க இயலாது கதைசொல்லியால். தொடுத்தபின்பும் வாடாமல் அவை இருக்கவேண்டுமென்றால் அவை அவனது மாளாக்காதலின் புறச்சின்னங்களாக வேண்டும். முத்துலிங்கத்தின் மலர்களில் தேன் வற்றுவதேயில்லை

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்